search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    எட்டு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கும் ஏகெளரியம்மன் திருக்கோவில்- தஞ்சாவூர்
    X

    எட்டு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கும் ஏகெளரியம்மன் திருக்கோவில்- தஞ்சாவூர்

    • காவல் தெய்வமாகவும், எல்லை தெய்வமாகவும் திகழ்கிறாள்.
    • இந்த அம்மனை வணங்கினால் தைரியம் கிட்டும் என்பது ஐதீகம்.

    தஞ்சாவூருக்கு அருகில் வல்லம் எனும் ஊருக்கு அருகில் அமைந்துள்ளது ஏகெளரியம்மன் திருக்கோவில். சோழர்கள் காலத்துக் கோவில். கரிகாற் சோழன் காலத்துக் கோவில். சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்த ஆலயம் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள். சோழரின் கட்டிடக் கலைக்கு எடுத்துகாட்டாக விளங்கும் கோவிலின் கருவறை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது.

    பெண் என்றால் இளப்பமாகப் பார்ப்பது' இந்தக் காலத்தில்தான் என்றில்லை… அந்தக் காலத்திலும் இருந்திருக்கிறது. தஞ்சாசுரன் எனும் கொடிய அரக்கனும் அப்படித்தான் நினைத்தான். தஞ்சாசுரனின் இந்த நினைப்பு, சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்ய வைத்தது. தவத்தின் பலனாக வரம் கிடைக்கவேண்டும் என விரும்பினான். சிவபெருமானும் வரம் தர முன்வந்தார். அவனும் வரம் கேட்டான். 'சிவபெருமானாகிய நீங்கள், மகாவிஷ்ணு, பிரம்மா என மூவராலும் எனக்கு மரணம் வரக்கூடாது. மேலும் எந்த ஆணாலும் எனக்கு உயிர் போகக்கூடாது. பெண்ணைத் தவிர யாராலும் எதுவாலும் நான் மாண்டு போகக்கூடாது. இந்த ஊர் என் பெயரால் அழைக்கப்பட வேண்டும்' என்று வரம் கேட்டான். அப்படியே தந்தார் சிவனார்.

    அவ்வளவுதான். பேயாட்டம் ஆடினான் தஞ்சாசுரன். தேவர்கள் கலங்கினார்கள். முனிவர்கள் நடுங்கினார்கள். மக்கள் எல்லோரும் கண்ணீர் விட்டு கதறினார்கள். தேவர்களும் முனிவர்களும் பிரம்மாவை சந்தித்து முறையிட்டார்கள். மகாவிஷ்ணுவை சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்கள். பிரம்மாவும் மகாவிஷ்ணுவும் சிவபெருமானை சந்தித்து வணங்கினார்கள். 'எந்த ஆணாலும் உயிர் போகக் கூடாது என்றும் நம் மூவராலும் உயிர் போகக் கூடாது என்றும் அவன் வரம் கேட்டான். நீங்களும் கொடுத்துவிட்டீர்களே… இது நியாயமா? என்ன செய்வது?' என்று வேண்டினார்கள். சிவபெருமான், உமையவளைப் பார்த்தார். அழைத்தார். பார்வதிதேவி புரிந்துகொண்டார்.

    தன் வாகனமான சிங்கம் கர்ஜித்து வந்தது. அதில் அமர்ந்துகொண்டாள். கௌரி காளியானாள். எண்கரங்களிலும் ஆயுதங்கள் ஏந்தி, ரத்தச் சிவப்பேறிய கண்களுக்குள் கோபம் கொப்பளிக்க, தஞ்சன் முன்பு தோன்றினாள். தஞ்சன் வெறிபிடித்து அலறினான். யுத்தத்துக்குத் தயாரானான். வில் வளைத்து மழையாகப் பாணங்களை தொடுத்தான். தேவி தன் சிறு அசைவால் அந்த பாணங்களைப் புறந்தள்ளினாள். சிம்மத்தின் மீதேறி அமர்ந்து கர்ஜித்தாள். தஞ்சனின் மார்பு மீது கதையால் அடித்து உதைத்துத் தள்ளினாள். மாய உருவங்கள் எடுத்து அம்பிகையை தாக்கினான் தஞ்சன். இறுதியில் தன் மூதாதையர் போல எருமை உருகொண்டு ஆக்ரோஷமாக தேவி மீது பாய்ந்தான். சிறிதும் தயங்காமல் ஏகௌரியானவள் தஞ்சாசுரனின் தலையை சீவி எறிந்தாள். தேவர்கள் ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார்கள்.

    தஞ்சனை வதைத்த பின்னும் சீற்றம் குறையாத தேவி, வனமெங்கும் அலைந்தாள். அவளுடைய வெப்பத்தால் நீர் நிலைகள் வறண்டன. தேவர்களும், மனிதர்களும் சிவனிடம் முறையிட்டனர். ஈசனும் 'ஏ, கௌரி, சாந்தம் கொள்' என்று கேட்டுக் கொண்டார். அமைதியடைந்த தேவி நெல்லிப் பள்ளம் என்று அழைக்கப்பட்ட வல்லத்தில் அமர்ந்தாள். சீற்றம் குறைந்து கருணை கொண்டாள். அண்டி வந்தவர்களுக்கு வேண்டியதை அள்ளிக் கொடுத்தாள். அசுரன் கேட்டுக் கொண்டபடி அவன் பெயராலேயே அவ்வூருக்கு தஞ்சாவூர் என பெயரிட்டார்கள். அம்மன், ஏகெளரியம்மன் என்றே அழைக்கப்படுகிறாள்.

    தீராத கடன் பிரச்சினை, தீராத நோய், தீராத பகை என்று கலங்கித் தவித்து மருகியவர்கள், ஏகெளரியம்மனிடம் மனதார வேண்டிக் கொண்டால், விரைவில் கடன் பிரச்சினை தீரும், தீராத நோயும் குணமாகும், பகை அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். வேண்டுதல் நிறைவேறியவர்கள், அம்மனுக்கு எருமைக்கன்று வழங்கி, தங்கள் பிரார்த்தனையை, நேர்த்திக்கடனைச் செலுத்துகிறார்கள்.

    தஞ்சாவூரில் இருந்து திருச்சி செல்லும் வழியில், தஞ்சாவூருக்கு அடுத்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது வல்லம். இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில், ஒரு கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது ஏகெளரியம்மன் கோவில். இங்கே சந்நிதியில், உக்கிரமாகவும் அதேசமயம் சாந்தசொரூபினியாகவும் வீற்றிருக்கிறாள் ஏகெளரியம்மன்.. இந்த அம்மன் எட்டு திருக்கரங்களுடன் பத்ம பீடத்தில் காட்சியளிக்கிறாள். காவல் தெய்வமாகவும்,எல்லை தெய்வமாகவும் திகழும் இந்த அம்மனை வணங்கினால் தைரியம் கிட்டும் என்பது ஐதீகம். அந்தக் காலத்தில், போருக்குப் புறப்படுவதற்கு முன்பு ஆயுதங்களை இவளின் திருவடியில் வைத்து பூஜைகள் போடப்பட்டுத்தான் எடுத்துச் செல்வது வழக்கம் என்கிறார்கள்.

    Next Story
    ×