search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    திருப்படைமருதூர் நாறும்பூ நாத சுவாமி திருக்கோவில்- திருநெல்வேலி
    X

    திருப்படைமருதூர் நாறும்பூ நாத சுவாமி திருக்கோவில்- திருநெல்வேலி

    • மாசி மாதம் முழுவதும் சூரிய ஒளி சுவாமியின் சிரசில் பட்டு தொடர்வது குறிப்பிடத்தக்கது.
    • 18-ந்தேதி இந்த ஆலயத்தில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாப்பட உள்ளது.

    திருநெல்வேலியில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் சாலையில் திருநெல்வேலிக்கு மேற்கில் 30 கி.மீ. தொலைவில் உள்ள ஊர் வீரவ நல்லூர். இவ்வூருக்கு வடமேற்கில் ஏறத்தாழ ஆறு கி.மீ. தொலைவில் பொருநை ஆற்றங்கரையில் திருப்புடை மருதூர் கிராமம் உள்ளது. கடனா ஆறு என்ற ஆறு இப்பகுதியில் பொருநை ஆற்றில் கலக்கிறது. ஆற்றங்கரைக்கு சற்று அருகில் நாறும்பூநாத சாமி கோவில் உள்ளது. மருதமர காட்டுப் பகுதிக்குள் அற்புதம் நிகழ்த்தி ஆண்டவன் வெளிப்பட்ட திருத்தலம்.

    ஒரு சமயம் கொடிய வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக தன் படை பரிவாரங்களோட மன்னன் ஒருவன் வந்திருந்தான். நீண்ட நேரம் எங்கும் அலைந்தும் எதுவும் அகப்படாத நிலையில் மருத மரங்கள் நிறைந்திருந்த வனத்துக்குள் படை பரிவாரங்களோடு சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தான்.

    அந்த சமயத்தில் அழகிய புள்ளிமான் ஒன்று மின்னல் போல் துள்ளி குதித்து ஓடி ஒளிந்தது. அதனைப் பிடிக்க எண்ணிய மன்னன் தனது வில்லிலிருந்து கூரான அம்பை குறி பார்த்து எய்தான். அம்பால் தாக்கப்பட்ட மான் மிகப்பெரிய மருத மரத்தின் அருகே நின்று சென்று மாயமாய் மறைந்து போனது. இதனால் தாங்க முடியாத ஆத்திரம் ஏற்பட்டது மன்னனுக்கு. அருகே கிடந்த கோடரியால் மருத மரத்தை வெட்டினான். அந்த வேலையில் தான் யாரும் எதிர்பாராத விதமாக அந்த மான் ஓடி ஒளிந்த மருத மரத்திலிருந்து குருதி வெளிப்பட ஜோதிப்பிழம்பாய் சுயம்பு மூர்த்தியாய் இறைவன் லிங்க வடிவில் வெளிப்பட்டான் .

    இந்த அதிசய காட்சியை கண்ட மன்னன் பொங்கிப் பெருகிய கண்ணீர் வெள்ளத்தில் இறைவனை மானசீகமாக வணங்கினான். மன்னன் இறைவன் தன்னை ஆட்கொண்டு அந்த மருதவனத்தில் வெளிப்பட காரணமான பரம்பொருளுக்கு அவ்விடத்தில் ஒரு திருக்கோயில் கட்ட மனதில் உறுதி கொண்டான். அவ்விடத்தில் ஒரு கலைக்கோயில் ஒன்று உருவானது. திருப்புடைமருதூரில் கருவறையில் காணும் நாறும்பூநாத சுவாமி பீடத்திலிருந்து சற்று ஒருக்களித்து இடப்பக்கம் தலை சாய்த்து இருக்கிறார்.

    அது உண்மையிலேயே பக்தனின் குரலுக்கு செவி சாய்ப்பதற்காக சித்தர் வேண்டிய ஒன்றாகும். கருவூர் சித்தர் நாறும்பூ நாதரை தரிசிக்க தாமிரபரணியின் அக்கறையில் வந்து கொண்டிருந்தார். அவர் வந்த நேரம் ஆற்றிலே பெரும் வெள்ளம் சுழிப்போடு ஓடிக்கொண்டிருந்தது. எனவே கரையில் நின்றவாறு "நாறும் பூ நாதா! உன்னை தரிசனம் செய்ய வந்து கொண்டிருக்கிறேன். தாமிரபரணியில் வெள்ளம் புரண்டோடுகிறது. இக்கரையில் இருக்கிறேன் உன் திருமுக தரிசனத்திற்கு வழி சொல்ல மாட்டாயா" என்று உரக்க குரல் கொடுத்து நாறும் நாதரை அழைத்தார்.

    பக்தனின் குரலுக்கு செவி சாய்க்கும் நாறும்பூநாதர் தன் தலையை சிறிது திருப்பி "உன் விருப்பப்படி எனது ஆலயத்திற்கு வருவதற்கு சிரமப்பட வேண்டாம். பொருநையில் இறங்கி உள்ளே நடந்து வர தானே தயங்காமல் திருமுக தரிசனம் கிடைக்கும்" என்று அசரீரியாக ஒலித்தார். அவ்வாறே அவரும் செய்தார். அன்று முதல் கருவூராருக்காக சாய்த்த தலை நிமிராமல் வரும் பக்தர்களுக்காக மக்கள் குறையை தலை சாய்த்து கேட்டு அவர்களுக்கு வேண்டியதை செய்து தரும் வள்ளலாக திகழ்கிறார்.

    முதலாம் உள்சுற்றில் அருள்மிகு நாறும்பு நாதர் சன்னதியும் இதற்கு வலப்பக்கமாக அருள்மிகு கோமதி அம்பாள் சன்னதியும் திகழ்கின்றன. சுவாமி சன்னதி வாயில் நுழைந்ததும் அதிகார நந்தி பலிபீடம் உள்ளது. முன் மண்டபம் மகா மண்டபம் அர்த்தமண்டபம் கருவறை என்ற அமைப்பில் சுவாமி சன்னிதி அமைந்துள்ளது . முக மண்டபம் எதிரே பிரதோஷ நந்தியும் பலிபீடமும் மகா மண்டபம் நடராஜர் சன்னதியும் தென்புறம் வாசலும் உள்ளன.

    அர்த்தமண்டபத்தில் துவாரபாலகர்கள் அனுக்ஞை விநாயகர் பாலசுப்பிரமணியர் காட்சி தருகின்றனர். மகா மண்டபத்தூண்கள் ஒவ்வொன்றும் அதி அற்புதமான நுணுக்கமான சிற்ப வேலைபாடுகளுடன் உள்ளன. கோஷ்டங்களில் தட்சணாமூர்த்தி, கபர்தீஸ்வரர், மகாவிஷ்ணு, மகாலட்சுமி, பிரம்மா, துர்க்கை அருகில் சண்டிகேஸ்வரர் எழுந்தருளியுள்ளனர். சுவாமி சன்னதியை போலவே முக மண்டபம் மகா மண்டபம் அர்த்தமண்டபம் கருவறை என்ற அமைப்பில் அம்மன் சன்னதி கட்டப்பட்டுள்ளது.

    நாறும்பூநாதர் எவ்வாறு சுயம்புவாக எழுந்தருளி இருக்கிறாரோ அதைப்போலவே அம்பாளும் உளிபடா திருமேனியாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். ஆற்றுக்குள் இருந்து அம்பாள் திருமேனி வெளிவந்தது. இதனை ருத்ராட்ச திருமேனி என்று அழைக்கிறார்கள். உள் திருச்சுற்றில் 63 நாயன்மார்கள் சன்னதி உள்ளது. கருவூர் சித்தரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக நாயன்மார்கள் வரிசையில் கருவூர் சித்தரையும் நிறுவியுள்ளனர்.

    மேலும் சப்தகன்னியர், காசி ராமேஸ்வர லிங்கங்கள், திருத்தியலிங்கங்கள், சதுரலிங்கம், கணபதி, மகாவிஷ்ணு, சுப்பிரமணியர், கிருஷ்ணர், ஜுரகரேஸ்வரர், கன்னிமூலை கணபதி, வள்ளி தெய்வானை சுப்பிரமணியர், சகஸ்ர லிங்கம், சரஸ்வதி, சனீஸ்வரர், நடராஜர், பைரவர், சந்திரன், சூரியன், பிரம்மதண்டம் ஆகிய சன்னதிகள் உள்ளன. இரண்டாம் திருச்சுற்றில் கீழ் பகுதி சிற்ப வேலைப்பாடு கூடிய கலைநயத்தில் தூண்கள் அமைந்துள்ளது.

    வடபுறம் கொடுங்கை அமைப்போடு கூடிய கூத்தாடும் தேவருக்கான சன்னதி அமைந்துள்ளது. இந்த ஆலயம் உருவாகக் காரணமாக இருந்த பிரம்மதண்டம் கருவறை அருகே இடது புறத்தில் நிறுவப்பட்டு உள்ளது. கருவறையை சுற்றி ராமேஸ்வரலிங்கம் காசிலிங்கம் என்ற பெயர்களில் பல சிறிய சிவலிங்கங்கள் உள்ளது. இத்திருக்கோயிலின் நடராஜர் புனுகு வாசனை திரவியத்தால் உருவாக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. திருக்கோவிலின் கோபுரத்தில் பல மூலிகை வர்ணம் பூசிய ஓவியங்களும் மிகுந்த கலை நுட்பம் உடைய வேலைப்பாடுகளும் கொண்ட மர சிற்பங்களும் அமையப்பட்டுள்ளது.

    திருப்புடைமருதூர் பஞ்ச க்ரோச தலங்களில் ஒன்றாகும். குரோசம் என்றால் "காசிக்கு இணையான"என்ற பொருள். இதனை 'தட்சனகாசி' என்றும் குறிக்கப்படுகிறது. தேவர்களுக்காக தோன்றிய அமுதக் குடத்தை மானுடர்களும் பயன் பெற எண்ணி அம்பெய்தி உடைத்தார் ஈசன். பல்வேறு இடங்களில் ஐந்து குரோசம் வரை பரவி ஐந்து தலங்களை உண்டாக்கியதால் பஞ்சகுரோசத் தலங்கள் என அழைக்கப்படுகின்றன. ஒரு குரோசம் என்பது இரண்டரை நாழிகையில் கடந்து செல்லக்கூடிய தூரம் ஆகும்.

    திருநெல்வேலியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் காசிக்கு நிகரான இந்த பஞ்ச க்ரோச தலங்கள் அமைந்துள்ளன. இவை சிவசைலம் சிவசைலப்பர் கோயில், ஆழ்வார்குறிச்சி வன்னீஸ்வரர் கோயில், கடையம் வில்வவனநாதர் கோயில், 'பாபநாசம் பாபநாசம் கோயில் என்பவற்றோடு திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலும் சேர்ந்து பஞ்சக்ரோசத் தலங்கள் ஆகும். சூரியன் வழிபடும் தலமாகவும் இது அமைந்துள்ளது. மாசி மாதம் முழுவதும் சூரிய ஒளி சுவாமியின் சிரசில் பட்டு தொடர்வது குறிப்பிடத்தக்கது.

    குறிப்பாக மகாசிவராத்திரி அன்று காலை 6.15 க்கு மேல் 7.00 மணிக்குள் இந்த மாபெரும் அதிசயம் இத்திருக்கோயிலில் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. தீராத நோய் உள்ளவர்கள் பிரார்த்தனை நிறைவேற வேண்டும் என்று விரும்புவார்கள் சுவாமிக்கும் அம்பாளுக்கும் படி பாயாசம் நிவேதனம் செய்து ஏழைகளுக்கு வழங்குகிறார்கள். தாங்களும் அந்த படிப்பாயா சத்தினை உண்டு தங்கள் பிராத்தனையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள் திருமணத் தடை நீக்கம், புத்திர தோஷம் நீக்கம், தீராத பிணிகள் நீங்கும் ,குடும்ப அல்லல்கள் நீங்கிடவும், குடும்பத்தில் செல்வம் பெருகவும் கல்வி திறக்கவும் வியாபார அபிவிருத்திக்காகவும் இங்கு வேண்டிக் கொண்டு பலன் பெறுகிறார்கள்.

    வேண்டிக் கொண்ட செயல்கள் நிறைவேறினால் சுவாமிக்கு பட்டு வஸ்திரங்கள் சாற்றி சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்கிறார்கள். அம்பாளுக்கு புடவை சாத்தி திருக்கல்யாணம் கைவளையல்கள் போட்டு தொட்டில் கட்டி வளைகாப்பு மற்றும் படிப்பாயாசம் படைக்கும் நேர்த்திக்கடன்கள் நிறைவேற்றுகிறார்கள். இத்திருக்கோயிலைப் பொறுத்தவரை தைப்பூச திருவிழா பிரம்மோற்சவம் ஆக கொண்டாடப்படுகிறது.

    இறுதி நாளில் தீர்த்தவாரி நடந்து விழா நிறைவடைகிறது. புராண சிறப்பு வாய்ந்த திருவிழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. சுவாமி அருகிலேயே கோமதி அம்பாள் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள் என்பது முக்கியமானது. மேலும் தினமும் காலை 7 மணிக்கு நெய்வேதியம் ஆனவுடன் அருகில் உள்ள தாமிரபரணி ஆற்றுக்கு சென்று பாயசத்தின் ஒரு பகுதியை தாமிரபரணி ஆற்றுக்கு சமர்ப்பித்து விட்டு வரும் அற்புத நிகழ்வு நடைபெறும் இடமாகும்.

    தினமும் ஆறு கால பூஜை நடைபெறும் திருப்படைமருதூர் நாறும்பூ நாத சுவாமி திருக்கோயில் ஆகும். அதிகாலை திருவனந்தல், 7:00 மணி சுமாருக்கு உதயமார்த்தாண்டம் என்னும் பூஜையும், ஏழரை முதல் 8 மணி வரை விளாபூஜையும், பின்னர் கால சந்தியும் உச்சிக்காலமும் சாயரடசை பூஜையும் அர்த்த ஜாமமும் நடைபெறுகிறது. இதைத் தவிர ஒவ்வொரு சோமவாரமும் பிரதோஷமும் மக்கள் அதிக அளவில் வந்து தரிசனம் செய்யும் நாட்களாக அமைகின்றன.

    வருகிற 18ந்தேதி இந்த ஆலயத்தில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாப்படுகிறது. பக்தர்கள் இதில் கலந்து கொள்வதற்கு வசதியாக வீரவநல்லூர் மற்றும் முக்கூடலில் இருந்து அன்று மாலை 4மணி முதல் மறுநாள் காலை 6மணி வரை இலவச பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    Next Story
    ×