search icon
என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    பத்துகாணி குருசுமலை திருப்பயண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நெய்யாற்றின்கரை மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் சாமுவேல் கொடி ஏற்றினார்.
    தமிழக-கேரள எல்லை பகுதியில் பத்துகாணியில் குருசுமலை அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருப்பயண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி நேற்று மதியம் 2 மணிக்கு குருசு மலை அடிவாரத்தில் இளைஞர்கள் சார்பில் பரிகார சிலுவைப்பாதை நடைபெற்றது. நிகழ்ச்சியை அருட்பணியாளர் ஜோயி ஷாபு தொடங்கி வைத்தார். மாலை 4 மணிக்கு புனித பத்தாம் பியூஸ் தேவாலயத்தில் இருந்து திருகொடி பயணம் தொடங்கி மலை அடிவாரத்தை வந்தடைந்தது.

    தொடர்ந்து திருவிழா கொடியை நெய்யாற்றின் கரை மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் சாமுவேல் ஏற்றி வைத்தார். பின்னர் திவ்ய ஜோதி கொடி பயணம் மலையடி வாரத்தில் இருந்து மலை உச்சி வரை நடந்தது. இதில் அருட்பணியாளர் கிறிஸ்து தலைமை தாங்கினார்.

    மாலை 5 மணிக்கு நெய்யாற்றின் கரை மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் சாமுவேல் தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடந்தது. தொடர்ந்து மலை உச்சியில் திருவிழா கொடியை அருட்பணியாளர் கிறிஸ்து ஏற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றினார். மாலையில் நடைபெற்ற திருவிழா பொதுக்கூட்டத்தில் நெய்யாற்றின்கரை மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் சாமுவேல் தலைமை தாங்கினார். குருசுமலை இயக்குனர் வின்ெசன்ட் வரவேற்று பேசினார்.

    விழாவில் கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவர் சதீஷன், திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர், எம்.எல்.ஏ.க்கள் ஹரீந்திரன், ஆன்சலன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டு பேசினர்.

    விழா வருகிற 3-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி ஏராளமானோர் மலைேயறி சென்று வழிபாடு நடத்துகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

    குருசு மலை கோவில் தமிழக- கேரள எல்லை பகுதியில் உள்ளதால் திருவிழாவை முன்னிட்டு தமிழக, கேரள போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
    இன்று பாளையங்கோட்டை தெற்கு பஜார் சவேரியார் பேராலயத்திலிருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு திருஇருதய சகோதரர்களின் இல்லத்தில் இருக்கிற கிறிஸ்து அரசர் ஆலயம் நோக்கி செல்கிறார்கள்.
    பாளையங்கோட்டையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிறிஸ்தவர்களின் தவக்கால சிலுவை பயணம் நடைபெறுகிறது. கிறிஸ்தவர்களின் வாழ்வில் தவக்காலம் மிக முக்கியமான காலம் ஆகும். 40 நாட்கள் ஆண்டவரின் மன்னிப்பையும், அருளையும் கூடுதலாக பெறும் காலமாக கருதப்படுகிறது. அத்தகைய தவக்காலம் கடந்த 2-ந்தேதி சாம்பல் புதனுடன் தொடங்கியது.தொடர்ந்து நோன்பு இருத்தல், புனித ஸ்தலங்களுக்கு செல்லுதல், ஜெபித்தல், நோயாளிகள், ஆதரவற்றவர்களை சந்தித்து உதவி செய்தல் போன்ற செயல்களை செய்து வருகிறார்கள்.

    இதற்கிடையே தவக்கால சிலுவை பயணம் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி பாளையங்கோட்டை தெற்கு பஜார் சவேரியார் பேராலயத்திலிருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு திருஇருதய சகோதரர்களின் இல்லத்தில் இருக்கிற கிறிஸ்து அரசர் ஆலயம் நோக்கி செல்கிறார்கள். இந்த சிலுவை பயணத்தை பாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட முதன்மை குரு குழந்தை ராஜ் அடிகளார் தலைமை தாங்கி வழிநடத்துகிறார். இதில் பங்குத்தந்தையர், துறவியர்கள், இறை மக்கள் உள்ளிட்டோர் சிலுவை தாங்கி பயணம் மேற்கொள்கிறார்கள். முடிவில் திருஇருதய சகோதரர்கள் இல்ல மைதானத்தில் திருப்பலியும் நடைபெறுகிறது.

    தொடர்ந்து ஏப்ரல் மாதம் 14-ந்தேதி பெரிய வியாழனும், 15-ந்தேதி புனித வெள்ளியும் கடை பிடிக்கப்படுகிறது. 17-ந்தேதி ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    பத்துகாணி குருசுமலை திருப்பயண திருவிழா நாளை(ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 8 நாட்கள் நடைபெறுகிறது. விழாவையொட்டி திரளான பொதுமக்கள் மலையேறி குருசை தரிசனம் செய்கின்றனர்.
    தமிழக-கேரளா எல்லை பகுதியில் பத்து காணியில் குருசுமலை அமைந்துள்ளது. ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் இங்கு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை(ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம்(ஏப்ரல்) 3-ந்தேதி வரை 8 நாட்கள் நடக்கிறது.

    விழாவின் தொடக்கமாக நாளை மதியம் 2 மணிக்கு வெள்ளறடையில் இருந்து குருசுமலை அடிவாரம் வரை சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெறும். மாலை 4 மணிக்கு கொடி பயணம் புனித பத்தாம் கியூஸ் தேவாலயம் முதல் மலை அடிவாரம் வரை நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு நெய்யாற்றின்கரை மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் சாமுவேல் திருவிழா கொடியை மலை அடிவாரத்தில் ஏற்றி வைக்கிறார். பின்னர் அங்கிருந்து மலைக்கு எடுத்துச் செல்லப்படும்.

    தொடர்ந்து மாலை 6 மணிக்கு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடக்கிறது. கூட்டத்துக்கு குருசுமலை இயக்குனர் வின்சென்ட் பீட்டர் வரவேற்று பேசுகிறார். நெய்யாற்றின்கரை மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் சாமுவேல் தலைமை தாங்குகிறார். நிகழ்ச்சியில் கேரளா எதிர்க்கட்சித் தலைவர் சதீசன், தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ், சசிதரூர் எம்.பி. ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்கள்.

    தொடர்ந்து நெய்யாற்றின்கரை மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் சாமுவேல் முதல் திருப்பலியை நிறைவேற்றுகிறார்.

    28-ந் தேதி மதுரை மாவட்டம் ஆவணக் காப்பாளர் ஜோசபின் தலைமையில் திருப்பலி, தொடர்ந்து நற்கருணை ஆராதனை, சிலுவைப்பாதை திருப்பலி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    29-ந்தேதி மாணவர்களின் பங்குத்தந்தை ஜோசப் தலைமையில் திருப்பலி, சிலுவை நவநாள், சிலுவைப்பாதை, நற்கருணை ஆராதனை, ஜெப ஆராதனை, திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது.

    30-ந்தேதி நெய்யாற்றின்கரை மறை மாவட்டம் முதன்மை குரு தலைமையில் திருப்பலி ஆகியவை நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் திருப்பலி, சிறப்பு விருந்தினர்கள் உரை, நற்கருணை ஆராதனை, சிலுவைப்பாதை நிகழ்ச்சி, ஆடம்பர கூட்டுத் திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவையொட்டி திரளான பொதுமக்கள் மலையேறி குருசை தரிசனம் செய்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
    முடிந்த அளவுக்கு நாம் எல்லோரையும் ஏற்று அன்பு செய்வதற்கும், சக மனிதர்களை கண் திறந்து பார்ப்பதற்கும் இந்த விருந்தோம்பல் என்ற பண்பை நம்மில் வளர்த்துக்கொள்வோம்.
    ‘நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும், ஒரு உயிருமாய் இருந்தனர். அவர்களுள் எவரும் தமது உடைமைகளை தம்முடையதாக கருதவில்லை. எல்லாம் அவர்களுக்கு பொதுவாய் இருந்தது’ (தி.ப.4:32)

    எத்தகைய எதிர்பார்ப்பும், கைமாறும் இல்லாமல் சக மனிதர்களை அன்பு செய்வதற்கும், ஏற்றுக் கொள்வதற்கும் உதவி செய்வது விருந்தோம்பல் என்ற பண்பே ஆகும். ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு பாராது, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாடு பாராது அனைவரையும் வரவேற்கிற ஒரு பண்பே விருந்தோம்பல் ஆகும். இது வழிப்போக்கருக்கு உதவி செய்ய நம்மைத் தூண்டி எழுப்பும். இது வாழ்க்கையில் கடந்து செல்கின்ற மனிதர்களுக்கு தன்னம்பிக்கை கொண்டு உதவி செய்ய நமக்கு கற்றுக்கொடுக்கும்.

    கனிவு, தியாகம் ஆகிய நல்ல பண்புகளில் உயர்ந்ததாக விருந்தோம்பல் அடையாளப்படுத்தப்படுகிறது. விருந்தோம்பல் இதமானது. ஆனால் இது பல மனிதர்களை நமக்குரியவர்களாக உருமாற்றுகின்ற பண்புடையது. ஏனென்றால் விருந்தோம்பலில் எப்போதும் அதிகாரம் இருக்காது. எல்லோருடைய மனதையும் ஏற்று அதற்கேற்ப வாழ்வதற்கு உதவி செய்யும். நாம் வாழ்கின்ற இந்த உலக சூழலில் இன்றைய கால சூழலில் அருகில் இருக்கின்ற மனிதனையே அன்பு செய்வதற்கு வாய்ப்பில்லாது கடந்து சென்று கொண்டிருக்கிறோம். எனவே, முடிந்த அளவுக்கு நாம் எல்லோரையும் ஏற்று அன்பு செய்வதற்கும், சக மனிதர்களை கண் திறந்து பார்ப்பதற்கும் இந்த விருந்தோம்பல் என்ற பண்பை நம்மில் வளர்த்துக்கொள்வோம்.

    -அருட்பணியாளர் குருசு கார்மல், மேலப்பெருவிளை, கோட்டார் மறைமாவட்டம்.
    ஒளியின் மக்களை விட இவ்வுலகில் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்து கொள்கிறார்கள்(லூக்16:8)
    ஒளியின் மக்களை விட இவ்வுலகில் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்து கொள்கிறார்கள்(லூக்16:8)

    இயற்கை உணவு உடலுக்கும், மனதுக்கும் மிக ஏற்ற உணவுகளாகும். இதமான மென்மையான உணவுகள் பெரும்பாலும் இயற்கை உணவுகளாக அமைகிறது. முரண்பாடான உணவுகளை சாப்பிடுதல், சீரணத்திற்கு எதிரான உணவுகளை சாப்பிடுதல், பொரித்த உணவை சாப்பிடுதல் இவையெல்லம் ஆரோக்கியத்துககு எதிரானதாகும். ஆரோக்கிமாக இருக்க விரும்புகிறவர்கள் தினமும் தங்கள் வாழ்வை தண்ணீரில் தான் தொடங்குகிறார்கள். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சுத்தமான தண்ணீரை பருக வேண்டும். இது உடலுக்கும், மனதிற்கும் ஏற்றதாகும். சமையலில் கடுகு தாளிப்பது வழக்கமான ஒன்று. கூட்டு குழம்பு இவைகளில் சுவைக்காக கடுகு தாளிக்கப்படுகிறது.. கடுகு தாளிக்கப்படுவது நிறுத்திவிட்டால் எண்ணெய் தேவைப்படாது.

    ஒரு தடவை உணவு உண்டு சீரணமாவதற்கு முன் அடுத்த உணவு உண்ணக்கூடாது. இந்த உணவுகளுக்கு இடையே இடைவெளி குறையும் போது அது உடலுக்கு தேவையற்ற கேடுகளை உண்டாக்கும். மதிய உணவுக்கு பிறகும் இடைவேளையில் இனிப்புகள், மிக்சர் உணவுகளை தவிர்ப்பது நல்லது. வாரத்துக்கு ஒருமுறை வெளியே சென்று ஓட்டல்களில் சாப்பிடும் காலசாரம் இன்று அதிகரித்து கொண்டு இருக்கிறது. அதனை தவிர்ப்பது நல்லது. இதனால் தான் அல்சர்போன்ற நோய்கள் உருவாகிறது.

    இயற்கை உணவை விரும்புகிறவர்கள் காலை உணவாக பழங்கள் சாப்பிடலாம். வீட்டில் இருந்து கிடைக்கும் எல்லா உணவுகளும் நல்ல உணவுகளே. அந்த பொருட்களை உண்பது நல்லது. மதிய உணவில் காய்கறிகளை அதிக அளவில் சேர்த்து கொள்வது நல்லது. மாலையில் தேனீருக்கு பதிலாக தண்ணீர் குடிப்பது நல்லது. இரவு உணவு சாப்பிட அதிக நேரம் எடுத்துக்கொள்ளக்கூடாது. 7 மணியில் இருந்து 8 மணிக்குள் சாப்பிடுவது நல்லது. ஆவியில் வேக வைத்த உணவுகளை இரவில் உணவாக உண்பது நல்லது. இது போன்ற நல்ல பழக்கங்களை நாம் கற்றுக்கொள்கின்ற பொழுது நமது உடல் நலம் வளர்ச்சி அடைவதோடு நாமும் ஆரோக்கியமான நிலையில் வாழ்வோம். எனவே இந்த பண்பை இன்றைய குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்போம்.

    - அருட்பணியாளர் குருசு கார்மல், மேலப்பெருவிளை, கோட்டார் மறைமாவட்டம்.
    நாம் சாலை விபத்துகளில் இருந்து பல உயிர்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்றால் சாலை விதிகளை முறையாக நம் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
    கடவுளது அன்பில் நிலைத்திருங்கள், என்றுமுள்ள நிலை வாழ்வை பெற நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரக்கத்தை எதிர்பார்த்திருங்கள்(யூதா1:21)

    ஒரு நாட்டின் சாலை போக்குவரத்து எந்த அளவுக்கு மேம்பட்டு இருக்கிறதோ அந்த அளவுக்கு நாட்டின் பொருளாதாரமும் முன்னேறி இருக்கிறது என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்து. வளர்ச்சியடைந்த நாடுகளில் மட்டுமே சாலைப்போக்குவரத்து பிரமாதமாக இருக்கும். நமது நாட்டில் இப்போது சாலை போக்குவரத்து வசதிகள் விரிவடைந்து வருகிறது. சாலை  போக்குவரத்து சரியாக இல்லாத நாடுகளில் அதிக அளவில் விபத்துகள் நடக்கும். நமது நாட்டிலும் விபத்துகள் தற்போது அதிக அளவில் நடந்து கொண்டிருக்கிறது.

    ஒவ்வொரு ஆண்டும் 5 கோடி பேருக்கு மேல் சாலை விபத்துகளில் சிக்கி காயமடைகிறார்கள். 13 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இறந்து விடுகிறார்கள். இதற்கு அடிப்படை காரணமாக இருப்பது சாலைகளே. நாட்டின் மொத்த இறப்பு எண்ணிக்கையில் 1 முதல் 2 சதவீத இறப்பை சாலை விபத்துகள் ஏற்படுகிறது. நமது நாட்டில் சாலை விபத்துகளில் இறப்போரின் எண்ணிக்கை ஆண்டுக்கு 75 ஆயிரம். ஒவ்வொரு ஆண்டும் 3 லட்சத்து 40 ஆயிரம் பேர் படுகாயமடைந்து வருகிறார்கள். ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையில் 1.5 சதவீத விபத்துகள் நடக்கிறது. இவற்றுக்கு 2 விதமான காரணங்கள் முன் வைக்கப்படுகிறது. ஒன்று சாலைகள் சரியில்லை என்பது, 2 சாலை விதிகளை மதிக்கின்ற தன்மை குறைந்து கொண்டிருப்பது.

    மேற்கத்திய நாடுகளில் குழந்தை பருவத்திலேயே கற்றுக்கொண்டுப்படும் முக்கிய பண்புகளில் சாலை விதிகளை மதிப்பதும் ஒன்று. ஆனால் நமது பகுதியில் இந்த அறிவு குறைந்து கொண்டிருக்கிறது என்பதை ஏற்று தான் ஆகவேண்டும். எனவே நாம் சாலை விபத்துகளில் இருந்து பல உயிர்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்றால் சாலை விதிகளை முறையாக நம் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த விபத்தில் இருந்து விடுதலை பெற முடியும்.

    - அருட்பணியாளர் குருசு கார்மல், மேலப்பெருவிளை, கோட்டார் மறைமாவட்டம்.
    நமது தமிழகத்தை பொறுத்த வரையில் கூட வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மக்களுடைய எண்ணிக்கை அதிகமாகி கொண்டு தான் இருக்கிறது.
    இந்த ஏழை கைம்பெண் எல்லாரையும் விட மிகுதியான காணிக்கை போட்டிருக்கிறார் என உண்மையாகவே உங்களுக்கு சொல்கிறேன்.(லூக்21:3)

    உலக நாகரிகம் தோன்றிய காலகட்டத்தில் இருந்தே வறுமை அல்லது ஏழ்மை ஒரு விவாதப்பொருளாகவே உள்ளது. கி.பி. 5-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பிளேட்டோ கூறும் போது அதிகமான ஏழ்மையும், அதிகமான பணபலமும் காணப்பட்டால் அது தீங்கு விளைவிக்கும் என்று குறிப்பிட்டார். ஏற்கனவே வசதி படைத்தவர்கள் மேலும் வசதி அடைவதை முன்னேற்றம் என கூற முடியாது. வசதி இல்லாதவர்களுக்கு வசதியை ஏற்படுத்துவதில் தான் முன்னேற்றம் உள்ளது என்கிறார் அமெரிக்க முன்னாள் அதிபர் ரூஸ்வெல்ட், ஏழைகளின் வாழ்க்கை தரம் பற்றி பேசாத தலைவர்கள் இல்லை என்ற போதிலும் ஏழ்மை இந்த சமூகத்தில் அழிப்பட்டு இருக்கிறதா? என்றால் மாபெரும் கடினமான ஒன்றாகதான் இருக்கிறது.

    தினசரி உழைத்தால் மட்டும் தான் உணவு என்ற சூழல் இன்று மிக அதிகமாக சமூகங்களில் தென்படுகிறது. நமது தமிழகத்தை பொறுத்த வரையில் கூட வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மக்களுடைய எண்ணிக்கை அதிகமாகி கொண்டு தான் இருக்கிறது. அவர்களை பராமரிப்பதற்கு யாரும் முன்வருவதில்லை.

    மலைவாழ் மக்கள், கிராமங்களில் வாழ்கின்ற மக்கள், வீதியோரங்களில் வாழ்கின்ற மக்கள், தெருவோரங்களில் வாழ்கின்ற மக்கள் என்று எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கிராமங்களில் இருந்து நகர் புறத்துக்கு செல்கின்ற மக்களில் 10 பேரில் 3 பேர் வசதி பெறுகிறார்கள். எனவே ஏழ்மையை போக்குவதற்கு முன்னெடுப்புகளை முன்னெடுக்க வேண்டிய ஒரு சூழல் இந்த சமூகத்தில் மிக அதிகம் உள்ளது. அரசும் அதை சார்ந்த நிர்வாகமும்  இதற்கான பல தொடர் திட்டங்களை தீட்டி முன்னெடுப்புகளை முன்னெடுக்கின்ற போது மட்டும் தான் இந்த சூழல் சமூகத்தை விட்டு அகலும் என்பதை உணர்ந்திடுவோம்.

    -அருட்பணியாளர் குருசு கார்மல், மேலப்பெருவிளை, கோட்டார் மறைமாவட்டம்.
    மாணவர்களுடைய தலைமை பண்புக்கு தகுதியுடையது செய்வதற்கும், மாணவர்களின் தனித்திறனை வெளிப்படுத்துவதற்கும் கல்வி சாரா கலைகளில் அவர்களுக்கு ஆர்வம் உண்டாகும் வகையில் மாணவர் பேரவை உருவாக்கப்பட்டது.
    நான் ஆடுகள் வாழ்வை பெறும் பொருட்டு அதுவும் நிறைவாக பெறும் பொருட்டு வந்துள்ளேன். நல்ல ஆயன் நானே, நல்ல ஆயர் ஆடுகளுக்காக தம் உயிரை கொடுப்பார்(யோவான் 10:10,11)

    தமிழகத்தில் மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல், கல்வியியல் என ஆயிரக்கணக்கான கல்லூரிகள் உள்ளன. இதில் பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர்கள் பேரவை தேர்தல் நடத்தப்படுவதில்லை. இதனால் மாணவர்கள் தங்கள் பிரச்சனைகளை தீர்த்து கொள்ள முடியாத சூழல் ஏற்படுகிறது. மாணவர்களுடைய தலைமை பண்புக்கு தகுதியுடையது செய்வதற்கும், மாணவர்களின் தனித்திறனை வெளிப்படுத்துவதற்கும் கல்வி சாரா கலைகளில் அவர்களுக்கு ஆர்வம் உண்டாகும் வகையில் மாணவர் பேரவை உருவாக்கப்பட்டது. மேலும், பிரச்சனைகளை அவர்களுக்குள் தீர்த்து கொள்வதற்கும் பேரவை தொடங்கப்பட்டது.

    இவை புறக்கணிக்கப்படுவதால் எதிர்கால சமூகத்தினரிடையே பல நல்ல தலைவர்கள் இனம் கண்டுபிடிக்க முடியாமல் போகிறார்கள்.

    அன்றைய காலக்சூழலில் கட்சியோடு இணைந்து பல நல்ல தலைவர்கள் உருவாவதற்கு கல்விக்கூடங்கள் காரணமாக இருந்தது. இன்று அவை அனைத்துமே மறுக்கப்படுகிறது. இதனால் பல நன்மை தனங்கள் இந்த சமூகத்திலிருந்து அகற்றப்படுகிறது. ஏனென்றால் ஒவ்வொரு மாணவர்களும் வெவ்வேறு ஆற்றல்களோடும், திறமைகளோடும் கல்விக்கூடங்களுக்கு நுழைகிறார்கள்.

    அவர்களின் ஆற்றல்களையும், திறமைகளையும் சரியாக இனங்கண்டு அவர்களை தூக்கி நிறுத்தி அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதற்கு கல்விக்கூடங்கள் உதவி செய்ய வேண்டும். ஆனால் இவை புறக்கணிக்கப்படுவதால் மாணவர்கள் தங்களது வாழ்வை கூட பல நேரங்களில் இழப்பதற்கு காரணமாக அமைகிறது. அடையாளம் காட்டப்படாததால் அவர்கள் பல நேரங்களில் தங்களுக்குள்ளாகவே மோதிக்கொண்டு பல தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகும் நிலை மீண்டும் மீண்டும் உருவாக்கப்படுவது மிகுந்த வேதனைக்குரிய செயலாகத்தான் இருக்கிறது.

    -அருட்பணியாளர் குருசு கார்மல், மேலப்பெருவிளை, கோட்டார் மறைமாவட்டம்.
    நாமும் நமது வாழ்வில் எல்லா நொடிப்பொழுதும் சிறிய சிறிய குறைகளை களைந்து கொள்வதற்கும், தோல்வி வருகின்ற பொழுது நிறைவோடு வாழ்வதற்கும் துணிச்சலை கற்றுக்கொள்வோம்.
    ‘ கடவுள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன் எவராவது இந்த மலையை பார்த்து பெயர்ந்து கடலில் விழு என தம் உள்ளத்தில் ஐயம் எதுவுமின்றி நம்பிக்கையுடன் கூறினால், அவர் சொன்னவாறே நடக்கும்’ (மாற்கு 11:22-23)

    மனித வாழ்க்கை என்பது எண்ணற்ற சவால்களால் நிறைந்திருக்கிறது. வாழ்க்கை நாம் துணிச்சலோடு எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். மாறி வரும் இந்த உலக சூழலில் ஏராளமான இடர்பாடுகளையும், பின்னடைவுகளையும் நாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். துணிச்சல் ஒரு மனிதனை உள்ளத்தில் இருந்து இயக்குகின்ற சக்தி படைத்தது. நாம் கொண்ட தொழிலுக்காகவும், மதிப்புக்காகவும் நம்மை போராடுமாறு நம்மைத் தூண்டுவது துணிச்சலே ஆகும். எப்படிப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும் அதை சந்தித்துதான் ஆகவேண்டும். பிறந்தவுடன் ஒரு மனிதன் வாழ வேண்டிய நோக்கங்களுள் தள்ளப்படுகிறான். பல அறிவு காரியங்களை படைப்பதற்கும், தமது இலக்குகளை, லட்சியங்களை வடிவமைத்து கொள்வதற்கும் நமக்கு தேவையானது துணிச்சல். விஞ்ஞானிகளும் சுதந்திர போராளிகளும் தொடர்ந்து முன்னேறிச் செல்வதற்கு அவர்களின் துணிச்சலே உதவி செய்திருக்கிறது என்று அவர்களே சான்று பகர்ந்திருக்கிறார்கள்.

    எனவே நாமும் நமது வாழ்வில் எல்லா நொடிப்பொழுதும் சிறிய சிறிய குறைகளை களைந்து கொள்வதற்கும், தோல்வி வருகின்ற பொழுது நிறைவோடு வாழ்வதற்கும் துணிச்சலை கற்றுக்கொள்வோம். சமூக தீமைகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். வாழ்வில் அடித்தட்டு மக்களின் உரிமைகளுக்காக நாம் குரல் கொடுக்க வேண்டும். அதே நேரத்தில் சமத்துவம் நிலைபெற நாம் போராட வேண்டும். இதை உள்ளத்தில் ஏந்தியவர்களாக இந்த நாளில் தொடர்ந்து வாழ்வதற்கு பழகுவோம்.

    -அருட்பணியாளர் குருசு கார்மல்,

    மேலப்பெருவிளை, கோட்டார் மறைமாவட்டம்.
    தன்னைத்தானே அழித்து கொள்வது என்பது ஒரு சமூகத்தை மீண்டும் கீழான நிலைக்கு தான் தள்ளுகின்ற சூழ்நிலை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
    நான் உன்னோடு இருக்கின்றேன், உன்னை மீட்பதற்காக உள்ளேன் என்கிறார் ஆண்டவர் (எரேமியா 30:11)

    இந்தியாவில் 5 நிமிடங்களுக்கு ஒரு நபரும், ஆண்டுக்கு ஒரு லட்சம் பேரும் தற்கொலை செய்வதாக ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. தற்கொலை என்ற எண்ணத்தோடு மனிதர்கள் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பள்ளி இறுதி ஆண்டு தேர்வில் முடிவுகள் வெளியாகின்ற போது பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிற செய்திகள் தொடர்ந்து வருவது வேதனைக்குரிய செயலாகத்தான் இருக்கிறது.

    தினமும் ஆசிரியர் அடித்தால் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற மனநிலையோடு மாணவர்கள் அலைவது, திரிவது இயற்கையான ஒன்று, அதற்கு காரணமாக இன்று கருதப்படுவது இன்றைய கல்வி திட்டம். ஓடியாடி விளையாடி பட்டாம் பூச்சியான் திரிந்து ஆரோக்கியமாய் கல்வி கற்று வளர வேண்டிய குழந்தைகள் இன்று அறைகளுக்குள் அடைக்கப்பட்டு கல்வி என்ற பெயரில் அவர்கள் தாக்கப்படுகிறார்கள். இந்த சூழல்கள் தான் தற்கொலை உணர்வுக்கு காரணம் என்று உளவியலாளர்கள் எச்சரித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனாலும் இன்றைய கல்வி திட்டம் மாறுகிறதா என்றால்? இல்லை மீண்டும் மீண்டும் மாணவர்களை அடிமைப்படுத்தும் ஒரு அமைப்பாகத்தான் மாறி கொண்டிருக்கிறது. இந்த இளம் வயது கற்றல் என்பது சமுதாய வளர்ச்சியில் ஒரு நல்ல அறிகுறி என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

    தன்னைத்தானே அழித்து கொள்வது என்பது ஒரு சமூகத்தை மீண்டும் கீழான நிலைக்கு தான் தள்ளுகின்ற சூழ்நிலை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுடைய மென்மையான உணர்வை புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுத்து குழந்தைகளை ஆரோக்கியமான சூழல்களில் நாம் வளர்க்கும் போது நிச்சயமாக இந்த உணர்வில் இருந்து பாதுகாக்க முடியும். முடிந்த அளவுக்கு இந்த சூழல் மறைய தொடர்ந்து உழைக்க வேண்டும் என்ற மனநிலையோடு தொடர்ந்து பயணிப்போம்.

    - அருட்பணியாளர் குருசு கார்மர், மேலப்பெருவிளை, கோட்டார் மறைமாவட்டம்.
    உங்களுடைய குடும்ப பாரத்தை, பிள்ளைகளைப் பற்றிய பாரத்தை, கடன் பிரச்சினைகளைப் பற்றிய பாரத்தை நீங்கள் தேவன் மேல் வைத்துவிடுவீர்களானால் நிச்சயமாகவே அவர் உங்களை ஆதரிப்பார்.

    “கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார். நீதிமானை ஒரு போதும் தள்ளாடவொட்டார்”. (சங்.55:22)

    சங்கீதக்காரன் இளமையிலேயே அநேக பாரங்களைச் சுமந்தான். சரீரபிரகாரமான பாரங்களுண்டு. ஆத்துமாவில் சுமக்கிற பாரங்கள் உண்டு. ஆவியில் சுமக்கிற பாரங்களும் உண்டு. அப்போதெல்லாம் அவர் தேவன் மேல் பாரத்தை வைப்பதையே தெரிந்துகொண்டார்.

    உங்களுடைய குடும்ப பாரத்தை, பிள்ளைகளைப் பற்றிய பாரத்தை, கடன் பிரச்சினைகளைப் பற்றிய பாரத்தை நீங்கள் தேவன் மேல் வைத்துவிடுவீர்களானால் நிச்சயமாகவே அவர் உங்களை ஆதரிப்பார். நீங்களாகவே பாரத்தை சுமந்தால் சோர்ந்து போய்விடுவீர்கள், இளைப்படைந்து விடுவீர்கள். அந்த பாரத்தை உங்களால் சுமக்க முடியாது. ஆகவே ஆண்டவர்மேல் உங்கள் பாரத்தை வைத்துவிடுங்கள்.

    ஒரு மனிதன் ஒரு சுமையை தூக்கிக்கொண்டு வந்தான். ஒரு பஸ் ஓட்டுநர் அதைப் பார்த்து, அவனிடம், நீ இந்த சுமையை சுமந்து கொண்டு இன்னும் அதிக தூரம் நடக்க வேண்டுமே. உன்னால் நடக்க முடியாது. ஆகவே நீ பஸ்சில் ஏறிக்கொள் என்றார். அவன் பஸ்சில் ஏறினான். ஒரு சீட்டில் போய் உட்கார்ந்தான். கொஞ்சம் நேரம் கழித்து அந்த பஸ் ஓட்டுநர் அவனைத் திரும்பிப் பார்த்தார்.

    அவன் அந்த சுமையை கீழே வைக்காமல் தலையில் சுமந்துகொண்டிருந்தான். பஸ் ஓட்டுநர் கேட்டார், ஏன் அந்த சுமையை தலையில் சுமந்துகொண்டு வருகிறீர்கள். அதற்கு அவர் என்னைத்தான் பஸ்ஸில் சுமந்துக்கொண்டு போகிறீர்கள். இந்த சுமையையுமா சுமக்க வேண்டும். இந்த சுமையின் எடை அதிகம் இதை நானே சுமந்துகொள்ளுகிறேன் என்றான். ஓட்டுநர் சொன்னார், இந்த பஸ் உன்னையும் சுமக்கும். உன் சுமையையும் சுமக்கும். இந்த சுமையை நீ தலையில் வைத்துக்கொண்டாலும், கீழே வைத்தாலும் பஸ் தான் சுமக்கிறது என்றார்.

    அதைப்போல தான் ஆண்டவர் உங்களைச் சுமக்கிறது மாத்திரமல்ல, உங்களுடைய பிள்ளைகளை, உங்களுடைய வேலையை, மற்றும் உங்களுடைய எல்லா பொறுப்புகளையும் சுமக்கிறார்.

    வேதம் சொல்லுகிறது, “ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?. ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள். அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை, அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார். அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?” (மத். 6:25-27).

    பிரியமானவர்களே, கர்த்தருடைய சமுகத்தில் உங்களுடைய பாரத்தை இறக்கி வைத்து விட்டு ஜெபம் பண்ணுங்கள். அந்த பாரம் உங்களை மறுபடியும் தாக்காதபடிக்கு ஸ்தோத்திரம் செலுத்துங்கள். அப்போது எந்த பாரமும் உங்களை மேற்கொள்ளுவதில்லை.

    போதகர் ஜோசப் ஆஸ்பார்ன் ஜெபத்துரை.
    வாணாபுரம் அருகே உள்ள சதா குப்பம் அந்தோணியார் தேவாலயத்தில் இருந்து நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் சிலுவைகளை சுமந்து 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றனர்.
    ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட தினம் புனித வெள்ளியாக கடைபிடிக்கப்படுகிறது. அடுத்த மாதம் புனிதவெள்ளி வர உள்ள நிலையில் தவக்காலம் தொடங்கி உள்ளது.

    இதனையொட்டி ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் தேவாலயங்களில் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெறுகிறது. வாணாபுரம் அருகே உள்ள சதா குப்பம் அந்தோணியார் தேவாலயத்தில் இருந்து நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் சிலுவைகளை சுமந்து 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றனர். தொடர்ந்து இறைமக்கள் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர் .இதனையடுத்து அவர்கள் பெருந்துறைபட்டு தூய காணிக்கை அன்னை தேவாலயத்துக்கு சென்றனர். அங்கு பங்கு தந்தை வின்சென்ட்பவுல் தலைமையில் நடந்த கூட்டு திருப்பலியில் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.
    ×