search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டெல்லி அணியுடன் நாளை மோதல்: ஹாட்ரிக் வெற்றி ஆர்வத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்
    X

    டெல்லி அணியுடன் நாளை மோதல்: ஹாட்ரிக் வெற்றி ஆர்வத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்

    • ஐ.பி.எல். டி20 தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சம பலத்துடன் திகழ்கிறது.

    விசாகப்பட்டினம்:

    17-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி கடந்த 22-ம் தேதி சென்னையில் தொடங்கியது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் உள்ளூர், வெளியூர் என தலா 14 ஆட்டங்களில் மோதவேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    நடப்பு சாம்பியனும், ஐ.பி.எல். கோப்பையை 5 முறை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வென்றது . கடந்த 26-ம் தேதி சென்னையில் நடைபெற்ற 2-வது போட்டி யில் குஜராத்தை 63 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்சை நாளை (31-ம் தேதி) எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

    டெல்லி அணியையும் வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெறும் ஆர்வத்தில் சி.எஸ்.கே. உள்ளது. முதல் 2 ஆட்டங்களிலும் உள்ளூரில் ஆடிய அந்த அணி தற்போது வெளி ஆடுகளத்தில் போட்டியைச் சந்திக்கிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சம பலத்துடன் திகழ்கிறது. பேட்டிங்கில் ஷிவம் துபே, ரச்சின் ரவீந்திரா, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரும், பந்து வீச்சில் முஸ்டாபிசுர் ரகுமான், தீபக் சாஹர் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    புதுமுக வீரர் சமீர் ரிஸ்வி மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அவரை முன்னதாகவே களம் இறக்கி வாய்ப்பு அளிக்கலாம்.

    ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் முதல் போட்டியில் பஞ்சாப்பிடமும் (4 விக்கெட்), 2-வது ஆட்டத்தில் ராஜஸ்தானிடமும் (12 ரன்) தோற்றது.

    முதல் வெற்றியைப் பெறும் வேட்கையில் அந்த அணி இருக்கிறது. முதல் 2 போட்டியிலும் டெல்லி அதிரடியாக ஆடவில்லை. அந்த அணியின் உள்ளூர் மைதானமாக விசாகப்பட்டினம் உள்ளது.

    இரு அணிகளும் ஐ.பி.எல். சீசன்களில் இதுவரை 29 முறை மோதியுள்ளன. இதில் சி.எஸ். கே. 19-ல், டெல்லி 10-ல் வெற்றி பெற்றுள்ளன.

    முன்னதாக நாளை மாலை 3.30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே 2-வது வெற்றிக்காக காத்திருக்கின்றன.

    Next Story
    ×