search icon
என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    • வாராஹித் தாய் வழிபாடு உங்கள் தலையெழுத்தையே மாற்றி விடும்.
    • மாதுளம் பழத்தை உதிர்த்து வராஹி தாய்க்கும் நிவேதனமாக வையுங்கள்.

    நாளை தேய்பிறை பஞ்சமி திதி. வழக்கம் போல தான். உங்கள் வீட்டில் வராஹி தாயின் திருவுருவப்படம், சிலை இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, இந்த வழிபாட்டை நீங்கள் மேற்கொள்ளலாம். ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, அதில் வாராஹி இருக்கின்றாள் என்று நினைத்துக் கொண்டு, நீங்கள் உண்மையான முழு மனதோடு வழிபாடு செய்தாலே வராஹித்தாய் உங்கள் பூஜை அறையில் வந்து அமர்ந்து விடுவாள்.

    நாளைய தினம் சிவப்பு முத்துக்கள் அழகாக இருக்கும் மாதுளம் பழத்தை உதிர்த்து வராஹி தாய்க்கும் நிவேதனமாக வையுங்கள். வெற்றிலை பாக்கு, பூ, பழம், இவைகளை சமர்ப்பணம் செய்யுங்கள். சிவப்பு நிறத்தில் இருக்கும் அரளிப்பூ அல்லது செம்பருத்தி பூ கிடைத்தால் மிகவும் சிறப்பு. இவை எல்லாவற்றையும் விட நாளைக்கு வராஹி அம்மனுக்கு தேங்காய் பூ நிவேதியமாக வைப்பது மிகச் சிறப்பான பலனை கொடுக்கும். எல்லா தேங்காயை உடைக்கும் போதும் தேங்காய் பூ நமக்கு கிடைக்காது. ஆனால் சில இடங்களில் தேங்காய் பூ தனியாக விற்கிறார்கள். அந்த தேங்காய் பூவை வாங்கி வராஹி தாய்க்கு நிவேதனமாக படைக்கலாம்.

    ஒருவேளை உங்களுக்கு தேங்காய் பூ கிடைக்கவில்லை என்றால், தேங்காய் துருவி அதில் நாட்டு சர்க்கரை சேர்த்து அதை வராஹிக்கு நிவேதனமாக வைத்துவிட்டு வராஹி அம்மனின் மந்திரம் தெரிந்தால், அதை சொல்லி உங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். செய்யும் தொழிலில் பிரச்சனை, எதிரி தொல்லை, ஏவல், பில்லி, சூனியம், கண் திருஷ்டி, தீராத நோய், கடன் தொல்லை போன்ற அனைத்து விதமான பிரச்சனைக்கும் உடனடியாக ஒரு நல்ல தீர்வினை கொடுக்கக்கூடிய சக்தி இந்த வராஹி வழிபாட்டிற்கு உண்டு.

    உண்மையான வாராஹித் தாய் வழிபாடு உங்கள் தலையெழுத்தையே மாற்றி விடும். உங்கள் தலையில் அந்த பிரம்மன் எவ்வளவு கஷ்டங்களை எழுதி வைத்திருந்தாலும் சரி அதை புரட்டிப் போடக்கூடிய சக்தி இந்த ஒரு வழிபாட்டிற்கு உண்டு. அதிலும் நாளை தேய்பிறை பஞ்சமி திதி என்பதால் கஷ்டங்கள் அனைத்தும் தேய்ந்து போக இந்த வழிபாடு செய்வது சிறப்பு.

    வழிபாடை முடித்துவிட்டு நிவேதனமாக வைத்த பிரசாதத்தை வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட்டுக் கொள்ளலாம். உங்கள் வீட்டின் அருகில் குழந்தைகள் யாராவது இருந்தால் அவர்களுக்கும் பிரசாதத்தை கொடுப்பது சிறப்பு. கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக போற்றப்படும் இந்த வராஹித் தாய் வழிபாட்டை மேற்கொண்ட ஒரு சில நாட்களிலேயே யார் ரூபத்திலாவது வந்து 'நான் இருக்கிறேன் உனக்காக' என்பதை உணர்த்தி விடுவாள் அந்த சக்தி தேவி.

    • சதுர்த்தி விரதம் கடைப் பிடிப்பவர்களுக்கு சங்கடங்கள் அழியும்.
    • இன்று விநாயகருக்கு உரிய சதுர்த்தி திதி.

    இன்று (செவ்வாய்க்கிழமை) மகம் நட்சத்திரம். மகம் என்பது கேதுவின் நட்சத்திரம். கேதுவிற்கு உரிய தெய்வம் விநாயகர். இன்று விநாயகருக்கு உரிய திதி (சதுர்த்தி திதி). எனவே சதுர்த்தி விரதம் கடைப் பிடிப்பவர்களுக்கு சங்கடங்கள் அழியும். அதாவது நீங்கும் என்பதால் சங்கடஹர சதுர்த்தி தினம்.

    இன்று அதிகாலை நீராட வேண்டும். விரதம் இருக்க வேண்டும். விநாயகருக்கு அறுகம்புல் மாலை சாத்த வேண்டும். கொழுக்கட்டை, அப்பம், அவல், பொரி, வெல்லம் முதலியவற்றை படைத்து பூஜை செய்ய வேண்டும்.

    மாலையில் விநாயகர் கோவிலுக்கு சென்று பூஜையில் கலந்துகொண்டு விநாயகரை வழிபாடு செய்து வேண்டும். பின்னர் வீட்டிற்கு வந்து நிலவை பார்த்த பின்னர் இரவு உப்பு சேர்க்காத உணவை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்து விநாயகரை வழிபாடு செய்து வந்தால் நம் துன்பங்கள் பனிபோல் கரைந்து ஓடிவிடும்.

    • இந்தநாளில், மாலையில் சிவ தரிசனம் செய்யுங்கள்.
    • நமசிவாய மந்திரம் சொல்லி மனதார பிரார்த்தனை செய்யுங்கள்.

    மார்கழி மாதத்தின் கடைசி சோம வாரம் இன்று. இந்த நன்னாளில்,விரதம் இருந்து சிவ புராணம் பாராயணம் செய்தும் நமசிவாய மந்திரம் சொல்லியும் சிவனாரை தரிசிப்போம். அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று அம்பாளையும் சிவபெருமானையும் தரிசித்து பிரார்த்திப்போம்.

    மார்கழி மாதம் என்பது சிறப்பான மாதம். மார்கழி மாதம் என்பது பக்திக்கு உரிய மாதம். மார்கழி மாதம் என்பது வழிபாட்டுக்கு உரிய மாதம். மார்கழி மாதம் புதிதாக ஜபங்களையும் கலைகளையும் கற்றுக்கொள்ளும் மாதம். இந்த மாதத்தில் வழிபாடுகளிலும் பூஜைகளிலும் ஆத்மார்த்தமாக ஈடுபட்டால், இறைவனின் பேரருளைப் பெறலாம்.

    'மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்' என்று மகாபாரதத்தில், பகவான் கிருஷ்ணர் தெரிவித்துள்ளார். மார்கழி மாதம் விரதம் இருந்து முழுவதும் சிவ வழிபாடு செய்வதும் பெருமாள் வழிபாடுகள் மேற்கொள்வதும் மும்மடங்குப் பலன்களைத் தரவல்லது.

    மார்கழி மாதத்தில் திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை முதலானவற்றைப் பாராயணம் செய்தும் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் ஆலயத்துக்கு செல்வதும் மகத்தான பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள்.

    மார்கழி மாதத்தில் வைஷ்ண திருத்தலங்களில் தினமும் காலையும் மாலையும் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறும்.

    அதேபோல், மார்கழி மாதத்தில் ஆண்டாளைக் கொண்டாடும் வகையில் கூடாரவல்லித் திருநாள் கொண்டாடப்படுகிறது.

    சிவன் கோயில், பெருமாள் கோயில் என்றில்லாமல், மார்கழி மாதம் முழுவதுமே எல்லா ஆலயங்களிலும் காலையும் மாலையும் விசேஷ வழிபாடுகளும் பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.

    மார்கழி மாதத்தில் சோமவாரம் என்று சொல்லப்படும் திங்கட்கிழமையில் விரதம் இருந்து சிவனாரை வழிபடுவதும் சிவ பூஜை மேற்கொள்வதும் சிறப்புக்கு உரியது. மார்கழி மாதத்தின் கடைசி திங்கட்கிழமை இன்று. இந்தநாளில், மாலையில் சிவ தரிசனம் செய்யுங்கள். குளிர்ந்த வேளையில், சிவனாரை தரிசியுங்கள். நமசிவாய மந்திரம் சொல்லி மனதார பிரார்த்தனை செய்யுங்கள். நம்முடைய பிரச்சினைகள் அனைத்தும் களைந்து அருளுவார் சிவனார். சிக்கல்கள் அனைத்தையும் தீர்த்தருளுவார்.

    மனதில் நிம்மதியையும் அமைதியையும் தந்து ஞானத்தையும் யோகத்தையும் தந்தருளும் சிவனாரை வழிபடுவோம்!

    • ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட்டால் நவகிரகங்களால் ஏற்படும் இடையூறுகள், துன்பங்கள் எல்லாம் நீங்கும்.
    • தீவிரமாக உபாசிப்பவர்களுக்கு விரும்பியதை அளித்து காப்பாற்றுவார்.

    ஸ்ரீசக்கரத்தாழ்வாரை விரதம் இருந்து தரிசித்தால், சகல தோஷங்களும் விலகும். அவரின் பரிபூரண அருள் கிடைக்கப்பெற்று நிம்மதியும், சந்தோஷமும் பொங்க வாழலாம் என்பது ஐதீகம்.

    சுவாமி தேசிகன் இவரை "சக்ர ரூபஸ்ய சக்ரிண" என்று போற்றுகிறார். அதாவது திருமாலுக்கு இணையானவர் என்று பொருள். கும்பகோணம் சக்ர படித்துறையில் உள்ள சக்கர தீர்த்தத்தில்தான் பிரம்மா அவப்ருத நீராடல் செய்து யாகம் செய்தார். உடனே பாதாளத்திலிருந்து சக்கரம் வெளிக்கிளம்பி மேலே வந்தது. அந்த சக்கரத்தின் நடுவில் பிரம்மனுக்கு அன்று காட்சி தந்த ஸ்ரீமந் நாராயணன்தான் இன்று நமக்கு ஸ்ரீ சக்ரபாணியாக காட்சி தருகிறார்.

    சாளகிராமங்களில் சுதர்சன சாளகிராமம் மிகச் சிறந்தது. ஒரு சக்கரம் மட்டுமே உள்ள மிகப் பெரிய சாளகிராமம் சுதர்சனமாகும். திருமாலின் சக்ராயுதத்தின் பூர்ண சக்தி இதற்கு உண்டு.

    ஸ்ரீ சக்கரத்தாழ்வாரையும், அவர் பின்புறமுள்ள ஸ்ரீ நரசிம்மரையும் வணங்கி சுற்றி பிரதட்சணம் செய்தால், நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களையும் அஷ்ட லட்சுமிகளையும், எட்டு திசைகளையும் வணங்கிய பலன் கிடைக்கும். 16 வகையான பேரருளும் கிடைக்கும் என்பது முன்னோர்களின் வாக்கு...ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை விரதம் இருந்து புதனும், சனியும் சேவிப்பது விசேஷம். முடிந்தால் தினமும், இயன்ற நிவேதனம் வைத்து பூஜிப்பது நல்லது.

    ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய் விளக்கேற்றி, ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம என்று கூறி வழிபடுதல் கூடுதல் பலனைத் தரும். வியாழக்கிழமை விரதம் இருந்து ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால், நினைத்த காரியங்களில் வெற்றி கிட்டும். ஸ்ரீசக்கரத்தாழ்வாரை விரதம் இருந்து வழிபட பக்தர்கள் ஓரடி எடுத்து வைத்தால், அவர் உடனே இரண்டடி முன்வைத்து பிரச்சினைகளையும், துன்பங்களையும் தீர்த்து சந்தோஷத்தில் ஆழ்த்துவார் என்பது விதியாகும்.

    திருமாலுக்குச் செய்யப்படும் அனைத்து வழிபாடுகளும் சுதர்சனருக்கும் செய்வது என்பது நடைமுறையில் உள்ளது. ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட்டால் நவகிரகங்களால் ஏற்படும் இடையூறுகள், துன்பங்கள் எல்லாம் நீங்கும். திருமால், ராம அவதாரம் எடுத்து வனவாசம் மேற் கொண்டபோது, ராமர் சார்பாக அயோத்தியை ஆட்சி புரிந்த பரதன் ஸ்ரீசுதர்சன ஆழ்வாரின் அம்சம் என்று புராணம் கூறுகிறது. பொதுவாக சக்கரம் திருமாலின் வலது கரத்தில் இடம்பெற்றிருக்கும். ஒரு சில தலங்களில் இடம் மாறியும் காட்சி தருவதைக் காணலாம். திருக்கோவிலூர் திருத்தலத்தில் மூலவர் வலக்கையில் சங்கும் இடக்கையில் சக்கரமுமாக, வலக்காலால் வையகத்தை அளந்து நிற்கும் திருக்கோலத்தைத் தரிசிக்கலாம்.

    பஞ்ச கிருஷ்ண திருத்தலங்களில் ஒன்றான திருக்கண்ணபுரத்தில் மூலவரின் வலது கரத்தில் பிரயோகிக்கும் நிலையில் சக்கரம் காட்சி தருகிறது. திருமால் கோவிலில் உள்ள சுதர்சனர் சந்நிதியில் நெய் விளக்கேற்றி வழிபட்டால் வாழ்வில் சுபிட்சம் காணலாம். திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும், சுமங்கலிகள் நீடூழி சுகமாக வாழ்வர் என்பது ஐதீகம்.

    பிரம்மோற்சவம் மற்றும் பெருமாள் கடலுக்குச் சென்று தீர்த்தவாரி மேற்கொள்ளும் சமயங்களிலும் சுதர்சனருக்கு முக்கியப் பங்கு உண்டு. சுதர்சனர் எனப்படும் சக்கரத்தாழ்வாருக்கென்று விசேஷமான ஆராதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆராதனைகள் விகசை என்ற மகா முனியால் ஏற்படுத்தப்பட்டவை. சுதர்சனர் பிரத்யட்ச தெய்வம். தீவிரமாக உபாசிப்பவர்களுக்கு விரும்பியதை அளித்து காப்பாற்றுவார். ஸ்ரீசுதர்சன வழிபாடு பயங்கரமான கனவு, சித்தபிரமை, சதாமனோ வியாகூலம், பேய்விசாசு, பில்லி சூன்யம், ஏவல் முதலிய துன்பங்களிலிருந்து காக்க வல்லது.

    • சிவாலயம் சென்று, நடராஜரையும், சிவகாமி அம்மனையும் வணங்க வேண்டும்.
    • இரவில் எளிமையான உணவை உட்கொண்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

    திருவாதிரை அன்று, நடராஜ பெருமானுக்கு களி நைவேத்தியமாக படைக்கப்படும். 'திருவாதிரைக்கு ஒரு வாய்க் களி' என்பது முன்னோர் வாக்கு. இறைவனுக்கு களி படைப்பதற்கான கதை ஒன்றும் உள்ளது. முன் காலத்தில் சேந்தன் என்ற சிவபக்தர் இருந்தார். விறகு வெட்டி கிடைக்கும் சிறிய வருவாயில் வாழ்க்கை நடத்தி வந்தார். இருப்பினும் தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்த பிறகே, அவர் உணவருந்துவார். ஒரு நாள் கடும் மழை பெய்தது.

    அதனால் விறகுகள் ஈரமாகி விட்டன. அதனால் விறகுகளை விற்க முடியாமல் வருவாய் பாதிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினம் சேந்தன் வீட்டிற்கு ஒரு சிவனடியார் வருகை தந்தார். அவருக்கு எப்படி உணவளிப்பது என்று சேந்தன் கவலைகொண்டார். அவரது மனைவி, வீட்டில் அரிசி மாவும், சிறிது வெல்லமும் இருப்பதாகவும், அதைக் கொண்டு அடியாருக்கு களி செய்து கொடுக்கலாம் என்று கூறினார். அதன்படியே சிவனடியாருக்கு களியை உணவாக படைத்தனர்.

    அதை உண்ட சிவனடியார் மகிழ்வுடன் புறப்பட்டார். அதற்கு மறுநாள் திருவாதிரையாகும். நடராஜரை தரிசிக்க, சேந்தனும் அவரது மனைவியும் சிதம்பரம் சென்றனர். அங்கு சிவபெருமானின் வாய்ப் பகுதியில் களி உண்டதற்கான அடையாளமாக சிறிது களி ஒட்டிக்கொண்டிருந்தது. தன் வீட்டிற்கு வந்து களி சாப்பிட்டது ஈசன் என்று அறிந்ததும் சேந்தனும், அவரது மனைவியும் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். இதை அறிந்த ஊர் மக்களும், சேந்தனின் பக்திக்கு தலை வணங்கினர். அன்று முதல் திருவாதிரை அன்று இறைவனுக்கு நைவேத்தியமாக களி படைக்கும் வழக்கம் வந்தது.

    சிவபெருமான் பிறப்பும், இறப்பும் இல்லாதவராக போற்றப்படுகிறார். ஆனால் அவருக்குரிய நட்சத்திரமாக 'திருவாதிரை' இருக்கிறது. பகவத் கீதையில், 'மாதங்களில் நான் மார்கழி' என்று கூறும் கிருஷ்ணர், 'நட்சத்திரங்களில் நான் திருவாதிரையாக இருக்கிறேன்' என்கிறார். தெய்வங்களை வழிபடுவதற்கான மாதமாக கருதப்படும் இந்த மார்கழியில்தான், திருவாதிரை நட்சத்திர நாளில் கொண்டாடப்படும் ஆருத்ரா தரிசனமும் வருகிறது. இந்த ஆருத்ரா தரிசனம், நடராஜ பெருமானுக்கு உகந்த வழிபாட்டு தினமாகும். இந்த நாளில் அனைத்து சிவாலயங்களிலும் நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறும். சிதம்பரம் நடராஜர் கோவில், திருவாரூர் தியாகராஜ பெருமான் ஆலயங்களில் இந்த நிகழ்வு வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

    ஒரு முறை திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருந்த மகாவிஷ்ணு, திடீரென்று "ஆகா.. அற்புதம்" என்று சத்தம் போட்டு கூறினார். அவர் அப்படி பரவசம் அடைந்ததற்கான காரணம் என்ன என்று, மகாவிஷ்ணுவின் பாதத்தில் அமர்ந்திருந்த மகாலட்சுமிக்கும், மகாவிஷ்ணுவை தாங்கியபடி இருந்த ஆதிசேஷனுக்கும் புரியவில்லை. அவர்கள் இருவரும், திருமாலின் பரவச நிலைக்கு என்ன காரணம் என்பதுபற்றி அவரிடமே கேட்டனர். அதற்கு மகாவிஷ்ணு, "திருவாதிரை நாளான இன்று, சிவபெருமான் ஆடிய ஆனந்தத் தாண்டவத்தை ஞானக் கண்ணால் பார்த்தேன். அதுதான் என் பரவசத்திற்கு காரணம்" என்றார்.

    ஈசனின் ஆனந்தத் தாண்டவம் பற்றி திருமால் சொல்லச் செல்ல, ஆதிசேஷனின் உடல் சிலிர்த்தது. அவருக்கும் சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தை காண வேண்டும் என்ற ஆவல் உருவானது. ஆதிசேஷனின் மன ஓட்டத்தைப் புரிந்துகொண்ட மகாவிஷ்ணு, "ஆதிசேஷா.. உன் மனம் நினைப்பதை நான் அறிவேன். பூலோகத்தில் பிறந்து ஈசனை நினைத்து தவம் இருந்தால், உனக்கு அந்த ஆனந்தத் தாண்டவ தரிசனம் கிடைக்கும், போய் வா" என்று அருளினார்.

    அதன்படியே ஆதிசேஷன், பூமியில் பதஞ்சலி முனிவராக பிறந்தார். இடுப்பு வரை மனித உடலும், இடுப்புக்குக் கீழே பாம்பு தோற்றமும் கொண்டவராக, அவரது உருவம் இருந்தது. பலகாலம் பூமியில் தவம் இருந்ததன் பலனாக, பதஞ்சலி முனிவருக்கு சிதம்பரம் ஆலயத்தில் இறைவனின் ஆனந்தத் தாண்டவத்தைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. அவருக்கு சிவபெருமான் தன்னுடைய ஆனந்தத் தாண்டவத்தைக் காட்டி அருளினார். அப்போது பதஞ்சலி முனிவர், "இறைவா.. இந்த திருக்காட்சியை பூலோக மக்களுக்கும் காட்டி, அவர்கள் முக்தியடைய வழிகாட்ட வேண்டும்" என்று வேண்டினார். அதன்படியே, ஆண்டுதோறும் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தில், ஆருத்ரா தரிசனம் நடைபெற்று வருகிறது.

    விரதம் இருக்கும் முறை

    ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாக பிரித்துள்ளனர். அதில் ஆடி முதல் மார்கழி வரையான தட்சிணாயன புண்ணியகாலத்தின் கடைசி மாதமாக இருப்பது, மார்கழி. இந்த மாதம் தேவர்களின் அதிகாலைப் பொழுதாகும். அதாவது அவர்களின் பிரம்ம முகூர்த்த நேரம் என்றும் இந்த மாதத்தை சொல்வார்கள். இந்த மாதத்தில் வரும் பவுர்ணமியுடன் கூடிய திருவாதிரை நட்சத்திர நாளில்தான், திருவாதிரை நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலையிலேயே எழுந்து நீராடி, சிவநாமம் உச்சரித்து உடல் முழுவதும் திருநீறு தரிக்க வேண்டும்.

    பின்னர் சிவாலயம் சென்று, நடராஜரையும், சிவகாமி அம்மனையும் வணங்க வேண்டும். காலையில் ஆலயத்தில் நடைபெறும் தாண்டவ தீபாராதனையைக் காண வேண்டும். பின்னர் வீட்டிற்கு வந்து இறைவனுக்கு திருவாதிரை களி படைத்து, அதை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். பகலில் உணவருந்தக் கூடாது. அன்று முழுவதும் சிவபுராணம் எனப்படும் திருவாசக பாடல்கள், தேவாரம் போன்றவற்றை பக்தியுடன் பாராயணம் செய்ய வேண்டும். இரவில் எளிமையான உணவை உட்கொண்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

    திருவாதிரை விரதத்தை மார்கழி திருவாதிரையில் தான் அனைவரும் கடைப்பிடிப்பர். ஆனால் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரை நட்சத்திர தினத்திலும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். தொடர்ச்சியாக ஒரு வருடம் திருவாதிரை நோன்பு இருப்பவர்களுக்கு, வாழ்வுக்குப் பின் கயிலாயத்தில் வாழும் பெரும் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    • திருவாதிரை விரதம் தீர்க்க சுமங்கலி வரம் தரும் விரதமாக கடைபிடிக்கப்படுகிறது.
    • சிறப்பு வாய்ந்த ஆருத்ரா தரிசனம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை. திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாளில், உபவாசம் இருந்து நோக்கும் விரதத்திற்கு மகிமை உண்டு. அது மட்டுமல்ல மாதங்களில் சிறப்பு மிக்க மாதம் மார்கழி. அந்த மார்கழி மாதம் வரும் திருவாதிரை நாளில் மாங்கல்ய நோன்பு இருந்தால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும் என்பது காலம் காலமாக கடைபிடித்து வரும் ஐதீகம். திருவாதிரை விரதம் தீர்க்க சுமங்கலி வரம் தரும் விரதமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து தாலி சரடு மாற்றி சிவபெருமானை வழிபடுவதன் மூலம் கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    மார்கழி மாதம் திருவாதிரை திருநாளில் இந்த விரதம் இருப்பது கொங்கு மண்டலத்தில் சிறப்பானதாகும். பெண்கள் கணவனின் நீண்ட ஆயுளுக்காக சோமவார விரதம் இருப்பார்கள். ஆவணி மாதத்தில் வரலட்சுமி நோன்பு விரதம் இருந்து கணவனுக்காக அம்மனிடம் வேண்டிக்கொள்வார்கள். அதேபோல் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்பதற்காக பெண்கள் மாசி மாதத்தின் இறுதி நாளில் காரடையான் நோன்பு இருந்து இறைவனை வழிபடுகின்றனர். அதுபோலவே மார்கழி மாதம் திருவாதிரை நாளான, இன்று (வியாழக்கிழமை) முழுநிலவும் இணைந்திருக்க விரதம் இருந்து சிவபெருமானை வழிபடுவதன் மூலம் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    மாங்கல்ய விரதம்

    திருமணமாகி புகுந்த வீட்டிற்கு சென்ற பெண்களை பிறந்த வீட்டுக்கு அழைத்து தம்பதி சமேதராக விருந்து படைத்து வாழ்த்தி திருவாதிரை களி கொடுத்து தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் என்று வாழ்த்துகின்றனர். முதல் நோன்பு பெண் வீட்டில் தான் விஷேசமாக கடைபிடிப்பார்கள். இதில் மஞ்சளில் விநாயகர் செய்து அருகம்புல் சாற்றி, விபூதி, சந்தனம், குங்குமம், இட்டு விநாயகர் முன், ஒரு தட்டில் மாங்கல்ய சரடுகள் வைக்கப்படும். மேலும் அரசாணிக்காய், பாகற்காய், அவரைக்காய் உள்ளிட்ட முக்கியமான 18 வகை காய்கறிகள் சமைத்து, திருவாதிரை களி, பச்சரிசி அடையும் சேர்த்து விநாயகருக்கு படைத்து வழிபட்டு அதன்பின் உள் கழுத்து சரடு எனும் மாங்கல்ய சரடை அணிந்து நோன்பு நிறைவு பெறும்.

    இதில் வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்ய கயிறு, வளையல், மஞ்சள், பூ, குங்குமம் உள்ளிட்டவை கொடுப்பது வழக்கம். அதேபோல சிறுவர்கள், ஆண்கள் தங்களது கைகளில் மஞ்சள் கயிறு கட்டி அவர்களும் மாங்கல்ய நோன்பில் பங்கெடுத்து மகிழ்வர். இதையடுத்து, திருவாதிரை நட்சத்திரத்தன்று (இன்று) இரவு சிவாலயங்களில் சிவபெருமான், பார்வதி தேவிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்து, மறுநாள் ஆருத்ரா தரிசனம் கோலகலமாக கொண்டாடப்படுகிறது. இதில் அனைவரும் பங்கேற்று, சிவன் பார்வதி அருள்பெறுவர். இச்சிறப்பு வாய்ந்த ஆருத்ரா தரிசன விழா சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. சிறப்பு வாய்ந்த ஆருத்ரா தரிசனம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    • சிவபெருமானுக்கு பிரதோஷம் மிகவும் உகந்த நாளாகும்.
    • இன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் துன்பங்கள் பறந்தோடும்.

    மார்கழி மாதத்தில் வரும் பிரதோஷ தினங்கள் மிகவும் சிறப்பானது. அப்பிரதோஷ தினங்களின் சிறப்பு என்ன என்பதையும், அப்பிரதோஷ வழிபட்டால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

    சூரியன் தனுசு ராசியில் பிரவேசிக்கும் மாதமே மார்கழி மாதம் ஆகும். ஜோதிட சாஸ்திரப்படி தனுசு ராசியின் அதிபதியாக குரு பகவான் இருக்கிறார். எனவே இம்மாதத்தில் வரும் பிரதோஷ தினம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    புத பகவானின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் நாள், புதன்கிழமை. இந்தநாளில் வரும் பிரதோஷ தினமான இன்று வழிபாடு செய்யும் மிதுனம், கன்னி ராசி மற்றும் லக்னத்தை சேர்ந்தவர்களுக்கும், புதன் தசை - புத்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக தோஷம் நீங்கும். புதன் நீச்சம் பெற்றதால் வரும் கெடுபலன் நீங்கும். கல்வி சிறக்கும். அறிவு வளரும். படிப்பில் ஆா்வம் இல்லாதவர்கள் கூட நன்றாக படிப்பார்கள்.

    அப்படியான பிரதோஷ தினத்தன்று மாலையில் 4 மணியிலிருந்து 6 மணிக்குள்ளாக சிவன் கோயிலுக்கு சென்று, பிரதோஷ தினத்தில் செய்யப்படும் சோம சூக்த வலம் வந்து நந்தி பகவானையும், சிவனையும், சண்டிகேஸ்வரரையும் வணங்க வேண்டும். பின்பு கோயிலில் உள்ள நவகிரக சந்நிதியில் இருக்கும் குரு பகவானை வணங்கி, பிறகு சிவனுக்கான பிரதோஷ வழிபாடுகள் செய்து கோயிலை மூன்று முறை வளம் வந்து வணங்கி இல்லம் திரும்ப வேண்டும்.

    "பொன்" எனப்படும் தங்கத்திற்கு அதிபதி குரு பகவான் ஆவார். எனவே மார்கழி மாதத்தில் புதன் கிழமையில் வரும் சிறப்பான இன்றைய பிரதோஷத்தின் போது குரு பகவானையும், சிவபார்வதியையும் வணங்குவதால் உங்களுக்க பொன்னாபரணங்களின் சேர்க்கை உண்டாகும். வறுமை நிலை நீங்கும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். பிறருடனான பகை நீங்கும்.

    புதனை வலிமைப்படுத்த இன்று பச்சை பயிறு, சுண்டல் தானம் செய்யுங்கள்.

    • முருகனுக்கு உகந்த நாள் செவ்வாய்க்கிழமை.
    • செவ்வாய்க்கிழமை விரதத்திற்கு பலன் அதிகம் உண்டு.

    வருவாய் அதிகரிக்க வேண்டுமானால் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் சொல்வார்கள்.

    பொருளாதார நிறைவை வழங்குவது அங்காரகன்தான். அந்த அங்காரகனுக்குரிய தெய்வமாக விளங்குவது முருகப்பெருமான் மற்றும் சக்தி தேவி.

    முருகப்பெருமான், சக்தி தேவி, அம்பிகைக்கு உகந்த நாளான செவ்வாய்கிழமையில் இந்த தெய்வங்களை வணங்கினால் கவலைகள் அகலும்.

    செந்நிற ஆடை அணிந்து வழிபாட்டில் பங்கேற்பது; நைவேத்தியமாக அன்றை தினம் தங்குதடை இல்லாத வாழக்கையும், தன்னிகரில்லாத அளவு புகழும், மங்கல வாய்ப்புகளையும், மாபெரும் சக்தியையும் பொங்கிவரும் உள்ளத்தில் தன்னம்பிக்கையையும், செந்நிற கனிவைத்து தீபாராதனை செய்ய வேண்டும்.

    கார்த்திகை நட்சத்திரம் அல்லது விசாக நட்சத்திரம் அல்லது விசாக நட்சத்திரம் அமைந்த செவ்வாய்க்கிழமை விரதத்திற்கு பலன் அதிகம் உண்டு.

    வேலை வணங்குவதே வேலை எனச் சொல்லி வீட்டில் வேல் வழிபாடும் செய்யலாம். வீட்டு பூஜையறையின் நடுவில் வேல் வைத்து இருபுறமும் இரு விளக்குகள் வைத்து ஒரு விளக்கில் மூன்று திரிகளும், மற்றொரு விளக்கில் மூன்று திரிகளும் ஆக ஆறு தீபமிட்டு ஆறுமுக வழி செய்து வந்தால், சீரும் சிறப்பும் வந்து சேரும்.

    இந்த விரதத்தை மேற்கொள்ளும் போது, முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் உள்ள படம் வழிபட வேண்டும். முன்னதாக விநாயகர் படத்தையும் வைத்து வழிபட வேண்டும்.

    அன்னதான பிரியர் முருகன் என்பதால், செவ்வாய்கிழமை அன்னதானம் வழங்கினால் முருகனின் முழு அருளுக்கு பாத்திரமாகலாம்.

    செவ்வாய்கிழமை அன்று ஒரு பொழுது விரதம் இருந்து வந்தால் ஒன்பது வாரத்தில் உங்களுக்கு நல்லது நடக்கும். வியாபாரம் செய்பவர்கள் கண்டிப்பாக செவ்வாய் வழிபாட்டை செய்து வந்தால் வியாபாரம் பெரிய அளவில் விருத்தி செய்யலாம். நல்ல தைரியத்தை கொடுத்து நாம் எடுத்து வைக்கும் எல்லா வியாபாரமும் வெற்றியை தரும்.

    செவ்வாய்க்கிழமை முருகனுக்கு சிறப்பானது என்றால் அதை விட சிறப்பானது மார்கழி மாத செவ்வாய் கிழமை முருகன் வழிபாடு. இன்று முருகனுக்கு விரதம் இருந்து மாலையில் முருகன் ஆலயத்திற்கு சென்று நெய் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தால் உங்கள் துன்பங்கள் பறந்தோடும். எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும்.

    • வைகுண்ட கதவுகள் திறக்கும் நாளாகும்.
    • பெருமாளை விரதம் இருந்து வழிபட உகந்த நாள்.

    இந்துக்களின் மிக முக்கிய விசேஷங்கள், பண்டிகைகளில் ஒன்று தான் வைகுண்ட ஏகாதசி. இந்த முக்கிய நிகழ்வு மார்கழி மாதத்தில் நடைபெறுகிறது. நம் மனதை குளிர்விக்க வைக்கும் விரதம் தான் வைகுண்ட ஏகாதசி விரதம்.

    இறைவனை சரணடையும், நல்லவர்களுக்கு வைகுண்ட பதவி கொடுப்பதற்காக வைகுண்ட கதவுகள் திறக்கும் நாளாகும். மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினொன்றாம் நாள், 'வைகுண்ட ஏகாதசி' என இந்துக்களால் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த அற்புத திருநாள் கோலாகலமாக நடைபெறுகிறது.

    பகல் பத்து, இரா பத்து என இருபது நாள் திருவிழாவாகவும், பகல் பத்து முடியும் பத்தாம் நாள் வைகுண்ட ஏகாதசி என கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    • வைகுண்ட ஏகாதசியன்று விஷ்ணுவை நினைத்து விரதம் இருக்கவேண்டும்.
    • மார்கழி வளர்பிறையில் வருவது 25-வது ஏகாதசி.

    கயிலாயத்தை ஆண்ட சிவபெருமான், ஒருமுறை பார்வதி தேவிக்கு ஏகாதசி விரதத்தின் மகிமையை எடுத்துக் கூறினார். ஏகாதசி விரதத்திற்கு பாவத்தை போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசி விரதத்தால் பெறலாம். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்றார்.

    உள்ளத்தின் பக்தி உணர்வுகளையும், உடலின் ஆரோக்கியத்தையும் இணைப்பது விரதம். இதனால் உள்ளத் தூய்மை, உடலின் அகத்தூய்மை முதலிய பல நன்மைகள் உண்டாகின்றன. எனவே அனைத்து ஏகாதசியன்றும் பலர் விரதம் காக்கின்றனர். சிறப்பாக பலர் வைகுண்ட ஏகாதசி விரதம் மேற்கொள்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று விஷ்ணுவை நினைத்து விரதம் இருக்கவேண்டும். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முதல் நாளான தசமி அன்று ஒரு பொழுது உணவு உண்ண வேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும், உறங்காமலும் இருக்கவேண்டும்.

    மறுநாளான துவாதசியன்று சூரிய உதயத்திற்குள் நீராடி துளசி தீர்த்தம் அருந்த வேண்டும். பாரணை என்னும் பலவகை காய்கறிகளுடன் கூடிய உணவை உண்ண வேண்டும். அகத்திக் கீரை, நெல்லிக்காய், சுண்டைக் காய் ஆகியவை உணவில் அதிகம் இடம்பெறுதல் அவசியம். காலையிலேயே சாப்பாட்டை முடித்துவிட்டு பகல் முழுவதும் உறங்காமல் நாராயண நாமத்தை ஜெபித்தபடி இருக்க வேண்டும்.

    வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் சேர்வார்கள். மாதத்திற்கு இரண்டு ஏகாதசிகளாக வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வருகின்றன. மார்கழி வளர்பிறையில் வருவது 25-வது ஏகாதசி. இதுவே வைகுண்ட ஏகாதசி. இதை மோட்ச ஏகாதசி, பெரிய ஏகாதசி, விரதம் இருப்பவர்களுக்கு அளவற்ற பலன்களை தருவதால் முக்கோடி ஏகாதசி என்றும் கூறுவர். தேவர்களுக்கு இடைவிடாத துன்பத்தை தந்த முராசுரனை விஷ்ணு கொன்ற நாளும் இதுவாகும்.

    • திதி சூன்ய தோஷம் மற்றும் பித்ரு தோஷம் நீங்கும்.
    • பல உயர்வான நற்பலன்கள் ஏற்படும்.

    ஏகாதசிக்கு நிகரான விரதம் இல்லை என்ற வாக்கியமே ஏகாதசி விரதத்தின் மகிமையை நமக்கு சொல்லும். மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. அன்றுதான், அர்ஜூனனுக்குக் கீதையை உபதேசம் செய்தார் கிருஷ்ண பரமாத்மா. இந்த நாளை, கீதா ஜெயந்தி என்று கொண்டாடுகின்றனர்.

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீபெரும்புதூர், திருப்பதி மற்றும் அனைத்து வைணவ திவ்ய தேசங்களிலும் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும். அதனை தொடர்ந்து சென்னை பார்த்தசாரதி கோவில், திருமயிலை கேசவ பெருமாள், மாதவ பெருமாள், ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் போன்ற வைணவ தலங்களிலும் வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாடப்படும்.

    ஏகாதசி விரதம் இருந்து விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது மிகவும் விசோசமாகும். விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திரம் பாராயணம் செய்வதால் விஷ்ணுவை அதி தேவதையாக கொண்ட புதன் கிரக தோஷங்களும் சனி கிரக தோஷங்களும் நீங்கி பல உயர்வான நற்பலன்கள் ஏற்படும். மேலும் திதி சூன்ய தோஷம் மற்றும் பித்ரு தோஷம் நீங்கும். எனவே வைகுண்ட ஏகாதசி தினத்தன்று விரதமிருந்து விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து அந்த பரந்தாமனின் அருளால் நீங்காத செல்வத்தை பெற்று உன்னதமான வாழ்வை பெறுவோமாக.

    • நம்பினோர்க்கு சாந்த வடிவமானவர்.
    • தலை விதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர்.

    அனைத்து சிவாலயங்களிலும் கால பைரவஅஷ்டமி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். குறிப்பாக காசி பைரவர் ஆலயம், இலுப்பைக்குடி சொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம், சீர்காழி சட்டைநாதர் ஆலயம், வாஞ்சியத்தில் யோக பைரவர் சந்நிதி, புதுவை இடையார் பாளையம் சொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் ஆகிய இடங்களில் பைரவருக்கான ஸ்ரீ ருத்ர ஹோமம், ஸ்ரீ பைரவர் ஹோமம் போன்றவை நடைபெறும்.

    காலபைரவர் அவதரித்த கால பைரவஅஷ்டமி நாளில் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டால் எல்லாவித கஷ்டங்களும் நீங்கி சகல சவுபாக்கியங்களும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

    ஆணவத்தை அழிக்க சிவபெருமான், ஸ்ரீ கால பைரவராக அவதரித்த நாளே கால பைரவஅஷ்டமி எனப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவரை வழிபடுவது சிறப்பானதாகும்.

    அந்த நாளில் திருமகளின் எட்டு வடிவங்களும் பைரவரை வணங்குவதாக ஐதீகம். அதிலும் அவர் அவதரித்த கால பைரவஅஷ்டமி நாளில் அவரை வணங்குவது, சிறப்பு பூஜைகள், யாகங்களில் கலந்து கொள்வது என்பது சகல வித செல்வங்களையும் அள்ளித்தரும்.

    சொர்ண கமல ரேகை அமைந்திருக்கும் சொர்ணாகர்ஷண பைரவ மூர்த்தியை வணங்குவது இன்னும் சிறப்பானது. ஸ்ரீ பகவத்பாதாள் ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த பைரவ வழிபாடு தொன்மையான பிணி தீர்க்கும் வழிபாடு.

    ராகு கேதுவை முப்புரி நூலாக அணிந்து இருக்கும் பைரவ மூர்த்தி மழு, பாசம், சூலம், தண்டம் ஏந்தி காண்பவரை மெய்சிலிர்க்கச் செய்யும் வடிவம் கொண்டவர். நம்பினோர்க்கு சாந்த வடிவமானவர்.

    காலத்தின் கடவுளான கால பைரவர் தலை விதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர். எனவே துன்பப்படும் எல்லா மக்களும் நாளை வரும் கால பைரவஅஷ்டமி நாளில் பைரவருக்கு வில்வம் அல்லது செவ்வரளி மாலை சூட்டி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி , விபூதி அபிஷேகம் செய்து வழிபட்டால் எல்லா வளங்களும் பெறலாம்.

    மூன்று கண்கள் இருக்கும் தேங்காய் மூடியில் ஐந்து எண்ணெய்களை ஊற்றி விளக்கிடுவதும் விசேஷம். நெய் தீபமும், மிளகுத் திரி தீபமும் சில ஆலயங்களில் சிறப்பாக ஏற்றப்படுகிறது. பைரவருக்கு சந்தனக்காப்பு, வடைமாலை சாத்துவதும் உண்டு.

    பைரவ லட்சார்ச்சனை, ஸ்ரீருத்ர யாகம், ஸ்ரீபைரவ ஹோமம் போன்றவற்றில் கலந்துகொள்வது மிகவும் விசேஷம். எட்டு விதமான மலர்களால் அர்ச்சித்து, பைரவரின்

    "ஓம் கால காலாய வித்மகே

    கால தீத்தாய தீமகீ

    தந்நோ கால பைரவ பிரசோதயாத்:"

    என்ற காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து வழிபட்டால், தீராத பிணிகளும் தீரும்; கிடைக்காத செல்வங்களும் கிடைக்கும். எனவே, கால பைரவஅஷ்டமி தினத்தில் அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று பைரவரை வழிபடுவோம். அதன் பயனாக, எதிரிகளின் தொல்லை, வறுமைப் பிணி போன்ற பிரச்சினைகள் எல்லாம் நீங்கி, லட்சுமி கடாட்சத்துடன் சகல செல்வங்களும் பெற்று சிறப்புற வாழலாம்.

    ×