search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    பரபரப்பான ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தியது வங்காளதேசம்

    • வங்காளதேச வீரர்கள் முஷ்டாபிஜூர் ரஹ்மான், ரிஷாத் ஹொசைன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
    • வீரர் நுவான் துஷான் 4 விக்கெட் வீழ்த்தியும் வெற்றி பெற முடியாமல் இலங்கை ஏமாற்றம்.

    டி20 உலகக் கோப்பையில் தல்லாஸ் நகரில் நடைபெற்ற போட்டியில் இலங்கை- வங்காளதேசம் அணிகள் மோதின. வங்காளதேசம் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் பதுன் நிஷாங்கா அதிரடியாக விளையாடி 28 பந்தில் 47 ரன்கள் விளாசினார். என்றாலும் மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க இலங்கை 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்களே சேர்த்தது. குசால் மெண்டிஸ் (10), கமிந்து மெண்டிஸ் (4), ஹசரங்கா (0) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். வங்காளதேச அணி சார்பில் முஷ்டாபிஜூர் ரஹ்மான், ரிஷாத் ஹொசைன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    பின்னர் 125 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச வீரர்கள் களம் இறங்கினர். இலங்கை வீரர்கள் பந்து வீச்சில் கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் வங்காளதேச பேட்ஸ்மேன்கள் திணறினர்.

    தொடக்க வீரர்கள் தன்ஜித் ஹசன் 3 ரன்னிலும், சவுமியா சர்கார் டக்அவுட்டிலும் வெளியேறினார். 4-வது விக்கெட்டுக்கு லிட்டோஸ் தாஸ் உடன் தவ்ஹித் ஹிரிடோய் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. 11.4 ஓவரில் 91 ரன்கள் எடுத்திருக்கும்போது ஹிரிடோய் 40 ரன்னில் ஆட்டமிழந்தார். லிட்டோன் தாஸ் 36 ரன்கள் எடுத்த நிலையில் அணியின் ஸ்கோர் 99 ரன்னாக இருக்கும்போது ஆட்டமிழந்தார்.

    அப்போது வங்காளதேசம் 14.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. 113 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது. 10 ரன்னுக்குள் மேலும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி பெற்றி பெற இலங்கை திட்டமிட்டது.

    ஆனால் மெஹ்முதுல்லா ஒருபக்கம் நிலைத்து நின்று 16 ரன்கள் அடிக்க வங்காளதேசம் 19 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நுவான் துஷான் 4 விக்கெட் வீழ்த்தியது பயனில்லாமல் போனது.

    இலங்கை அணி ஏற்கனவே தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக தோல்வியடைந்தது. இந்த நிலையில் தற்போது வங்காளதேசத்திடம் தோல்வியடைந்தால் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை தவறவிடும் நிலையில் உள்ளது.

    Next Story
    ×