search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி திருக்கோவில்
    X
    பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி திருக்கோவில்

    இந்த குருப்பெயர்ச்சிக்கு செல்ல வேண்டிய பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி திருக்கோவில்

    பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி திருக்கோவிலில் குருப்பெயர்ச்சி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். தட்சிணாமூர்தியை வணங்கினால் குருவின் அருள் கிட்டும். குருதோஷம் விலகும்.
    கைலாய மலையில் சிவபெருமான் பார்வதியுடன் வீற்றிருந்தார். அப்போது அங்கு கார்த்திகை பெண்கள் ஆறு பேர் அங்கு வந்தனர். அவர்கள் சிவனிடம் தங்களுக்கு அஷ்டமாசித்தியை உபதேசிக்குமாறு வேண்டினர். அவர்களிடம் சிவபெருமான் சிவயோகிகள் யாரும் சித்திகளை விரும்ப மாட்டார்கள். ஆனால் அவர்களிடம் இச்சித்திகள் நிழல்போல் உடலோடு ஒட்டிக் கொண்டு அவர்களின் பெருமையை உலகிற்கு உணர்த்தும் என்றார். அப்போது பார்வதி தேவி அவர்களுக்கு அஷ்டமாசித்தியை உபதேசிக்கும்படி சிவனிடம் வேண்டினார். இதனால் சிவன் கார்த்திகை பெண்களிடம் உங்களுக்கு பராசக்தியாக விளங்கும் பார்வதிதேவி அஷ்டமாசித்தியை உபதேசிப்பார் என்று கூறி பார்வதியிடம் அவர்களுக்கு இச்சித்திகளை உபதேசிக்கும் படி கேட்டுக்கொண்டார்.

    ஆனால் கார்த்திகை பெண்களோ, பார்வதிதேவியை சிந்தனை செய்யாமல் அவள் சொன்ன அஷ்டமா சித்தியை பற்றிய உபதேசத்தை கேட்கவில்லை. இதனால் கோபம் கொண்ட சக்தி கார்த்திகை பெண்களை பாறைகளாக கிடக்க கடவீர்கள் என சாபமிட்டார். இதை கண்டு அஞ்சிய பெண்கள் சிவபெருமானிடம் சாபவிமோசனம் வேண்டினர். அவர்களிடம் சிவபெருமான் நீங்கள் பட்டமங்கலத்தில் ஆலமரத்தரடியில் கற்பாறைகளாக இருங்கள். யாம் மதுரையில் இருந்து குருவடிவில் வந்து உங்களுக்கு சாபவிமோசனம் கொடுப்போம் என்றார்.

    அதன்படி ஆறுகார்த்திகை பெண்களும் அங்கு பாறைகளாக ஆயிரம் ஆண்டுகள் கிடந்தனர். ஏற்கனவே கூறியபடி சிவபெருமான் வந்தபோது குருவடியில் பட்டமங்கலம் வந்து கார்த்திகை பெண்களின் சாபத்தை போக்கினார். பின்னர் அவர்களுக்கு அஷ்டமா சித்திகளை உபதேசித்தார். அதன்பின் கார்த்திகை பெண்கள் சிவனையும் பார்வதியையும் பூஜித்தனர்.

    கார்த்திகை பெண்களுக்கு அஷ்டமாசித்தியை உபதேசித்த சிவபெருமான் இங்கு தட்சிணாமூர்த்தியாக ஆலமரத்தடியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பட்டமங்கலம் சுந்தரேசுவரர் கோவிலுக்கு வெளியில் இந்த தட்சிணாமூர்த்தி சன்னதி உள்ளது.

    இதற்கிடையே பார்வதிதேவி கார்த்திகை பெண்களுக்கு அஷ்டமாசித்தியை உபதேசிக்கும் படி சிவனுக்கு பரிந்துரை செய்ததால் சிவன் கோபத்திற்கு ஆளாகி காளியாக உருவெடுத்து பட்டமங்கலத்தில் நாவல் மரத்தடியில் கோவில் கொண்டாள். அந்த காளிக்கு நவ்வலடி காளி என்று பெயர். அவளுக்கும் சிவபெருமான் விமோசனம் கொடுத்தார். அதன்பின் அவர் காளி வடிவம் நீங்கி சவுந்தரி அம்மனாக காட்சி அளித்தார். இத்தலத்தில் சுந்தரேஸ்வரராக சிவனும், மீனாட்சியாக பார்வதியும் உள்ளனர்.

    ஐந்து முகங்கள் கொண்ட முருகன் சன்னதி இங்குள்ளது. சிவனின் அம்சம் கொண்டவர் என்பதால் சிவனுக்குரிய ஐந்து முகங்களுடன் இருக்கிறார். அருகில் வள்ளி, தெய்வானை உள்ளனர்.

    எல்லா கோவில்களிலும் தெற்கு நோக்கி தட்சிணாமூர்த்தி இருப்பார். ஆனால் இங்கு கிழக்கு நோக்கி அருள்கிறார். கல்லால் ஆன ஆலுமரத்தடியில்தான் தட்சிணாமூர்த்தி இருப்பார். ஆனால் இங்குதான் உண்மையான ஆலமரத்தடியில் உள்ளார். இவரை வியாழக்கிழமை களில் தட்சிணாமூர்த்தி யுடன், சன்னதிக்கு பின்புறமுள்ள ஆலமரத்தையும் சேர்த்து 12 முறை வலம் வந்தால் உயர்கல்வி யோகம் உண்டாகும். நல்ல மணவாழ்க்கையும் குழந்தைப்பேறும் அமையும். தல விருட்சமாக ஆலமரமும், தீர்த்தமாக பொற்றாமரை குளமும் உள்ளது.

    இங்கு வழக்கமாக வியாழக்கிழமை பக்தர்கள் ஏராளமானோர் சென்று வழிபடுவர். குருப்பெயர்ச்சி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். தட்சிணாமூர்தியை வணங்கினால் குருவின் அருள் கிட்டும். குருதோஷம் விலகும்.

    விசேஷ நாட்கள்: திருக்கார்த்திகை, மாசி மகம், மகாசிவராத்திரி. வியாழக்கிழமைகளில் பகல் 12.00  -1.30 மணி வரை அபிஷேகம்.

    நேரம்: காலை 6.30 - 12.30 மணி; மாலை 4.30 - 8.00 மணி.

    பட்டமங்கலத்துக்கு வந்து, அஷ்டமா சித்தி குரு பகவானையும், அவர் அமர்ந்தருளிய ஆலமரத்தையும் 108 முறை வலம் வந்து வணங்கினால் எண்ணற்ற பலன்கள் கைகூடும். பூப்படைதல் பிரச்சினை, தீராத நோய் ஆகியன நீங்கும்; குழந்தை பாக்கியம் கிடைக்கும்; திருமணத் தடை அகலும்; குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர் என்பது பக்தர்களது அசைக்க முடியாத நம்பிக்கை.

    குருப் பெயர்ச்சிக்கு முதல் நாள், 108 கலசங்களைக் கொண்டு சிறப்பு பூஜைகளும், குருப்பெயர்ச்சி அன்று, அஷ்டமா சித்தி குரு பகவானுக்கு 108 கலசாபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெறும்.
    Next Story
    ×