என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கோவில்கள்
14 தலைமுறைகள் புண்ணிய பேறு பெற்றவர்களே வருகை தர இயலும் திருக்கோவில்
- மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முப்பெருமைகளையும் கொண்டது.
- சர்வ தோஷங்களையும் போக்கும்
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் முக்கிய இடம் வகிப்பது ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் ஆகும்.
சோழ வளநாட்டில், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆலங்குடி என்ற ஊரில் ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் உள்ளது. சோழ வள நாட்டில் உள்ள தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் காவிரிக்கு தென் கரையில் உள்ள 127 தலங்களில் 98-வது தலமாக இந்த கோவில் விளங்குகிறது.
சர்வ தோஷங்களையும் போக்கும் இந்த கோவிலுக்கு வந்து முறையாக வழிபடுபவர்களுக்கு முற்பிறவியில் செய்த பாவத்தின் தீய விளைவுகள் நீங்கும் என்பது ஐதீகம்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற குருபரிகார தலமான ஆலங்குடி குருபகவான் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முப்பெருமைகளையும் கொண்டது.
தல வரலாறு
இத்திருத்தலம் காவிரி நதியின் கிளை நதியான வெட்டாறு கரையில் இருந்து சிறிது தூரத்தில் அமைந்துள்ளது. பார்க்கடலை கடைந்தபோது உண்டான ஆலகால விஷத்தை உண்டு தேவர்களை ஆபத்தில் இருந்து காத்ததால் ஆபத்சகாயேஸ்வரர் என்ற பெயர் இந்த கோவில் இறைவனுக்கு ஏற்பட்டது. இந்த ஊருக்கும் ஆலங்குடி என்ற பெயர் உண்டானது.
அசுரர்களால், தேவருக்கு நேர்ந்த இடையூறுகளை களைந்து காத்தமையால் இத்தல விநாயகருக்கு கலங்காமற் காத்த விநாயகர் என பெயர் ஏற்பட்டது. இந்த தலம் அம்மையார் தவம் செய்து இறைவனை திருமணம் செய்து கொண்ட சிறப்பையும், திருவிடைமருதூர் மகாலிங்கபெருமானுக்கு பரிகார தலமாகவும் விளங்குகிறது. மேலும் பஞ்ச ஆரண்ய தலங்களில் 4-வதாக சாயரட்சைக்கு உகந்த திருத்தலமாகவும் விளங்குகிறது.
தோஷ நிவர்த்தி
முசுகுந்த சக்கரவர்த்தியின் அமைச்சரான சிவ பக்தர் அமுதோகர் என்பவரால் இந்த கோவில் நிர்மானிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அமைச்சர் செய்த சிவ புண்ணியத்தில் பாதியை மன்னருக்கு தரும்படி மன்னர் கேட்க அதற்கு அமைச்சர் மறுப்பு தெரிவித்தார். இதனால் அமைச்சர் சிரச்சேதம் செய்யப்பட்டார். இதன் விளைவால் அரசனுக்கு தோஷங்கள் ஏற்பட இத்தல மூர்த்தியை வணங்கி வழிபட்டு தோஷ நிவர்த்தி பெற்றதாக வரலாறு கூறுகிறது.
இந்த கோவிலில் கலங்காமற் காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், காசி ஆரண்யேஸ்வரர், ஏலவார்குழலி அம்மை, உமையம்மை, குருதெட்சிணாமூர்த்தி ஆகிய தெய்வங்களின் சன்னதி உள்ளது. நவக்கிரகங்களில் உள்ள குருபகவானுக்கு பரிகார தலமாக இந்த கோவில் உள்ளது. இக்கோவிலின் தல விருட்சம் பூளைச்செடி ஆகும்.
சுயம்பு மூர்த்தி
இத்தலத்து இறைவன்(சிவன்) சுயம்பு மூர்த்தியாக உள்ளார். எனவே இந்த கோவிலின் காலத்தை கணிக்க இயலவில்லை. இந்த கோவிலில் உள்ள இறைவனை விஸ்வாமித்திரர், அஷ்டதிக்பாலகர்கள், அகஸ்தியர், புலஸ்தியர், காகபுஜண்டர், சுகர்பிரம்ம மகரிஷி மற்றும் ஆதிசங்கரர் ஆகியோர் பூஜித்துள்ளனர்.
மேலும் அம்மையின் திருமணத்திற்கு வந்த திருமால், பிரம்மா, இலக்குமி, கருடன், அய்யனார், வீரபத்திரர் ஆகியோர் தங்கள் பெயரால் லிங்கங்கள் நிறுவி பூஜித்து வழிபட்ட தலமாகவும் இந்த கோவில் உள்ளது. முசுகுந்த சக்கரவர்த்தி, சுவாசனன் மற்றும் சுந்தரர் ஆகியோரும் இத்தல இறைவனை வழிபட்டு உள்ளனா். திருஞானசம்பந்தர் தமது பாடல்களால் இத்தலத்தை சிறப்பித்து இரண்டாம் திருமுறையில் பாடியுள்ளார்.
தீர்த்தங்கள்
இத்திருத்தலத்தை சுற்றி 15 தீர்த்தங்கள் உள்ளன. முக்கியமாக திருக்கோவிலை சுற்றி அகழியாக அமைந்துள்ள அமிர்த புஷ்கரணி என்ற தீர்த்தம் மிகவும் சிறப்புடையதாகும்.
பிரம்ம தீர்த்தம், லக்குமி தீர்த்தம், இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், யம தீர்த்தம், நிருதி தீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்த்தம், குபேர தீர்த்தம், ஈசான தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அமிர்த புஷ்கரணி, ஞான கூபம் கிணறு, பூளை வள ஆறு ஆகிய 15 தீர்த்தங்கள் உள்ளன.
வழிபடும் முறை
இக்கோவிலுக்கு 14 தலைமுறைகள் புண்ணிய பேறு பெற்றவர்களே வருகை தர இயலும். முதலில் கலங்காமற் காத்த விநாயகரை வணங்கி பின்னர் கொடி மரம் சென்று அங்குள்ள துவஜ கணபதியை வணங்கி நேராக சென்று சாமியை (ஆபத்சகாயேஸ்வரர்) தரிசிக்க வேண்டும்.
பின்னர் குரு தெட்சிணாமூர்த்தியை வணங்கி சங்கல்பம் செய்து அர்ச்சனை போன்றவற்றை முடித்து பிரகாரத்தில் உள்ள சோமாஸ்கந்தர், முருகன், மகாலெட்சுமி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், உற்சவர் குருமூர்த்தி ஆகியோரை வழிபட்டு ஏலவார் குழலி அம்மை மற்றும் சனிபகவானை தொழுது கொடிமரத்தில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.
தொடர்ந்து குருபரிகாரமாகிய 24 நெய் தீபங்களை தீபம் ஏற்றும் இடத்தில் ஏற்றி கோவிலை 3 முறை வலம் வந்து ஒவ்வொரு முறையும் கொடி மரத்தின் கீழே விழுந்து நமஸ்காரம் செய்து பரிகாரத்தை நிறைவு செய்ய வேண்டும்.
பிரசித்தி பெற்ற குருப்பெயர்ச்சி விழா
ஆலங்குடி குருபகவான் கோவிலில் தினசரி 4 கால பூஜைகள் நடைபெறுகிறது. முதலில் காலசந்தி காலை 8 மணி முதல் 8.30 மணி வரையும், 2-வதாக உச்சிக்காலம் நண்பகல் 12.30 மணி முதல் 1 மணி வரையும், 3-வது சாயரட்சை மாலை 5.30 மணி முதல் 6 மணி வரையும், 4-வதாக அர்த்தசாமம் இரவு 8.30 மணி முதல் 9 மணி வரையும் நடக்கிறது.
ஆலங்குடி குருபகவான் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் குருப்பெயர்ச்சி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள். இதற்காக தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஆலங்குடி குருபகவான் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
கோவிலுக்கு செல்வது எப்படி?
ஆலங்குடி குருபகவான் கோவில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ரெயில் நிலையத்துக்கு வடக்கே 7 கிலோ மீட்டர் தொலைவிலும், கும்பகோணம்-மன்னார்குடி பஸ் மார்க்கத்தில் கும்பகோணத்தில் இருந்து தெற்கே 17 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
இந்த கோவிலுக்கு எர்ணாகுளம், கோவை, சென்னை ஆகிய ஊர்களில் இருந்து தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் ெரயில் மார்க்கமாக வர வசதி உள்ளது. குறிப்பாக எர்ணாகுளம் விரைவு ரெயில் மூலம் நீடாமங்கலம் வந்து பின்னர் கும்பகோணம் செல்லும் பஸ் மூலம் 7-வது கிலோ மீட்டரில் உள்ள ஆலங்குடி குருபகவான் கோவிலை அடையலாம்.
பஸ் மூலம் வருபவர்கள் தஞ்சாவூர், நீடாமங்கலம் வழியாக ஆலங்குடிக்கு வரலாம். தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் மதுரையில் இருந்து தஞ்சாவூர் வந்து அங்கிருந்து நீடாமங்கலம் வழியாக பஸ் மூலம் ஆலங்குடிக்கு செல்ல வேண்டும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்