search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்குமா பெங்களூரு? ஐதராபாத் அணியுடன் இன்று மோதல்
    X

    அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்குமா பெங்களூரு? ஐதராபாத் அணியுடன் இன்று மோதல்

    • பெங்களூரு அணி எஞ்சிய 2 லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்றால் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) நுழையலாம்.
    • ஒன்றில் தோற்றால் அடுத்த அணிகளின் முடிவுகள் சாதகமாக அமைந்தால் தான் தகுதி பெற முடியும்.

    ஐதராபாத்:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளும், 'பி' பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோத வேண்டும். இதன்படி ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் விளையாடும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

    விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கும் ஐ.பி.எல். திருவிழாவில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்று இருப்பதுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. எஞ்சிய 3 இடத்துக்கு கடும் போட்டி நிலவுகிறது.

    இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் 65-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    மார்க்ரம் தலைமையிலான ஐதராபாத் அணி 12 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 8 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் பின்தங்கி இருப்பதுடன் அடுத்த சுற்று வாய்ப்பையும் இழந்து விட்டது. அந்த அணிக்கு எஞ்சி இருக்கும் 2 லீக் ஆட்டங்களில் உள்ளூரில் நடைபெறும் கடைசி ஆட்டம் இதுவாகும். பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு அணி 12 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று இருக்கிறது.

    கடந்த ஆட்டத்தில் ராஜஸ்தானை 59 ரன்னில் சுருட்டி 112 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதால் ரன்-ரேட்டில் (+0.166) வலுவான நிலையை எட்டிய பெங்களூரு அணி எஞ்சிய 2 லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்றால் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) நுழையலாம்.

    ஒன்றில் தோற்றால் அடுத்த அணிகளின் முடிவுகள் சாதகமாக அமைந்தால் தான் தகுதி பெற முடியும். எனவே அந்த அணிக்கு இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இருக்கிறது. இருப்பினும் வலுவான பெங்களூரு அணியின் சவாலை சமாளிக்க வேண்டும் என்றால் ஐதராபாத் அணி எல்லா துறையிலும் சிறந்து விளங்கினால் மட்டுமே சாத்தியமாகும் என்பதில் சந்தேகமில்லை.

    ஐ.பி.எல். தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை 22 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 12 ஆட்டங்களில் ஐதராபாத்தும், 9 ஆட்டங்களில் பெங்களூருவும் வெற்றி பெற்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

    Next Story
    ×