என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கோவில்கள்
கரம்பயம் முத்துமாாியம்மன் திருக்கோவில்- பட்டுக்கோட்டை
- அம்மை நோய் தீர்க்கும் முக்கிய கோவில்களில் ஒன்றாக உள்ளது.
- கோவிலின் தல விருட்சம் வேப்பமரம்.
கோடை காலத்தில் பரவும் அம்மை நோயில் இருந்து பக்தர்களை காக்கும் அம்மன் ஆலயங்கள் தமிழகத்தில் பல இருந்தாலும் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் முத்துமாரியம்மன் கோவில், பக்தர்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்று உள்ளது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செழுமையான கிராமம் கரம்பயம். இந்த ஊரில் முற்காலத்தில் பால் வியாபாரி ஒருவர் தங்கள் கிராமத்தில் இருந்து பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கு தினசரி சென்று பால் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். ஒரு நாள் பால் கொண்டு செல்லும்போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் கால் இடறி பால் கீழே கொட்டி விட அவரும் தவறி கீழே விழுந்து விட்டார்.
இதனால் மிகவும் வருத்தம் அடைந்த அவர் வீடு திரும்பினாா். மறுநாள் பால் கொண்டு செல்லும்போதும் அதே இடத்தில் கால் தவறி மீண்டும் பால் கொட்டி விட்டது. அன்றும் வருத்தத்துடன் வீடு திரும்பிய அவர் 3-வது நாள் மிகுந்த கவனத்துடன் அந்த குறிப்பிட்ட பகுதி்க்கு சென்றாா். அப்போதும் அவரது கால் இடறி அந்த குறிப்பிட்ட இடத்தில் கீழே விழுந்து பால் கொட்டியது.
ரத்தம் வெளியேறியது
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மிகுந்த மனவேதனை அடைந்த பால் வியாபாரி தனது வீட்டுக்கு வந்து மண்வெட்டி எடுத்துச் சென்று அந்த இடத்தை தோண்டினாா். அப்போது ஒரு குறிப்பிட்ட ஆழத்துக்கு மண்வெட்டி சென்றதும் குழியில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பால் வியாபாரி செய்வதறியாது திகைத்து ஊருக்குள் சென்று நடந்த விவரங்களை கூறினார். இதைத்தொடர்ந்து ஊர் தலைவர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அந்த குறிப்பிட்ட இடத்துக்கு சென்றனர். அப்போது அந்த இடத்தில் ரத்தம் ஆறாக ஓடிக்கொண்டு இருந்தது.
அம்மன் சிலை
அடுத்த கனமே அந்த பால் வியாபாரி உடலில் அம்மை நோய் தாக்கி உடல் முழுவதும் முத்துக்கள் போடப்பட்டிருந்தது. இதனால் வலியால் பால் வியாபாரி துடித்துப்போனார். இதைத்தொடர்ந்து ஊர் தலைவர் உத்தரவின் பேரில் அந்த இடத்தை பத்திரமாக தோண்டி பாா்த்தபோது ஒரு அழகிய அம்மன் சிலை இருந்தது தெரிய வந்தது.
ஊர் தலைவரும், ஊர் மக்களும் அதிர்ச்சியுடன் அந்த சிலையை மேலே எடுத்து பார்த்தபோது அழகிய அம்மன் சிலை இருந்தது தெரிந்தது. மேலும் அந்த பால் வியாபாரி, மண்வெட்டியால் வெட்டும் போது ஏற்பட்ட தழும்புகள் இன்றும் அம்மனின் உடலில் உள்ளது. இதைத்தொடர்ந்து உடனடியாக ஊர் தலைவர் உத்தரவின் ேபரில் ஊர்மக்கள் அதே இடத்தில் ஒரு சிறிய கொட்டகை அமைத்து அம்பாளின் உருவத்தை அங்கே வைத்து பூஜை செய்ய தொடங்கினா்.
கனவில் தோன்றிய அம்மன்
இதன்பின் பால் வியாபாரியும் வீட்டுக்கு சென்று விட்டார். ஊர் தலைவர் இரவு உணவு முடித்து உறங்கியபோது அவரது கனவில் அம்பாள் தோன்றி நான் இப்பகுதிகளுக்கு நன்மை செய்வதற்காக சுயம்பாக தோன்றி உள்ளேன். அந்த பால் வியாபாரி அறியாமல் செய்த தவறால் அவருக்கு செம் முத்துக்களை(அம்மை நோய்) உடலில் ஏற்படுத்தி விட்டேன்.
இன்னும் 5 நாட்களில் அவர் உடலில் இருந்து அந்த முத்துக்களை நான் எடுத்து விடுவேன். இப்பகுதியில் யாருக்காவது அம்மை நோய் எப்போது வந்தாலும் எனது கோவிலுக்கு வந்து பிரார்த்தனை செய்தால் நான் சரி செய்து விடுவேன் என்றும், தனக்கு ஒரு கோவில் கட்டி விழா ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கூறினாா்.
அம்மை நோய் தீர்க்கும் தலம்
இதன்பின்பு ஊர் தலைவர் விடிந்ததும் பொதுமக்களை கூட்டி அம்பாள் சொன்ன தகவல் அனைத்தையும் சொல்லி அந்த இடத்திலேயே கோவில் கட்டி முத்து மாரியம்மன் என்ற பெயரில் இன்று வரை வழிபாடு செய்கின்றனர்.
டெல்டா மாவட்டங்களில் அம்மை நோய் தீர்க்கும் முக்கிய கோவில்களில் ஒன்றாக கரம்பயம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.
நேர்த்திக்கடன்
கரம்பயம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு கரம்பயம் மட்டுமின்றி கரம்பயத்தை சுற்றியுள்ள சுமார் 35-க்கும் மேற்பட்ட கிராம மக்களும், அருகில் உள்ள நகர மக்களில் யாருக்காவது அம்மை நோய் ஏற்பட்டால் அவர்களை அழைத்து வந்து கரம்பயம் முத்துமாரியம்மன் கோவிலில் தங்க வைத்து தீர்த்தம் என்று சொல்லக்கூடிய அபிஷேக பால் வாங்கி கொடுப்பார்கள்.
நான்கு அல்லது ஐந்து நாட்களில் அவர்கள் நோய் பூரண குணமடைந்து விடுவது இன்றும் வழக்கத்தில் உள்ளது. இதற்கு நேர்த்திக்கடனாக முடி இறக்கி காணிக்கை செலுத்துவது, அலகு குத்துவது, காவடி எடுப்பது, பால்குடம் எடுப்பது, வடம் பிடித்து தேர் இழுப்பது உள்ளிட்ட வேண்டுதல்களை பொதுமக்கள் நிறைவேற்றி வருகின்றனர்.
திருவிழா
கரம்பயம் முத்து மாரியம்மன் கோவிலில் திருவிழாவுக்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் 20-ந் தேதிக்கு பிறகு வரும் ஞாயிற்றுக்கிழமையில் பக்தா்கள் காப்பு கட்டுவார்கள்.
அடுத்த ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் காவடி அபிஷேகம், இரவு அரண்மனை மண்டகப்படி நடைபெறும். திங்கட்கிழமை வெளியூர் காவடியும் அபிஷேகமும் நடைபெறும். செவ்வாய்க்கிழமை பால்குடம், அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும். புதன்கிழமை பெரிய தேர்த்திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். வியாழக்கிழமை காலை 9 மணிக்கு மேல் 11 மணிக்குள் தீர்த்தவாரி நடைபெற்று, இரவு முத்து பல்லக்கு வாணவேடிக்கை நடைபெறும். வெள்ளிக்கிழமை அதிகாலை காப்பு களைதல் நிகழ்ச்சியுடன் கரம்பயம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நிறைவு பெறும்.
வேண்டுதல்கள்
திருவிழாவின்போது அம்பாள் வீதி உலா வந்து பொதுமக்களை பார்த்து மகிழ்ந்து அவர்களுக்கு தேவையான அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றி தருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த கோவில் தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலின் அனைத்து விழாக்களையும் ஊர் பெரியவர்களும், மண்டகப்படிதாரர்களும், ஊர் முக்கியஸ்தர்களும், பொதுமக்களும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் சிறப்பாக செய்து வருகின்றனர்.
கோவிலின் தல விருட்சம் வேப்பமரம். தீர்த்தக்குளம் கோவில் அருகே உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பா் மாதம் 8-ந் தேதி குடமுழுக்கு நடந்தது.
பிரசித்தி பெற்ற தீர்த்தக்குளம்
கரம்பயம் முத்துமாரியம்மன் கோவில் தீர்த்தக்குளம் கோவில் அருகில் மிகப்பெரிய அளவில் அமைந்து உள்ளது. அம்மை நோயால் பாதிக்கப்படும் பக்தா்கள் நோய் தீர்ந்த உடன் இ்ந்த கோவில் தீா்த்தக்குளத்தில் நீராடி பின்னர் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். மேலும் கோவிலுக்கு வரும் அனைத்து பக்தா்களும் தீர்த்தக்குளத்தில் உள்ள புனித நீரை தங்கள் தலையில் தெளித்த பின் கோவிலுக்கு செல்கிறாா்கள்.
தீர்த்தக்குளத்தில் அம்மை நோய் தீர்க்கும் அற்புத சக்தி இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். எனவே பிரசித்தி பெற்ற கரம்பயம் முத்து மாரியம்மன் கோவில் தீர்த்தக்குளம் பக்தா்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்று உள்ளது.
கோவிலுக்கு செல்வது எப்படி?
கரம்பயம் முத்துமாரியம்மன் கோவில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து 7 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக பட்டுக்கோட்டைக்கு வந்து அங்கிருந்து கரம்பயம் முத்து மாரியம்மன் கோவிலை அடையலாம். தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் தஞ்சைக்கு வந்து அங்கிருந்து பட்டுக்கோட்டைக்கு செல்லும் வழியில் 7 கி.மீட்டர் தொலைவிற்கு முன்பு உள்ள கோவிலை அடையலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்