search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்: இந்தியா-பாகிஸ்தான் மோதல்
    X

    கோப்பையுடன் 8 அணிகளின் கேப்டன்கள் போஸ் கொடுத்த காட்சி.

    ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்: இந்தியா-பாகிஸ்தான் மோதல்

    • ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டி 2004-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.
    • ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட்டில் இந்திய அணி 7 முறை சாம்பியனானது.

    தம்புல்லா:

    ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டி 2004-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் முதல் 4 போட்டி 50 ஓவர் அடிப்படையில் நடத்தப்பட்டது. அவை அனைத்திலும் இந்திய அணி கோப்பையை வென்றது. இதேபோல் 20 ஓவர் அடிப்படையில் நடந்த 4 போட்டிகளில் இந்தியா 3-ல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது. ஒரே ஒரு முறை (2018) மட்டும் வங்காளதேசம் கோப்பையை தனதாக்கியது. கடைசியாக 2022-ம் ஆண்டு தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி வங்காளதேசத்தை தோற்கடித்து மகுடம் சூடியது.

    இந்த நிலையில் 9-வது ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இலங்கையில் உள்ள தம்புல்லாவில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது.

    இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகமும், 'பி' பிரிவில் வங்காளதேசம், மலேசியா, இலங்கை, தாய்லாந்தும் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    தொடக்க நாளான இன்று 'ஏ' பிரிவில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இரவு 7 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் 7 முறை சாம்பியனான இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

    இந்திய அணியில் பேட்டிங்கில் ஸ்மிர்தி மந்தனா, ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும், பந்து வீச்சில் பூஜா வஸ்ட்ராகர், ராதா யாதவ், தீப்தி ஷர்மா, ஸ்ரேயாங்கா பட்டீலும் நல்ல நிலையில் உள்ளனர்.

    நிதா தர் தலைமையிலான பாகிஸ்தான் அணி சமீபத்தில் நடந்த வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தோல்வியை சந்தித்தது. அந்த தோல்வியை மறந்து வருகிற அக்டோபர் மாதம் நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பைக்கு முன்னதாக சரியான அணியை அடையாளம் காண இந்த போட்டியை பயன்படுத்தி கொள்ள முயற்சிக்கும்.

    ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 20 ஆட்டங்களில் ஆடி 17-ல் வெற்றி பெற்று வலுவாக காணப்படும் இந்திய அணி தனது ஆதிக்கத்தை தொடருவதுடன், போட்டி தொடரை வெற்றியுடன் தொடங்க தீவிரம் காட்டும். பாகிஸ்தான் முடிந்த வரை கடும் சவால் அளிக்க முயற்சிக்கும். இவ்விரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் இதுவரை 14 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 11-ல் இந்தியாவும், 3-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன.

    முன்னதாக பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் இந்து பர்மா தலைமையிலான நேபாள அணி, இஷா ஒஜா தலைமையிலான ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதுகிறது.

    இந்த ஆட்டங்களை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இலவசமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×