search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    3-வது இடத்திற்கு முன்னேறப் போவது யார்? மும்பை- பெங்களூரு அணிகள் இன்று மோதல்
    X

    3-வது இடத்திற்கு முன்னேறப் போவது யார்? மும்பை- பெங்களூரு அணிகள் இன்று மோதல்

    • மும்பை இந்தியன்ஸ் இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 5 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் இருக்கிறது.
    • ரோகித் சர்மாவின் தடுமாற்றம் அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

    மும்பை:

    ஐபிஎல் தொடர் பரபரப்பான கட்டத்தை நெருங்கி வருகிறது. இனி நடைபெறும் ஒவ்வொரு போட்டியும் முக்கியமான ஆட்டமாக பார்க்கப்படுகிறது. பிளே ஆப் சுற்றுக்குள் முன்னேறுவதற்கு இதுவரை அனைத்து அணிகளுக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதனால், வெற்றிக்காக அனைத்து அணிகளும் போராடும்.

    இந்த சூழலில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.

    5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 5 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் இருக்கிறது. இனி ஒவ்வொரு ஆட்டமும் அந்த அணிக்கு முக்கியமானது. எஞ்சிய 4 லீக்கிலும் வெற்றி பெற்றால் தான் சிக்கலின்றி அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும். முந்தைய சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் 139 ரன் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவிய மும்பை அணி சொந்த ஊரில் வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியுடன் களம் காணுகிறது.

    கேப்டன் ரோகித் சர்மாவின் தடுமாற்றம் அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. கடைசி 4 ஆட்டங்களில் ஒற்றை இலக்கத்தை கூட தாண்டவில்லை. இதில் இரு 'டக்-அவுட்'டும் அடங்கும். பேட்டிங்குக்கு உகந்த வான்கடே மைதானத்தில் உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் அவர் மீண்டும் ரன்வேட்டை நடத்துவாரா என்பதே ரசிகர்களின் ஆவலாகும். பந்துவீச்சை பொறுத்தவரை மூத்த சுழற்பந்து வீச்சாளர் பியுஷ் சாவ்லாவை (17 விக்கெட்) தவிர மற்றவர்களின் பவுலிங் மெச்சும்படி இல்லை.

    பெங்களூரு அணியும் இதே நிலையில் தான் (5 வெற்றி, 5 தோல்வி) இருக்கிறது. விராட் கோலி (6 அரைசதத்துடன் 419 ரன்), பாப் டு பிளிஸ்சிஸ் (5 அரைசதத்துடன் 511 ரன்) தொடர்ந்து சீரான பேட்டிங்கை வெளிப்படுத்தினாலும், மிடில் வரிசை ஒருசேர கைகொடுப்பதில்லை. குறிப்பாக 'அதிரடிபுயல்' மேக்ஸ்வெல் ஒரு சில ஆட்டங்களில் மட்டுமே ஜொலித்துள்ளார்.

    கோலி கூட டெல்லிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 46 பந்துகளில் 55 ரன்கள் எடுத்த போது, மந்தமான பேட்டிங் என்று விமர்சனத்திற்குள்ளானது. நல்ல தொடக்கம் கிடைத்தால் கோலி தனது உத்வேகத்தை எந்த காரணத்தை கொண்டும் குறைக்க கூடாது என்று முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இதனால் இந்த ஆட்டத்தில் அவர் துரிதமான ரன் குவிப்பில் கவனம் செலுத்துவார் என்று நம்பலாம்.

    பந்து வீச்சில் எதிர்பார்க்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்காவிடம் இருந்து (7 ஆட்டத்தில் 7 விக்கெட்) இன்னும் முழுமையான சுழல் ஜாலத்தை பார்க்க முடியவில்லை. எனவே ஒருங்கிணைந்து ஆடினால் மும்பையை முடக்கலாம். ஏற்கனவே தொடக்க ஆட்டத்தில் மும்பை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு பந்தாடியது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×