search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ராஜ்கோட் டெஸ்ட் - 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 207 ரன்கள் குவிப்பு
    X

    ராஜ்கோட் டெஸ்ட் - 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 207 ரன்கள் குவிப்பு

    • முதல் இன்னிங்ஸ்-இல் ஜடேஜா 112 ரன்களை குவித்தார்.
    • இங்கிலாந்து சார்பில் டக்கெட் 133 ரன்களை குவித்துள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் சதம் விளாசினர். அறிமுக போட்டியில் சர்பராஸ் கான் அரைசதம் அடித்தார். இதனால் முதல்நாள் ஆட்ட முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்தது. ஜடேஜா 110 ரன்னுடனும், குல்தீப் யாதவ் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.


    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜடேஜா மேலும் இரண்டு ரன் எடுத்து 112 ரன்னில் ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவ் 4 ரன்னில் வெளியேறினார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய அஸ்வின் மற்றும் ஜூரேல் ஜோடி சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தது. அஸ்வின் 37 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இவருடன் ஆடிய ஜூரேல் 46 ரன்களில் ஆட்டமிழக்க பும்ரா 26 ரன்களையும், சிராஜ் 3 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸ்-இல் 445 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 4 விக்கெட்டுகளையும், ரேஹன் அகமது 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.


    இதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி துவக்கம் முதலே சிறப்பாக ஆடி ரன்களை குவித்து வந்தது. அந்த அணியின் துவக்க வீரர் பென் டக்கெட் 118 பந்துகளில் 133 ரன்களை குவித்துள்ளார். இவருடன் களமிறங்கிய கிராவ்லி 15 ரன்களையும், போப் 39 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஜோ ரூட் 9 ரன்களை சேர்த்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.

    இதன் மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்களை குவித்துள்ளது. இந்தியா சார்பில் அஸ்வின் மற்றும் சிராஜ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் தனது 500-வது விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.

    Next Story
    ×