search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    திருப்புடைமருதூர் ஸ்ரீநாறும்பூநாதர் திருக்கோவில்
    X

    திருப்புடைமருதூர் ஸ்ரீநாறும்பூநாதர் திருக்கோவில்

    • 1200 வருடங்கள் பழமையானது இந்த ஆலயம்.
    • இத்தல அம்பாளின் திருநாமம், கோமதியம்மாள் என்பதாகும்.

    'அர்ச்சுனம்' என்பது மருத மரத்தைக் குறிக்கும். மருத மரத்தில் சிவபெருமான் எழுந்தருளிய தலங்கள் 'அர்ச்சுனத் தலங்கள்' எனப் போற்றப்படுகின்றன. 'தலையார்ச்சுனம்' என்பது ஸ்ரீசைலம். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் 'இடையார்ச்சுனம்' என்றும், 'மத்தியார்ச்சுனம்' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வரிசையில் திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூரில் உள்ள ஸ்ரீநாறும்பூநாதர் கோவில், 'கடையார்ச்சுனம்' என்று போற்றப்படுகிறது. 1200 வருடங்கள் பழமையான இந்த ஆலயத்தில், மூலவர் ஸ்ரீநாறும்பூநாதர், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தல அம்பாளின் திருநாமம், கோமதியம்மாள் என்பதாகும்.

    தல வரலாறு

    முன்னொரு காலத்தில், தேவர்கள் பலரும் இணைந்து சிவபெருமானை சந்தித்தனர். அப்போது அவர்கள் ஈசனிடம், 'காசிக்கு நிகரான தலத்தைக் காட்டுங்கள்' என்று முறையிட்டனர். அப்போது ஒரு பிரம்ம தண்டத்தை, தேவர்களிடம் கொடுத்த சிவபெருமான், அதனை பூமியை நோக்கி வீசச் சொன்னார். அதன்படியே தேவர்களும் செய்தனர். அந்த பிரம்ம தண்டம், தாமிரபரணி ஆற்றில் விழுந்தது. "ஆற்றில் மிதந்து செல்லும் பிரம்ம தண்டம் எந்த இடத்தில் கரை ஒதுங்குகிறதோ, அத்தலமே காசிக்கு நிகரானது" என்று சிவபெருமான் கூறினார்.

    அந்த பிரம்ம தண்டம் கரை ஒதுங்கிய இடம்தான், தட்சிண காசி என்று அழைக்கப்படும் திருப்புடைமருதூர். ஆற்றங்கரையோரம் அமைந்த இந்தப் பகுதியில் தேவர்கள் வழிபாடு செய்து தவம் இயற்றினர்.

    பிற்காலத்தில் களக்காடு பகுதியை ஆட்சி செய்த வீர மார்த்தாண்ட மன்னன், மருத மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதிக்கு வேட்டையாட வந்தான். அப்போது ஒரு மானைக் கண்டு, அந்த மானை வீழ்த்த அம்பு எய்தினான். மன்னன் விட்ட அம்பு பட்டு காயமடைந்த மான், ஒரு மருத மரத்திற்குள் சென்று மறைந்தது. குறிப்பிட்ட அந்த மருத மரத்தை வெட்டும்படி, தன்னுடைய காவலர்களுக்கு மன்னன் உத்தரவிட்டான். அதன்படி காவலர்கள், கோடரியால் அந்த மரத்தை வெட்ட, அதில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளிவந்தது. பின்னர் கோடரியின் தழும்பு பட்ட நிலையில் சுயம்புலிங்கமாக ஸ்ரீநாறும்பூநாதர் அங்கு தோன்றினார். இதைக்கண்டு மனமுருகி வேண்டிய மன்னன், அங்கேயே இறைவனுக்கு ஒரு ஆலயத்தை எழுப்பினான்.

    இத்தல இறைவன் தலையில் கோடரி பட்ட தழும்பு காயத்துடனும், மார்பில் மானின் மீது பாய்ந்த அம்பு பட்ட காயத்துடனும் காட்சியளிக்கிறார். திருமணத் தடை, புத்திர தோஷம், தீராத பிணி, குடும்ப கஷ்டம் உள்ளவர்கள், இத்தல இறைவனை வணங்கினால் அவை அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். மேலும் குடும்ப ஐஸ்வரியம் பெறவும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும், வியாபாரம் விருத்தியாகவும் இத்தல இறைவனை வணங்குகிறார்கள்.

    இத்தல இறைவியான கோமதியம்மாள், உலகில் வேறு எங்கும் காண முடியாதபடிக்கு, உச்சி முதல் பாதம் வரை ருத்ராட்சத் திருமேனியுடன் காணப்படுகிறார். தாரகா சக்தி பீடமாக உள்ள இத்தலத்தில், அருளே வடிவாக இறைவி வீற்றிருக்கிறார். பக்தர்களின் வேண்டுலை நிறைவேற்றுவதில், கோமதியம்மனுக்கும் தனிப் பங்கு உண்டு. இங்குள்ள நடராஜர் சிலை, ஓம் வடிவ திருவாசியுடன் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. மேலும் இத்தல தட்சிணாமூர்த்தி, இரண்டு கால்களையும் மடக்கி வைத்த நிலையில் இருப்பதும் சிறப்புக்குரியதுதான்.

    ஐந்து நிலைகளுடன் 11 கலசங்களைக் கொண்டு அமைந்துள்ளது, இந்த ஆலயத்தின் ராஜகோபுரம். கோபுரத்தின் பல்வேறு தளங்களிலும் பல வகையான சுவரோவியங்கள் காணப்படுகின்றன. திருவிளையாடல் புராணம், கந்தபுராணம், பெரியபுராணம் தொடர்பான சிற்பங்களும், ஓவியங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. 10 நாள் தைப்பூசம், ஆணி உத்திரம், ஆடிப்பூரம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, திருக்கார்த்திைக, மகா சிவராத்திரி, கந்தசஷ்டி, பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் இங்கு வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகின்றன.

    இந்த ஆலயத்தில் பிரதோஷ பூஜையில் பக்தர்கள் தங்களின் பிரார்த்தனைகளை எழுதிக் கொண்டு வந்து இறைவனிடம் செலுத்தும் வகையில், சுவாமி சன்னிதியில் கீழே இறங்கும் வழியில் பிரார்த்தனைப் பெட்டி ஒன்றும் வைக்கப்பட உள்ளது. ஜாதக ரீதியாக கெடுபலன் உள்ளவர்கள், இந்த பிரார்த்தனை பெட்டியில் உங்கள் வேண்டுதலை எழுதி செலுத்தினால், சகல தோஷங்களும் நீங்கும் என்பது நிச்சயம் என்கிறார்கள்.

    சித்தருக்காக செவிசாய்த்த ஈசன்

    ஒரு முறை கருவூர் சித்தர், இந்த திருத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைத்தார். அவர் வந்த நேரத்தில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றின் எதிர் கரையில்தான், திருநாறும்பூநாதரின் ஆலயம் இருந்தது. இதனால் மனம் வருந்திய கருவூர் சித்தர், "இறைவா.. உன்னை தரிசிக்க முடியாதபடி, ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. உன்னை எப்படி நான் தரிசிப்பது. நான் உன்னைக் காண முடியாமல் வாய்விட்டுப் புலம்புவது உனக்கு கேட்கிறதா? இல்லையா?" என்று ஈசனைப் பணிந்தார்.

    அப்போது திருப்புடைமருதூர் சிவபெருமான், தனது திருமேனியை இடது பக்கம் சாய்ந்து, செவி மடுத்து சித்தரின் வேண்டுதலைக் கேட்டாராம். இதனால் இத்தல இறைவன் சற்றே சாய்ந்த நிலையில் அருள்பாலிப்பதை இன்றளவும் காண முடியும். சித்தரின் வேண்டுதலைக் கேட்டதும், சிவனருளால் ஆற்றில் வெள்ளம் குறைந்தது. சித்தரும், மறுகரைக்குச் சென்று திருநாறும்பூநாதரை வழிபட்டு மகிழ்ந்தார். பின்னர் இத்தல இறைவனிடம், "இங்கு வரும் பக்தர்களின் கோரிக்கை எதுவாக இருந்தாலும் அதனை செவி சாய்த்துக் கேட்டு, உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும்" என்று சித்தர் வேண்டிக்கொண்டார். அதற்காகவே இத்தல இறைவன் சற்றே சாய்ந்த நிலையில் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

    அமைவிடம்

    திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் செல்லும் சாலையில் 28 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது வீரவநல்லூர். அங்கிருந்து பிரியும் சாலையில் 7 கிலோமீட்டர் தூரத்தில் திருப்புடைமருதூர் திருத்தலம் இருக்கிறது.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    Next Story
    ×