search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    நம்ப முடிகிறதா...! தென்ஆப்பிரிக்காவுக்கு கைக்கொடுத்த அதிர்ஷ்டம்
    X

    நம்ப முடிகிறதா...! தென்ஆப்பிரிக்காவுக்கு கைக்கொடுத்த அதிர்ஷ்டம்

    • 3 விக்கெட் கைவசம் இருந்த நிலையில் 21 ரன்கள் எடுக்க தென்ஆப்பிரிக்கா போராடியது
    • ஷம்ஸி- மகாராஜ் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 11 ரன்கள் எடுத்துக் கொடுத்தது

    உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தென்ஆப்பிரிக்கா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த உலகக் கோப்பையில் கடைசி வரை மிகவும் த்ரில் ஆக சென்ற போட்டிகளில் இதுதான் முதன்மையான போட்டி என்றால் மிகையாகாது.

    முதலில் விளையாடிய பாகிஸ்தான் 270 ரன்கள் குவித்தது. சென்னை ஆடுகளத்தில் 270 ரன்களை சேஸ் செய்ய கடினம் என்பதால் பாகிஸ்தான் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டது.

    ஆனால், தென்ஆப்பிரிக்காவின் தொடக்க வீரர் டெம்பா பவுமா 27 பந்தில் 28 ரன்கள், டி காக் 14 பந்தில் 24 ரன்கள் அடிக்க 9.5 ஓவரில் தென்ஆப்பிரிக்கா 2 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் சேர்த்தது.

    அதன்பின் மார்கிராம் அணியை வழி நடத்திச் சென்றார். சிறப்பாக விளையாடிய அவர் சதம் அடிப்பதுடன் அணியை வெற்றி பெற வைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மார்கிராம் 91 ரன்கள் எடுத்த நிலையில் 41-வது ஓவரின் 2-வது பந்தில் ஆட்டமிழந்தார்.

    அதன்பின் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த அணிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 3 விக்கெட்டுதான் இருந்தது. ஓவர்கள் அதிகமாக இருந்ததால் தட்டி தட்டி ரன்கள் சேர்த்தனர். இருந்த போதிலும் 260 ரன்கள் எடுப்பதற்குள் மேலும் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.

    இதனால் ஒரு விக்கெட் கைவசம் இருக்கும் நிலையில் 11 ரன்கள் தேவைப்பட்டது. ஷம்ஸி, மகாராஜ் ஆகியோர் களத்தில் நின்றனர். 46-வது ஓவரை ராஃப் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தை ஷம்ஸி எதிர்கொண்டார். அப்போது லெக்சைடு ஷம்ஸியை உரசிக் கொண்டு பந்து சென்றது. விக்கெட் கீப்பர் பந்தை பிடித்ததும் அப்பீல் செய்தார். ஆனால் நடுவர் வைடு என அறிவித்தார். பாகிஸ்தான் மேல்முறையீடு (Review) செய்ய வில்லை. ரீபிளேயில் வைடு இல்லை எனத் தெரிய வந்தது. இதனால் தென்ஆப்பிரிக்கா அணிக்கு ஒரு ரன் கிடைத்தது.

    இதே ஓவரின் கடைசி பந்தை ஷம்ஸி எதிர்கொண்டார். அப்போது பந்து காலில் பட்டதும், நடுவரிடம் அப்பீல் கேட்டனர். அவர் அவுட் கொடுக்கவில்லை. இதனால் மேல்முறையீடு (Review) செய்தனர். அப்போது பந்து லெக் ஸ்டம்பை தாக்கியது தெரியவந்தது. ஆனால் நடுவர் முடிவு என 3-வது நடுவர் அறிவித்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா பக்கம் அதிர்ஷ்ட காற்று வீசியது.

    அவுட்டாவதில் இருந்து ஷம்ஸி தப்பித்தார். தென்ஆப்பிரிக்காவும் தோல்வியில் இருந்து தப்பியது.

    அடுத்த ஓவரை இருவரும் சமாளித்து 3 ரன்கள் சேர்த்தனர். 47-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் நவாஸ் வீசினார். நவாஸ் லைக்சைடு பந்து வீச, மகாராஜ் சிறப்பாக விளையாடி பந்தை பவுண்டரிக்கு விரட்ட தென்ஆப்பிரிக்கா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கடந்த காலங்களில் மழை போன்ற காரணங்களால் தென்ஆப்பிரிக்காவின் வெற்றி பலமுறை பறிபோய் உள்ளது. இதனால் அந்த அணியை அதிர்ஷ்டம் இல்லாத அணி என்பார்கள். ஆனால், நேற்றைய போட்டியில் அதிர்ஷ்டம் கைக்கொடுத்ததால், தென்ஆப்பிரிக்கா வெற்றியை ருசித்தது. புள்ளிகள் பட்டியலில் முதல் இடமும் பிடித்தது.

    Next Story
    ×