search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    கடைசி போட்டியும் மழையால் ரத்து: தொடரை வென்றது நியூசிலாந்து
    X

    கடைசி போட்டியும் மழையால் ரத்து: தொடரை வென்றது நியூசிலாந்து

    • வாஷிங்டன் சுந்தர் கடைசி வீரராக 51 ரன்னில் அவுட் ஆனார்.
    • தொடர் நாயகன் விருதை டாம் லாதம் தட்டிச் சென்றார்.

    கிறிஸ்ட்சர்ச்:

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

    இந்த ஆட்டத்தில் வெல்ல வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு உள்ளது. இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

    நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. நியூசிலாந்து வீரர்களின் அபாரமான பந்து வீச்சில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    ஸ்ரேயாஸ் அய்யர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் மட்டுமே நியூசிலாந்து பந்து வீச்சை தாக்கு பிடித்து ஆடினார்கள். ஸ்ரேயாஸ் அய்யர் 8 பவுண்டரியுடன் 49 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.

    வாஷிங்டன் சுந்தர் 62 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 50 ரன்னை தொட்டார்.

    இந்திய அணி 47.3 ஓவர்களில் 219 ரன்னில் ஆல் அவுட் ஆனது. வாஷிங்டன் சுந்தர் கடைசி வீரராக 51 ரன்னில் வெளியேறினார். நியூசிலாந்து தரப்பில் மில்னே, மிச்செல் தலா 3 விக்கெட்டும், சவுத்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி ஆடியது.

    பின் ஆலன்-கான்வே ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். தீபக் சாஹர் வீசிய ஆட்டத்தின் 10-வது ஓவரில் கான்வே 4 பவுண்டரி அடித்தார். 17-வது ஓவரில் தான் தொடக்க ஜோடி பிரிந்தது. ஆலன் 54 பந்தில் 57 ரன் (8 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து உம்ரான் மாலிக் பந்தில் ஆட்டம் இழந்தார்.

    அப்போது ஸ்கோர் 97 ஆக இருந்தது. அடுத்து வில்லியம்சன் களம் வந்தார். 18 ஓவர் முடிவடைந்த நிலையில் நியூசிலாந்து அணி 1 விக்கெட்டை இழந்து 104 ரன்கள் இருந்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் ரத்து செய்வதாக நடுவர்கள் அறிவித்தனர்.

    இதனால் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. தொடர் நாயகன் விருதை டாம் லாதம் தட்டிச் சென்றார்.

    Next Story
    ×