என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கோவில்கள்
திருக்குளந்தை மாயக்கூத்தன் கோவில் (சனி)
- இந்த கோவில், மூன்று நிலை ராஜ கோபுரத்தை கொண்டது.
- இந்த கோவிலில் நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி உள்ளது தனி சிறப்பாகும்.
- இந்த கோவில் சனியின் அம்சமாக விளங்குகிறது.
நவதிருப்பதி எனப்படும் ஒன்பது தலங்களும், நவக்கிரக நாயகர்களின் பெயரில் வரிசைப்படுத்தப்படுகிறது. அவற்றின் வரிசையில் ஏழாவதாகவும், நவதிருப்பதி வரிசைகளுள் ஆறாவதாகவும் விளங்கும் கோவில் "திருக்குளந்தை". இது சனியின் அம்சமாக விளங்குகிறது.
திருக்குளந்தை என்னும் வரலாற்று பெயரை கொண்ட இத்தலம் தற்போது "பெருங்குளம்" என்றே அழைக்கப்பட்டு வருகிறது.
கோவில் வரலாறு:
முற்காலத்தில் தடாகவனம் என்று அழைக்கப்பட்ட இப்பகுதியில் வேதசாரன் என்னும் அந்தணன் தன் மனைவி குமுதவல்லியோடு வாழ்ந்து வந்தான். இவர்களின் இல்லறம் நல்லறமாகவே சென்றாலும் இவர்களுக்கு மக்கள் பேறு இல்லாதது பெரிய குறையாகவே இருந்தது. இதனால் தம்பதியர் மிகவும் வருத்தத்துடன் இருந்து வந்தனர். தங்கள் குறைகள் நீங்க இவர்கள் பல்வேறு கோவில்களுக்கும் சென்று வேண்டிக்கொண்டனர்.
இவர்களின் பக்திக்கு இறங்கிய பெருமாள், தன்னு டன் இருந்த மகாலட்சுமியை அழைத்து அவர்களின் குறையை போக்க குழந்தையாக அவதரிக்கும்படி கூறுகிறார். மகாலட்சுமியும் இதற்கு சம்மதிக்க இவர்களின் கருணையினால் குமுதவல்லி கர்ப்பம் தரிக்கிறாள். சரியாக பத்தாவது மாதம் குமுதவல்லிக்கு குழந்தை பிறக்கிறது. மகாலட்சுமியே குழந்தையாக வந்து அவதரித்தாள். அந்த குழந்தைக்கு கமலாவதி என்று பெயர் சூட்டி பாலூட்டி, சீராட்டி, பாசமழை பொழிந்து வளர்த்து வருகின்றனர் அந்த தம்பதியினர்.
பருவம் எய்திய கமலாவதி பேரழகியாகவும், கல்வியில் சிறந்த மங்கையாகவும் வளர்ந்து வந்தாள். இவளின் அழகில் மயங்கி பக்கத்து ஊர்களிலிருந்து நிறைய பேர்கள் பெண் கேட்டு வந்தனர். ஆனால் கமலாவதியோ சதா சர்வ காலமும் ஆண்டாளை போல பரந்தாமனை நினைத்தபடியே வாழ்ந்து வந்தாள். இந்நிலையில் கமலாவதிக்கு திருமண ஏற்பாடுகளை பெற்றோர் செய்ய, கமலாவதி பரந்தாமனை நினைத்தபடியே தன்னை வந்து ஆட்கொள்ளுமாறு வேண்டி கொண்டிருந்தாள்.
கமலாவதியை ஆட்கொள்ள செவிசாய்த்த பெருமாளும் ஒருநாள் மாய கண்ணன் தோற்றத்தில் திருக்குளந்தை ஊருக்கு வருகிறார். அவரை கண்ட கமலாவதி அவர் திருமுகத்தில் இருந்த தெய்வீக ஒளியை கண்டு அவரை கண்ணபிரானாக உணர்கிறாள். இப்படியிருக்க ஒருநாள் கமலாவதி தன் தோழியர்களுடன் குளத்திற்கு சென்று குடத்தில் நீர் நிரப்பி திரும்பி வருகையில் பெருமாள், கமலாவதி முன் தோன்றி அவளை ஆட்கொண்டார்.
அவருடைய திருமுகத்தை கண்ட நொடியில் கமலாவதியும் அவருடன் சென்று தற்போது கோவில் சன்னதி அமையப்பெற்ற இடத்துக்கு சென்று மறைந்துவிட்டனர். இதனை கண்ட தோழியர்கள் பதறியபடியே ஊருக்குள் சென்று நடந்ததை கூற, வேதசாரன் தன் மனைவியை அழைத்து கொண்டு ஊர் மக்கள் புடை சூழ அந்த இடத்திற்கு வந்து தன் மகள் கமலாவதியை தேடுகிறான்.
அங்கு பெருமாளும், கமலாவதியும் அர்ச்சாவதார திருமேனியாய் காட்சியளிக்க, அப்போது வானத்தில் இருந்து பெருமாள் அசரீரியாக., வேதசாரனே உன் பக்திக்கு இறங்கி மகாலட்சுமியையே உமக்கு குழந்தையாக பிறக்க செய்தோம், தற்போது அவள் என்னை சேரும் நேரம் வந்ததால் யாமே அவளை ஆட்கொண்டோம் எனக் கூறியருளினார். இதனைக் கேட்ட ஊர் மக்களும், வேதசாரன் மற்றும் அவன் மனைவி குமுதவல்லியும் அளவில்லா மகிழ்ச்சி கொண்டு பெருமாளை துதித்தார்கள்.
அசுமசாரன் மீது கூத்தாடிய வரலாறு:
முற்காலத்தில் அசுமசாரன் என்னும் அரக்கன் ஒரே சமயத்தில் ஆயிரம் பெண்களை மணம் முடிக்க ஆவல் கொண்டு ஒவ்வொரு பெண்களாக கடத்திச் சென்று இமயமலையில் சிறை வைக்கிறான். ஒருவழியாக 998 பெண்களை சிறைபிடித்த பின்னர், மீதமுள்ள இரண்டு பெண்களை தேடி வான் வழியே சஞ்சரிக்கும் போது, வேதசாரனின் மனைவி குமுதவல்லியை காண்கிறான். அவளின் அழகில் மயங்கிய அசுமசாரன் அவளையும் கடத்திச் சென்று இமயமலையில் சிறை வைத்தான்.
இங்கு வேதசாரன் தன் மனைவியை காணாமல் பெருமாளிடம் முறையிட, பெருமாள் வேதசாரனின் வேண்டுதலுக்கு செவி சாய்த்து நேராக இமயமலைக்கு சென்று குமுதவல்லியையும் மற்ற 998 பெண்களையும் மீட்டு அனுப்பி வைத்துவிட்டு, திருக்குளந்தை சேர்கிறார். அப்போது இந்த விஷயத்தை அறிந்து கொண்ட அரக்கன் அசுமசாரன் திருக்குளந்தைக்கு வந்து பெருமாளுடன் போரிடுகிறான். அப்போது பெருமாள் விசுவரூபம் எடுத்து அசுமசாரனின் பாதங்களை பிடித்து தலைகீழாக அவனைத் தூக்கி தரையில் அடித்து அவனை கீழே கிடத்தி அவன் தலை மீது ஏறி கூத்தாடினாராம். இதனால் தான் இத்தல பெருமாளுக்கு மாயகூத்தன் என்ற பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள்.
வியாழ பகவான் சாப நிவர்த்தி பெற்ற வரலாறு:
முற்காலத்தில் தேவர்களின் குருவாக விளங்கிய பிரகஸ்பதி என்னும் வியாழ பகவான், பெண்ணாசையால் ஏற்பட்ட மோகத்தால் சாபம் பெற்றுவிட, அந்த சாபம் தீர இங்கு பெருமாளை வழிபட்டு சாப நிவர்த்தியும் பெற்றுள்ளார். அப்படி அவர் முன் பெருமாள் காட்சியளிக்கும் போது முன்னர் அசுமசாரன் அரக்கனை அழித்து அவன் மீது மாயக்கூத்தாடிய அந்த நடன கோலத்தை தனக்கு காட்டியருள வேண்டும் என கேட்க, அவருக்கு மாயக்கூத்தாடிய கோலத்தில் பெருமாள் காட்சி அளித்ததாகவும் கூறப்படுகிறது.
கருடனின் ஆணவத்தை நீக்கிய வரலாறு:
முன்பு குமுதவல்லியை அசுமசாரன் கடத்தி சென்ற போது, அவளை மீட்க செல்ல பெருமாள் ஆயத்தமாக கருடனை தன் ஓர கண்ணால் பார்க்க, கருடனோ தன்னை விட்டால் பெருமாளை சுமக்க யாரும் இல்லை என்ற நினைப்பில் ஆணவத்தோடு மெதுவாக புறப்பட தயாராக, அதனை அறிந்த பெருமாள் உடனே தன் முதுகில் கருடனை சுமந்தபடி இமயமலைக்கு பயணித்தாராம். இதனால் மனம் வருந்தி தனது ஆணவம் நீங்கி பெருமாளின் பாதங்களில் சரணடைந்தாராம் கருடாழ்வார். எனவே கருடனின் ஆணவம் தீர்ந்ததாக ஒரு வரலாறும் இங்கு கூறப்படுகிறது.
மூலவர் வேங்கடவாணன்:
கருவறையில் மூலவராக நின்ற கிருக்கோலத்தில் காட்சியளிக்கிறார் வேங்கடவாண பெருமாள். இவர் நான்கு கரங்களுடன், மேல் இரு கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியும், கீழ் இரு கரங்களில் வலது கரம் அபயம் காட்டியும், இடது கரத்தை தொடையில் வைத்தபடி திருப்பதியில் உறையும் பெருமாளை போன்றே காட்சியளிக்கிறார். எனவே இவருக்கு சீனிவாசப் பெருமாள் என்ற பெயரும் வழங்கி வருகிறது.
தாயார்கள் குளந்தைவல்லி, அலர்மேலு மங்கை:
இங்கு தாயார்களுக்கு என தனி சன்னதி இல்லை. கருவறையில் பெருமாளுக்கு முன் அலர்மேலுமங்கை தாயாரும், இங்கு பிறந்து வளர்ந்து பெருமாளை மணாளனாக பெற்ற கமலாவதி என்னும் குளந்தைவல்லி தாயார் பெருமாளின் மார்போடு ஐக்கியமான கோலத்திலும் வேங்கடவாண பெருமாளோடு சேர்த்தியாக காட்சி அளிக்கிறார்கள்.
மாயக்கூத்தன் கோவில் உற்சவர் சிறப்பு என்ன?
இங்கு உற்சவர் நின்ற கோலத்தில், நான்கு திருக்கரங்கள் கொண்டு மாயக்கூத்தர் என்னும் திருநாமம் தாங்கி ஸ்ரீ தேவி, பூ தேவி உடன் அருள்பாலிக்கிறார். இவருடன் இங்கு கருடாழ்வரும் இரு கரங்கள் கூப்பியபடி உற்சவராக காட்சி தருவது சிறப்பம்சம். மாய கண்ணனாக வந்து கமலாவதியை ஆட்கொண்டதாலும், அசுமாசூரனை வதைத்து அவன் மீது ஏறி கூத்தாடியதாலும் இவர் மாயக்கூத்தர் என்று போற்றப்படுகிறார்.
நவக்கிரக சன்னதி:
பொதுவாகவே வைணவ கோவில்களில் நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி என்பது இருக்காது. ஆனால் இங்கு திருக்குளந்தை மாயக்கூத்தர் கோவிலில் நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி உள்ளது தனி சிறப்பாகும். இங்குள்ள பிற நவ திருப்பதி கோவில்களிலும் கூட நவக்கிரக சன்னதி கிடையாது.
கோவில் அமைப்பு:
தாமிரபரணி ஆற்றின் வடகரையில் கிழக்கு நோக்கி அமையப்பெற்றுள்ள இந்த கோவில், மூன்று நிலை ராஜ கோபுரத்தை கொண்டது.
இந்த ராஜ கோபுரத்தை தாண்டி உள்ளே சென்றால் உள்ளே கொடிமரமும், பலிபீடமும் அமையப்பெற்றுள்ளது. அதனை தாண்டி உள்ளே சென்றால் கருவறைக்கு நேர் எதிரே கருடன் சன்னதி உள்ளது.
அவரை வணங்கி, அடுத்த வாயில் வழியே உள்ளே சென்றால் அர்த்த மண்டபத்தில் உற்சவர் மாயக்கூத்தர், ஸ்ரீ தேவி, பூ தேவி சகிதமாகவும், இருகரம் கூப்பிய கருடாழ்வாருடனும் காட்சிதருகிறார். அவருக்கு பின்புறம் கருவறையில் மூலவர் சீனிவாச பெருமாள் நெடிது உயர்ந்த நின்ற கோலத்தில் காட்சித் தருகிறார்.
கோவில் பிரகாரத்தில் வைணவ திருக்கோவிலின் பரிவார மூர்த்திகள் சன்னதிகளும் உள்ளன. இதுதவிர முன் மண்டபத்தில் நவக்கிரக சன்னதியும் அமையப்பெற்றுள்ளது.
வடக்கு திருச்சுற்றில் பரமபத வாசலும், அதற்குரிய மண்டபமும் அமையப்பெற்றுள்ளன.
கோவில் சிறப்புக்கள்:
இங்கு கருவறையில் உள்ள பெருமாள் திருப்பதி வெங்கடாசலபதியை போன்றே திருக்கோலம் காட்டியருளுகிறார். இக்கோவில் விமானமும் திருப்பதியே போன்றே ஆனந்த நிலைய விமானம் என்றே அழைக்கப்படுகிறது.
திருவில்லிப்புத்தூரில் ஆண்டாள் நாச்சியார் பூ உலகில் பிறந்து, வளர்ந்து, ரங்கநாதனை மணமுடித்ததை போலவே இந்த திருக்குளந்தை தலத்திலும் கமலாவதி நாச்சியார் பூ உலகில் பிறந்து, வளர்ந்து, பரந்தாமனை மணமுடித்தாள், மேலும் இங்கு திருவில்லிப்புத்தூரைப் போலவே பெருமாளுடன் கருடாழ்வாரும் உற்சவராக இருப்பதும் இரண்டு தலத்திற்கும் உள்ள ஒற்றுமை ஆகும்.
நம்மாழ்வார் இத்தலத்தில் ஒரு திருவாய்மொழி பாசுரம் (3361) பாடி மங்களாசாசனம் செய்துள்ளார்.
நவதிருப்பதி கோவில்களுள் இந்த திருக்குளந்தை தவிர்த்து வேறெந்த கோவில்களிலும் நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி இல்லை.
இந்த தலத்தில் நம்மாழ்வார் தன்னைக் காதலியாகவும், மாயக்கூத்தனை காதலனாகவும் பாவித்து பாசுரங்கள் படைத்துள்ளார். அந்த அளவுக்கு இந்த பெருமாள் மாயகூத்தர் அழகுற காட்சியளிக்கிறார்.
இக்கோவில் மடப்பள்ளியில் இருந்து கழனி தண்ணீர் வெளியேறும் இடத்தில் கழனி தொட்டியான் என்னும் திருநாமம் கொண்டு ஒரு காவல் தெய்வமானவர் காட்சித் தருகிறார். இந்த திருக்குளந்தை தலத்தை பூர்வீகமாக கொண்ட பல குடும்பங்களுக்கு இவர் குல தெய்வமாக விளங்கி வருகிறார். இவருக்கு தை மாதம் கடை வெள்ளி அன்று திருவிழா நடைபெறுகிறது.
மாயக்கூத்தன் திருக்குளந்தை கோவிலின் முக்கிய திருவிழாக்கள் என்ன?
பங்குனி மாதம் இங்கு கொடியேற்றமாகி பதினொரு நாட்கள் பெருந் திருவிழா விமரிசையாக நடைபெறும். விழாவின் இறுதியில் நடைபெறும் தெப்ப திருவிழா இங்கு மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும்.
வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தை ஒட்டி ஆழ்வார்திருநகரியில் நடைபெறும் நம்மாழ்வார் அவதார உற்சவத்தின் ஐந்தாம் நாள் இத்தல பெருமாள் மாயக்கூத்தர் அங்கு எழுந்தருளி கருடசேவை காட்சியளிக்கிறார்.
இது தவிர ஆடி பூரம், ஆடி சுவாதி, ஆவணி பவித்ரோத்சவம், புரட்டாசி சனிக்கிழமைகள், மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி ஆகிய திருவிழாக்களும் இங்கு விமரிசையாக நடைபெறும்.
அமைவிடம்: திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 28கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது திருவைகுண்டம். திருவைகுண்டத்திலிருந்து கிழக்கே 12கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது திருக்குளந்தை.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பேருந்தில் திருவைகுண்டம் சென்று, அங்கிருந்து நகரப் பேருந்துகளில் இந்த கோவிலை சென்றடையலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்