search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இந்திய கேப்டன்களில் யாரும் படைக்காத சாதனை படைத்த ரோகித் சர்மா
    X

    இந்திய கேப்டன்களில் யாரும் படைக்காத சாதனை படைத்த ரோகித் சர்மா

    • சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
    • கங்குலி, எம்எஸ் டோனி, விராட் கோலி உட்பட வேறு எந்த இந்திய கேப்டனும் இந்த சாதனையை படைத்ததில்லை.

    ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்ற முக்கியமான சூப்பர் 4போட்டியில் பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. இந்த மிகப்பெரிய வெற்றியால் கூடுதல் ரன் ரேட்டை பெற்றுள்ள இந்தியா இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு அதிக அளவில் உறுதியாகியுள்ளது.

    முன்னதாக 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நடைபெற்ற கடைசி போட்டியில் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம். அந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையில் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற உலக சாதனையை இந்தியா படைத்தது.

    அந்த நிலையில் இந்த போட்டியில் 228 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் (228) வித்தியாசத்தில் மெகா வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது. இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் 2 வெவ்வேறு போட்டிகளில் 200-க்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்த முதல் இந்திய கேப்டன் என்ற தனித்துவமான சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

    இதற்கு முன் கங்குலி, எம்எஸ் டோனி, விராட் கோலி உட்பட வேறு எந்த இந்திய கேப்டனும் 2 வெவ்வேறு ஒருநாள் போட்டிகளில் 200-க்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்ததில்லை. சமீப காலங்களாகவே கேப்டன்ஷிப் பற்றி விமர்சனங்களை சந்தித்து வரும் ரோகித் சர்மா இந்த சாதனைகளுடன் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

    Next Story
    ×