search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி திருக்கோவில்- ஊத்துக்குளி
    X

    கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி திருக்கோவில்- ஊத்துக்குளி

    • கதித்தமலை மயில் வடிவில் உள்ளதால், மயூரகிரி என்றும் அழைக்கப்படுகிறது.
    • அருணகிரிநாதர் இத்தல முருகனை பற்றி தன் திருப்புகழில் பாடியுள்ளார் .

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டத்தில் புகழ் பெற்ற கதித்தமலை அமைந்துள்ளது.இது கைத்தமலை என்றும் கதிர்த்தமலை என்றும் அழைக்கப்படுகிறது. கதித்த என்னும் சொல்லுக்கு கோபித்த என்ற பொருளும் உண்டு. அம்மையப்பனாகிய பெற்றோரிடம் ஞானப்பழத்தை பெறாத முருகன் அவர்களிடம் கோபித்துக் கொண்டு இங்கு வந்ததால் (கோபித்தமலை) கதித்தமலை என்று ஆயிற்று. கதித்தமலை மயில் வடிவில் உள்ளதால், மயூரகிரி என்றும் அழைக்கப்படுகிறது.

    கொங்கு வளநாட்டின் குறும்பு நாடாகிய பதியினில் இயற்கை எழில்வளம் நிறைந்த ஊத்துக்குளியில் கதித்தமலை என்று அழைக்கப்படும் மலை மீது வெற்றி வேலாயுதசாமி எனும் திருப்பெயருடன் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ளார். ஊத்துக்குளி எனும் பெயர் பெறக் காரணமே கண்கண்ட தெய்வமாய் கதித்தாசலபதி முருகப்பெருமான் தன் சக்தி ஆயுதமான வேலினால் ஊன்றப்பட்டு எழுந்த தீர்த்தம் உடையது இத்திருத்தலமாகும்.

    இக்கோவில் மலையின் மீது ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. ராஜகோபுரத்தின் உள்ளே நுழைந்தவுடன் ஒரு அழகிய மண்டபத்துடன் கூடிய சன்னதியில் முருகன் தனியாக காட்சிதருகிறார். வள்ளி மற்றும் தெய்வானைக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன.

    வள்ளி தெய்வானை தனி சன்னதிக்கான காரணம்: சூரபத்மனை வதம் செய்த பிறகு முருகன் தனிமையில் இருந்தார். அவரை மணம் முடிக்க விரும்பிய இந்தப் பெண்கள் இம்மலைக்கு வந்து முருகன் தங்களை ஆட்கொள் ளுமாறு வேண்டினர். அவரது அருளாசியின்படி இந்திரனின் மகளாக தெய்வானையும், நம் பிராஜனின் வளர்ப்பு மகளாக வள்ளியும் அவதரித்தனர். திருமணத்துக்கு முன்னதான நிலை என்பதால், இவர்களுக்கு தனி சன்னதி தரப்பட்டுள்ளது. மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது.

    வள்ளி, தெய்வானை, வேல் ஆகியன முறையே இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகியவை. ஆசை, செயல், அறிவு என் னும் மூன்று சக்திகளை குறிக் கின்றன. இவை மூன்றும் பரப் பிரம்மமாகிய முருகனுக்குள் அடங்கியுள்ளது. பெரும்பாலான முருகன் கோயில்களில் இச்சா சக்தியும், கிரியா சக்தியும் அவருக்கு இருபக்கம் வைக்கப்பட்டு, ஞான சக்தியான வேல் மட்டும் அவரது மார்பின் மேல் வைக்கப்படும். ஞானசக்தி தான் இம் மூன்றில் முக்கியமானது. இச்சையும், கிரியையும் இருந்தால் தான் ஞானம் பெற முடியும். ஆனால், அபூர்வ சக்தி படைத்த முருகன், இவ்விரண்டும் இல்லாமலே ஞானசக்தி பெற்றவர் என்பதையும் இது காட்டுகிறது.

    மூர்த்தியினாலும், ஸ்தலத்தினாலும் பெருமை வாய்ந்தது. தென்னகத்தில் மலைமீது திருவிழா கண்டு மர சிற்பத்திலான திருத்தேர் மலைக்கோவிலை சுற்றி வலம் வருவது இத்திருத்தலத்தின் தனிச்சிறப்பாகும். அருணகிரிநாதரின் தனிப்பாடல்களிலே கொண்டைச்செருக்கிலே எனத் தொடங்க பதியினில் மங்கை கதித்தமாமலை என பாடப்பட்டது. அருணகிரிநாதர் இத்தல முருகனை பற்றி தன் திருப்புகழில் பாடியுள்ளார் .

    முருகப்பெருமான் மலை மீது வீற்றிருந்து 336 திருப்படிகளாலும், விரைவில் தரிசனம் கிடைக்கப்பெறும் வகையில் தார் சாலையும் அமைந்து அமைதியும் சாந்தமும் ஏற்படுத்தக்கூடிய ஒரு சுற்றுச் சூழலிலே உள்ளது இக்கோவிலின் சிறப்பாகும்.

    திருமணத்தடை உள்ளவர்கள், பிரிந்த தம்பதியினர் இங்கு பிரார்த்தனை செய்தால் அவர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்ற ஐதீகம் உள்ளதால் பக்தர்கள் பலர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

    நேர்த்திக்கடன்: முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

    கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 5 மணி 8 முதல் இரவு மணி வரை.

    முகவரி :

    அருள்மிகு வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோவில்,

    ஊத்துக்குளி , திருப்பூர் - 638 751

    தொலைபேசி எண்: 04294-262052

    Next Story
    ×