search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    பிரிந்த தம்பதிகளை இணைக்கும் நெய்குப்பை சுந்தரேசுவரர் ஆலயம்
    X

    பிரிந்த தம்பதிகளை இணைக்கும் நெய்குப்பை சுந்தரேசுவரர் ஆலயம்

    • பார்வதி தேவியின் சாபம் நீங்கி இறைவனுடன் இணைந்த தலம் இது.
    • மூன்று நிலை ராஜ கோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது ஆலயம்.

    பார்வதி தேவியின் சாபம் நீங்கி இறைவனுடன் இணைந்த தலம் இது. எனவே, இத்தல இறைவன்-இறைவியை வழிபடுவதால் நம் பாவங்கள் கரைந்து நாளும் நலமாய் வாழ்வது நிச்சயமே!. பார்வதி தேவி கிணற்றில் இருந்து நெய்யை எடுத்து, இறைவனுக்குப் பூஜை செய்து சாப விமோசனம் பெற்றதாக ஒரு புராண வரலாறு உள்ளது.

    பார்வதிக்கு ஒரு நாள் திடீரென்று ஓர் ஆசை உண்டானது. பந்து விளையாட வேண்டும் என விரும்பினாள் அன்னை. தனது ஆசையை சிவபெருமானிடம் கூறவே, சிவபெருமான் உடனே நான்கு வேதங்களையும் ஒரு பந்தாக உருவாக்கி பார்வதியிடம் கொடுத்தார்.

    பார்வதி தனது தோழிகளுடன் பந்து விளையாடத் தொடங்கினாள். நேரம் கடந்து கொண்டேயிருந்தது. ஆட்டம் முடிய வில்லை. ஆதவன் அஸ்தமிக்கும் நேரம் வந்தது. தான் மறைந்தால் அன்னையின் ஆட்டம் தடைபடுமே என்றெண்ணிய சூரியன், அஸ்தமிக்காது தயங்கி நின்றது. கோபம் கொண்ட சிவபெருமான், பார்வதிக்கும், தன் கடமையைச் செய்யத் தவறிய சூரியனுக்கும் சாபமிட்டார்.

    தேவியை பசுவாகும்படி சிவபெருமான் சாபமிட்டார். இதையடுத்து தேவி தன் தமையன் கேசவன் மாட்டு இடையனாகப் பின் தொடர பூலோகம் வந்தாள். பந்து வந்து விழுந்த கொன்றைக் காட்டில் சுயம்பு லிங்கமாக இருந்த புற்றின் மீது பசு உருவில் இருந்த தேவி பாலைச் சொரிந்து வழிபட்டாள். ஒரு நாள் பசுவின் குளம்பு புற்றின் மீது பட, தேவி சுய உருவம் பெற்றாள்.

    சாபம் நீங்கப் பெற்ற அன்னையின் முன் தோன்றிய இறைவன் 'நீ சுயரூபம் பெற்றுவிட்டாய். எனினும் நெய்யால் பூஜை செய்து பஞ்சாக்னியில் தவம் செய்து என்னை வந்தடைவாய்' எனச் சொல்லி மறைந்தார்.

    உமையவள் இறைவனை பால் கொண்டு அபிஷேகம் செய்த தலம் பந்தனைநல்லூர். இது தற்போது பந்தநல்லூர் என்று அழைக்கப்படுகிறது. பார்வதி தேவி இறைவனுக்கு ஊற்றி வழிபட்ட பால், அங்கிருந்து இரண்டு கி.மீ தொலைவில் உள்ள நெய்குப்பை என்ற தலம் வரை ஓடி வந்து நெய்யாக மாறியது.

    அன்னை பார்வதி அந்த நெய்யைக் கொண்டு, இங்குள்ள இறைவனை பூஜித்தாள். அந்தத் தலமே நெய்குப்பை திருத்தலமாகும். அன்னையின் சாபம் நீங்கிய தலம் இது. இங்கு உள்ள ஆலயமே சுந்தரேசுவரர் ஆலயமாகும். பந்தநல்லூரில் சொரிந்த பால் இந்தத் தலத்தில் நெய்யாக மாறியதாக தல வரலாறு தெரிவிக்கிறது.

    கூபம் என்றால் கிணறு என்று பொருள். நெய்க்கூபம் என்ற பெயர் கொண்ட இந்தத் தலம் நெய்கூடம் என்றாகி, பின்னர் மருவி தற்போது நெய்குப்பை என அழைக்கப்படுகிறது. பார்வதி தேவி கிணற்றில் இருந்து நெய் எடுத்து சுவாமிக்கு பூஜை செய்து இறைவனுடன் ஐக்கியமான சிறப்புக்குரிய தலம் இது.

    மூன்று நிலை ராஜ கோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது ஆலயம். கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது இக்கோவில். பலிபீடம், நந்தி தேவனைக் கடந்து உள்ளே சென்றால் மணிமண்டபம். அம்மன் அருள்மிகு சவுந்திர நாயகி தென்புறம் நோக்கி சாந்தமான முகத்துடன் அருள் பாலிக்கிறாள். அடுத்து உள்ளது மகாமண்டபம்.

    வடபுறம் நடராஜர், சிவகாமி அருள்பாலிக்க, வடகிழக்கு மூலையில் பைரவர், சூரியன் திருமேனிகள் உள்ளது. அடுத்து அர்த்த மண்டபத்தைத் தொடர்ந்து கருவறையில் அருள்மிகு சுந்தரேசுவரர் லிங்கத் திருமேனியில் பக்தர்களுக்கு காட்சி தந்து கொண்டிருக்கிறார்.

    தேவ கோட்டத்தில் வடபுறம் தட்சிணாமூர்த்தியும் தென்புறம் துர்க்கையும் உள்ளனர். துர்க்கையின் எதிரே சண்டிகேஸ்வரரின் சன்னிதி உள்ளது. உட்பிரகாரத்தில் மேற்கில் மும்மூர்த்தி கணபதி, சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை, பால கணபதி, சிவபெருமான், ருத்ராபதீஸ்வரர், பைரவர், கஜலட்சுமி, நால்வர் திருமேனிகளும் உள்ளன. ஆலயத்தின் எதிரே வெளியே வலஞ்சுழி விநாயகர் தனி மண்டபத்தில் வீற்றிருக்கிறார்.

    சூரியன் அஸ்தமாகாது தாமதமானதால் சிவபெருமானிடம் சாபம் பெற்றார் அல்லவா? அந்த சாபத்திலிருந்து விமோசனம் பெறுவது எப்போது என்று அவர் சிவபெருமானிடம் கேட்டார்.

    ஆண்டுதோறும் மூன்று நாட்கள் தனது கிரகணங்களால் இத் தலத்தில் பூஜை செய்ய, சாப விமோசனம் கிடைக்கும் என சிவபெருமான் கூற, சூரியனும் அதன்படி பூஜை செய்து சாபவிமோசனம் பெற்றார் என்பது புராண வரலாறு.

    இங்கு ஆண்டு தோறும் ஆவணி மாதம் 19, 20, 21 ஆகிய மூன்று நாட்களும் சூரியன் தன் ஒளிக்கதிர்களால் கருவறை இறைவனை பூஜை செய்வதை இன்றும் காணலாம்.

    இத்திருக்கோவிலுக்கு எதிர்புறம் சூரிய தீர்த்தமும், வடக்கே கொள்ளிடம் மற்றும் மண்ணியாறும் அமைந்து ஆன்மிக சிறப்போடு இயற்கை அழகினையும் இனிதே கொண்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்கது மண்ணியாறாகும். ஆலயத்திற்கு வடக்கே இம்மண்ணியாறு செல்வதால் இதை உத்தரவாஹினி என்றும், முருகப் பெருமானால் ஏற்பட்ட நதி இது என்பதால் சுப்பிரமணிய நதி என்றும் வழங்கப்பட்டது. நாளடைவில் சுப்பிரமண்ணிய என்ற சொல் மருவி இன்று மண்ணியாறு என்று அழைக்கப்படுகிறது.

    இக்கோவிலின் தலவிருட்சம் பவளமல்லி. தினசரி இங்கு காலை, சாயரச்சை என இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும், இங்கே கோவிலின் வெளியே வீற்றிருக்கும் வலஞ்சுழி விநாயகர் சூரிய பூஜைக்கு இடையூறு ஏற்படாதவாறு சற்றே தள்ளி அமர்ந்து காட்சி தருகிறார். கர்ப்பகிரகமும் நுழைவாசலை விட்டு சற்றே தள்ளி அமைந்திருப்பது ஓர் அற்புதமான அமைப்பாகும்.

    மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் பெரும் சிறப்பைப் பெற்றுள்ள இத்தலத்தை ஒரு முறை தரிசனம் செய்வோருக்கு சகல சாப பாவ விமோசனங்களை இத்தல இறைவன் தந்தருள்வார் என பக்தர்கள் நம்புகின்றனர்.

    பிரிந்த தம்பதியர் இந்த ஆலயம் வந்து, இறைவன் இறைவியை அர்ச்சனை செய்து வழிபட்டு, 48 நாட்கள் முடிவில் ஆலயத்தில் மூல மந்திர ஹோமம் நடத்துவதினால், அவர்கள் மீண்டும் சேர்ந்து இனிய இல்லறம் நடத்துவது உறுதி என்கின்றனர் பக்தர்கள்.

    அமைவிடம்

    கும்பகோணம், திருப்பனந்தாள், பந்தநல்லூர், சீர்காழி ஆகிய ஊர்களிலிருந்து நிறைய பேருந்து வசதி உள்ளது. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இத்தலம் கும்பகோணத்தின் வடகிழக்கில் 29 கி.மீ தொலைவிலும், பந்தநல்லூர் - வைத்தீஸ்வரன் கோவில் சாலையில் பந்தநல்லூரில் இருந்து 2 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

    -பொ.பாலாஜிகணேஷ், சிதம்பரம்.

    Next Story
    ×