என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கோவில்கள்
வளமான வாழ்வு அருளும் மாறனேரி பசுபதீஸ்வரர் திருக்கோவில்
- கோவிலின் அம்மன் சிவகாமசுந்தரி.
- கோவிலின் தல விருட்சம் வில்வம் மரம்.
காவிரி பாய்ந்து வளம் கொழிக்கும் தஞ்சை மாவட்டத்தில் பக்தி பெருக்கோடு பல சிவாலயங்களை பண்டைய மன்னர்கள் கட்டி அதன் வழிபாட்டு முறைகளையும் அதற்கான மானியங்களையும் அளித்துள்ளதாக வரலாற்று செய்திகள் கூறுகின்றன. அவ்வாறான பல கோவில்களில் பழமை வாய்ந்த திருக்கோவில் ஒன்று தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள மாறனேரி கிராமத்தில் அமைந்துள்ளது.
சிதிலமடைந்த நிலையில் காணப்பட்ட இந்த கோவிலில் பல்வேறு தடைகளையும் கடந்து புதுப்பொலிவுடன் பழமை மாறாமல் திருப்பணிகள் செய்யப்பட்டு குடமுழுக்கு விழாவை நோக்கி காத்திருக்கிறது.
பல்லவ மன்னர்கள்
சங்க காலத்துக்கு பிறகு சோழ நாட்டை களப்பிரர்களும் அவர்களுக்கு பிறகு பல்லவர்களும் தங்களுக்குரிய நாடாகக் கொண்டு ஆட்சி செய்துள்ளதாக கூறுகின்றனர். நிருபதுங்க பல்லவ மன்னன் ஆட்சி செய்த போது மாறனேரி கோவில் கட்டப்பட்டது.
சுவரன் மாறன் காலத்தில் ஏற்பட்ட ஊரே தற்போதைய மாறனேரி என்னும் ஊராகும். மாமன்னன் கரிகால் சோழன் போன்ற சங்க கால சோழப்பேரரசு வாழ்ந்த 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சோழ நாடு பல நாடுகளாக பிரிக்கப்பட்டு ஆட்சி நடந்து வந்தது.
வடகவீர நாடு
ராஜராஜ சோழன் சோழநாட்டை விரிவுபடுத்தி சோழமண்டலமாக மாற்றி அமைத்து நாடுகளுக்குள் பிரிவு அல்லது உட்பிரிவுகள் அமையுமாறு செய்தார். அவ்வாறு செய்த போது 21 உட்பிரிவுகள் இருந்தன. இந்த பிரிவுகளில் ஒன்றான வடகவீர நாடு என்பது வெண்ணாறு மற்றும் காவிரி படுகையில் அமைந்த மாறனேரி பகுதிகளை கொண்ட ஒரு நாட்டுப் பகுதியாகும்.
இந்த நாடு ஏரிமங்கலநாடு என்று வழங்கப்படுகிறது. மாறனேரி என்னும் ஊரினை குறிப்பிடும் சோழ மன்னர்கள் கல்வெட்டு சான்றுகள் சோழமண்டலத்து பாண்டிய குலசினி வளநாட்டு வடகவீர நாட்டு மாறனே என்று குறிப்பிடுகின்றன.
சிவகாமசுந்தரி
மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் மாறனேரிக்கு தீன சிந்தாமணி சதுர்வேதி மங்கலம் என்ற மற்றொரு பெயரும் வழக்கில் இருந்தது. நேரி வாயில் என்றும் மாறனேரி என்றும் நந்திபுரம் என்றும் தீன சிந்தாமணி சதுர்வேதிமங்கலம் என்றும் பல்வேறு பெயர்கள் இந்த ஊருக்கு பல்வேறு காலகட்டத்தில் இருந்தன. இருப்பினும் மாறனேரி என்ற பெயர் இன்றும் நிலைத்த பெயராக விளங்குகிறது.
நந்திவர்ம பல்லவன் என்னும் மூன்றாம் நந்திவர்மனின் மகனான நிருபதுங்க பல்லவன் தன் பெயரால் நிருபகேஸ்வரி ஈஸ்வரம் என்று முற்காலத்தில் அழைக்கப்பட்ட சிவாலயம் தற்போது பசுபதீஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. கோவிலின் அம்மன் சிவகாமசுந்தரி. இக்கோவிலில் விநாயக பெருமான், துர்க்கை, முருகன் ஆகிய சாமிகளும் உள்ளனர்.
அம்மனை நோக்கி நந்தி
இக்கோவிலில் உள்ள பசுபதீஸ்வரரை வணங்கி அர்ச்சனை செய்து வழிபட வளம் பெருகி திருமணத்தடை நீங்கும் என்று கூறப்படுகிறது. கோவிலில் உள்ள அம்மன் சிவகாம சுந்தரியை வணங்கினால் குடும்பத்தில் நன்மை கிடைக்கும் என்று வழி, வழியாக வந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
இக்கோவிலில் உள்ள நந்தி நேர்முகமாக சிவனை பார்க்காமல், தன்னுடைய தலையை லேசாக திருப்பி அம்மனை பார்க்கும் வகையில் அமைந்துள்ளது.
பிரதோஷ நாட்களில் நந்தியெம்பெருமானையும் சிவகாமசுந்தரியையும் வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்று கூறுகின்றனர். இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
குடமுழுக்கு
மாறனேரி பசுபதீஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு விழாவுக்காக கடந்த 2009-ம் ஆண்டு பாலாலயம் நடந்து திருப்பணி வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
இக்கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதால் கோவிலின் மூலவர் உள்ளிட்ட அனைத்து விக்கிரகங்களும் கோவிலின் அருகில் வைக்கப்பட்டு தினமும் பூஜைகள் நடந்து வருகிறது.
2 துர்க்கை சிலைகள்
கோவிலின் தல விருட்சம் வில்வம் மரம். கோவிலில் ஆண்டுதோறும் சிவராத்திரி விழா சிறப்பாக நான்கு கால பூஜைகளுடன் நடைபெறும். பிரதோஷ நாளில் நந்தியெம்பெருமானுக்கு பூஜைகள் நடந்து வருகிறது..
மாறனேரி பசுபதீஸ்வரர் கோவில் வளாகத்தில் 2 துர்க்கை சிலைகள் உள்ளன. இதில் ஒன்று பல்லவர் காலத்து சிலை. மற்றொரு சிலை சோழர் காலத்துக்குரியது என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
நவக்கிரக தோஷம்
துர்க்கை அம்மனை முறைப்படி வழிபட்டால் நமது வாழ்வில் உள்ள தீமையான கால கட்டம் விரைவில் அகன்று புதிய நல்வாழ்வு கிடைக்கும் என பக்தர்கள் நம்புவதால் துர்க்கை அம்மன் வழிபாட்டில் பக்தர்கள் இன்றும் அதிக ஈடுபாடு காட்டுகிறாா்கள்.
துன்பங்களை போக்கும் துா்க்கை அம்மனுக்கு மாலை அணிவித்து வழிபட்டால் நீங்காத துயரால் அவதிப்படுபவர்களுக்கு விரைவில் நல்வாழ்வு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் மாறனேரி பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள நவக்கிரக சன்னதியை முறையாக வழிபடுவோருக்கு விரைவில் நவக்கிரக தோஷம் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது.
கோவிலின் மூலவர் மீது சூரிய ஒளி படும் நிகழ்வு நிகழ்ந்துள்ளது என்று செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. பிரதோஷ நாளில் இந்த கோவிலில் நடைபெறும் வழிபாட்டில் கலந்து கொண்டால் குடும்பத்தில் உள்ள தீமைகள் அகன்று கண்டிப்பாக நம் வாழ்வில் நன்மை பிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.
கோவிலுக்கு செல்வது எப்படி?
சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் சென்னையில் இருந்து பஸ் அல்லது ரெயில் மூலம் தஞ்சைக்கு வந்து தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து பூதலூர் வழியாக திருக்காட்டுப்பள்ளிக்கு சென்று அங்கிருந்து ஆட்டோ அல்லது வாடகை கார் மூலம் கோவிலுக்கு செல்லலாம். தென் மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் தஞ்சைக்கு வந்து மேற்கண்ட வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்