search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சென்னை - ராஜஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை
    X

    ரியான் பராக் சென்னையில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.

    சென்னை - ராஜஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை

    • சென்னை அணி இதுவரை 12 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது.
    • சென்னை 15 முறையும், ராஜஸ்தான் 13 தடவையும் வென்று இருக்கின்றன.

    சென்னை:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், குறிப்பிட்ட 5 அணிக்கு எதிராக 2 முறையும், 4 அணிக்கு எதிராக ஒரு முறையும் என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    இந்த போட்டி தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் 61-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்-முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னையில் நடைபெறும் 7-வது மற்றும் கடைசி லீக் ஆட்டம் இதுவாகும்.

    சென்னை அணி இதுவரை 12 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி அடுத்த சுற்றுக்கு பிரச்சினையின்றி முன்னேற எஞ்சிய 2 ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும். ஆனால் ஒன்றில் மட்டும் வென்றால் ரன்-ரேட்டில் நல்ல நிலையில் இருப்பதுடன், மற்ற அணிகளின் முடிவும் சாதகமாக அமைய வேண்டியது அவசியமானதாகும்.

    சென்னை அணி ஆமதாபாத்தில் நேற்று முன்தினம் நடந்த தனது முந்தைய லீக் ஆட்டத்தில் 35 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்திடம் பணிந்தது. இதில் 232 ரன் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 196 ரன்னில் அடங்கியது. இந்த ஆட்டத்தில் பேட்டிங்கில் டேரில் மிட்செல் (63 ரன்), மொயீன் அலி (56 ரன்) தவிர வேறு யாரும் சோபிக்கவில்லை. ஒரு ரன்னில் ஏமாற்றம் அளித்த தொடக்க ஆட்டக்காரர்கள் ரஹானே, ரச்சின் ரவீந்திரா நிலைத்து நின்று நல்ல பங்களிப்பை அளிக்க வேண்டியது முக்கியமானதாகும். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (ஒரு சதம், 4 அரைசதம் உள்பட 541 ரன்), ஷிவம் துபே (371 ரன்) நல்ல நிலையில் உள்ளனர். கடந்த ஆட்டத்தில் துஷர் தேஷ்பாண்டே தவிர வேறு யாரும் விக்கெட் வீழ்த்தவில்லை. முஸ்தாபிஜூர் ரகுமான், பதிரானா விலகியதாலும், தீபக் சாஹர் காயத்தால் ஒதுங்கியதாலும் பந்து வீச்சில் ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு தீர்வு காண வேண்டியது அவசியமானதாகும்.

    ராஜஸ்தான் அணி 11 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்றை (பிளே-ஆப்) நெருங்கி விட்டது. இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பை அதிகாரபூர்வமாக உறுதி செய்து விடும். முதல் 9 ஆட்டங்களில் 8 வெற்றியை பெற்ற வலுவான அந்த அணி தனது கடைசி 2 ஆட்டங்களில் ஐதராபாத், டெல்லி அணிகளிடம் அடுத்தடுத்து போராடி வீழ்ந்தது.

    ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் கேப்டன் சஞ்சு சாம்சன் (5 அரைசதம் உள்பட 471 ரன்கள்), ரியான் பராக் (4 அரைசதம் உள்பட 436 ரன்), ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வாலும், பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், டிரென்ட் பவுல்ட், அவேஷ் கான், சந்தீப் ஷர்மா, அஸ்வினும் வலுசேர்க்கிறார்கள்.

    அடுத்த சுற்றுக்குள் நுழைய ராஜஸ்தான் அணியும், அடுத்த சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்த சென்னை அணியும் தீவிரமாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த மோதலில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. உள்ளூர் சூழல் சென்னை அணிக்கு அனுகூலமாக இருக்கும் என்றாலும் எல்லா வகையிலும் சிறப்பாக செயல்பட்டால் தான் ராஜஸ்தானை சாய்க்க முடியும். இவ்விரு அணிகளும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் சென்னை 15 முறையும், ராஜஸ்தான் 13 தடவையும் வென்று இருக்கின்றன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    சென்னை: ரச்சின் ரவீந்திரா, ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டேரில் மிட்செல், ஷிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, டோனி, மிட்செல் சான்ட்னெர் அல்லது சிமர்ஜீத் சிங், ஷர்துல் தாக்குர், துஷர் தேஷ்பாண்டே.

    ராஜஸ்தான்: ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், சுபம் துபே, டோனவன் பெரீரா, ரோமன் பவெல் அல்லது கேஷவ் மகராஜ், அஸ்வின், அவேஷ் கான் அல்லது யுஸ்வேந்திர சாஹல், டிரென்ட் பவுல்ட், சந்தீப் ஷர்மா.

    இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    Next Story
    ×