search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    இருவாசல்கள்... ஒரு கருவறை... கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோவில்
    X

    இருவாசல்கள்... ஒரு கருவறை... கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோவில்

    • இது ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படுகிறது.
    • இது ஆழ்வார்களின் பாடல் பெற்ற தலம் ஆகும்.

    சாரங்கபாணி சுவாமி கோவில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளது. இது 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படுகிறது. இக்கோவில் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் விளைந்த திருத்தலமாகக் கருதப்படும் பெருமையுடையது. ஆழ்வார்கள் தம் பிரபந்தங்களில் இப்பெருமானை குடந்தைக் கிடந்தான் என்று அழகுற அழைக்கின்றனர். இக்கோவிலில் ஆராவமுதன் எனும் சார்ங்கபாணி பெருமாள் எழுந்தருளியுள்ளார். திருவரங்கனின் புகழைக் கூறும் பஞ்சரங்க திருத்தலங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது.

    கும்பகோணத்திலுள்ள வைணவக் கோவில்களில் மிகப் பழைமை வாய்ந்தது சார்ங்கபாணி கோவிலாகும். இது ஆழ்வார்களின் பாடல் பெற்ற தலம் ஆகும். கருவறையிலுள்ள தெய்வங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் நடுப்பகுதி தேரின் அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் குதிரைகள், யானைகள் ஆகியவையும், சக்கரங்களும், கல்லினால் ஆனவை. இக் கல்தேர் ஒரு சிறந்த கலைப்படைப்பு. இக்கோவிலின் மற்றொரு சிறப்பு இங்குள்ள கோபுரத்தில் நாட்டிய சாஸ்திரத்தின் 108 கரண வகைகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டிருப்பதாகும். சோழர்களால் கட்டப்பட்ட இக்கோவில் கலைநயம் மிகுந்த சிற்பங்கள் தூண்கள் மண்டபங்கள் இராஜ கோபுரங்கள் கட்டப்பட்டவையாகும்.

    இங்குள்ள மூலவர் சார்ங்கபாணி, ஆராவமுதன் எனப்படுகின்றார். உற்சவர் நான்கு திருக்கைகளுடன் சங்கு, சக்கரம், கதை, சார்ங்கம் என்ற வில், உடைவாள் ஆகிய ஐந்து திவ்ய ஆயுதங்களுடன் வலது திருக்கை அபயமளிக்கும் முத்திரையுடன் கைம்பொன் சுடராக திகட்டாத திண்ணமுமே என்னும்படி வேறு எந்த தலத்திலும் காணக்கிடைக்காத அழகுடன் காட்சியளிக்கிறார். சார்ங்கம் என்ற வில்லைக் கொண்டுள்ளதால் சார்ங்கபாணி எனப்படுகிறார்.

    தலவரலாறு

    ஒரு சமயம் முனிவர்கள் ஒன்று கூடி யாகம் வளர்த்தனர். யாகத்தின் அவிர்பாகத்தை மும்மூர்த்திகளில் சாந்தமானவர்கள் யாரோ அவருக்கு வழங்க முடிவுசெய்தனர். அதைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு பிருகு மகரிஷியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் பிரம்மா, சிவனிடம் சென்றார். அவர்கள் பிருகு முனிவரை கண்டும் காணாததுபோல் இருந்தனர். வைகுண்டம் சென்ற பிருகு முனிவர் திருமாலின் சாந்தகுணத்தை சோதிப்பதற்காக அவரது மார்பில் உதைத்தார். திருமால் அதைத் தடுக்காமல் பிருகுவின் பாதத்தை வருடினார்.

    இதைப் பார்த்த மகாலட்சுமி கோபத்துடன், 'சுவாமி! முனிவர் உங்கள் மார்பில் உதைக்கும் போது, அதைத் தடுக்காமல் விட்டுவிட்டீர்கள். இனி உங்களுடன் சேர்ந்து வாழமாட்டேன்' எனக்கூறி கணவரை பிரிந்து பூலோகம் வந்தார். பூலோகத்தில் கும்பகோணத்தில் உள்ள ஹேமபுஷ்கரணியில் 1008 தாமரை இதழ்களில் அழகிய குழந்தையாக அவதரித்தாள். அந்த நேரத்தில் அங்கு தவம் செய்துகொண்டிருந்த ஹேம மகரிஷி, குழந்தையை எடுத்து அவளுக்கு கோமளவல்லி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். கோமளவல்லிக்கு திருமண வயது வந்ததும், அவள் திருமாலை திருமணம் செய்யவேண்டி தவம் இருந்தாள். கோமளவல்லியின் தவத்துக்கு மகிழ்ந்து திருமால் வைகுண்டத்திலிருந்துதான் எழுந்தருளியுள்ள ரதத்துடன் இங்கு வந்து கோமள வல்லியை திருமணம் செய்துக்கொண்டார்.

    மகாலட்சுமியின் அவதார தலமாக கருதப்படுவதாலும், இருந்த இடத்திலேயே தவமிருந்து பெருமாளை தம் இருப்பிடத்திற்கே வரவழைத்து மணம் புரிந்த மகிமையாலும் இத்தலம் சிறப்பு பெறுகிறது. கோமளவல்லி தாயாருக்கு திருமஞ்சனம் செய்து, புடவை சாத்தி வழிபட்டால், பெண்களுக்கு திருமணம் கைகூடும். மேலும் இறைவனையும் இறைவியையும் ஒரு சேர வழிபட்டால், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.

    தாயாரை மணந்துக்கொள்ள வைகுண்டத்தில் இருந்து இத்தலத்திற்கு சாரங்கபாணி தேரில் வந்தார். எனவே சுவாமியின் சன்னிதி, தேரின் அமைப்பில் இருக்கிறது. இந்தத் தேரில் குதிரை, யானை, தேர் சக்கரங்கள் எல்லாம் கல்லினால் ஆனவை. பார்ப்பவர்கள் பரவசப் படுத்தும் வகையில் இக்கோவில் கோபுரம் 150 அடி உயரத்தில் 11 நிலைகளுடன் காட்சியளிக்கிறது. கோபுரத்தில் நாட்டிய சாஸ்திரத்தில் 108 கரணவகைகள் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.

    இந்தக் கோவிலில் உத்ராயண வாசல், தட்சிணாயன வாசல் என இரண்டு வாசல் உண்டு. தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்ராயண வாசல் திறந்திருக்கும். பின்னர் அந்த வாசல் மூடப்படும். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயன வாசல் திறக்கப்படும். இந்த வாசல் வழியாக கடந்து சென்றாலே பரமபதம் கிட்டும் என்பது ஐதீகம்.

    திருமால், தாயாரை திருமணம் செய்து வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறார். ஆகவே தாயாருக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. தாயாரை வணங்கிய பிறகே, பெருமாளை வணங்க வேண்டும். ஆகையால் தாயார் சன்னிதிக்கு சென்ற பிறகே, பெருமாள் சன்னிதிக்குள் செல்லும் வகையில் ஆலயம் வடிவமைப்பு உள்ளது. நடைதிறக்கும் போது, சுவாமி சன்னிதியில் செய்யப்படும் கோமாதா பூஜையை, இக்கோவிலில் கோமளவல்லித் தாயார் சன்னிதி முன்பாக நடத்துகின்றனர். பின்னரே, சுவாமி சன்னிதியில் கோ பூஜை நடக்கிறது.

    மகப்பேறு கிட்டாத தம்பதியர், இந்தத் திருக்கோவிலில் பெருமாள் சன்னிதியில் உள்ள, சந்தான கிருஷ்ணன் விக்கிரத்தினை பூஜை செய்வதன் மூலம் புத்திரபாக்கியம் பெறலாம் என்பது நம்பிக்கை. இவரை வணங்கினால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.

    தனிச்சிறப்பு

    கோவிலின் மைய ஆலயம் குதிரைகள் மற்றும் யானைகளால் வரையப்பட்ட தேரின் வடிவத்தில் உள்ளது. இது, இருபுறமும் திறப்புகளுடன், தேரில் சொர்க்கத்தில் இருந்து சாரங்கபாணி இறங்குவதைக் காட்டுகிறது. கோவிலின் மேற்கு பகுதியில் ஹேமரிஷி முனிவரின் சிற்ப பிரதிநிதித்துவம் உள்ளது. மத்திய ஆலயம் எனப்படும் கருவறை, 100 தூண்கள் கொண்ட மண்டபம் வழியாக அணுகப்படுகிறது. தேரின் வடிவத்தில் உள்ள உள் கருவறை வெளிப்புற நுழைவாயிலை எதிர்கொள்ளும் துவார பாலகர்களால் பாதுகாக்கப்படுகிறது. வெளிப்புற நுழைவாயிலிலிருந்து, கருவறைக்கு ஒரு துளையிடப்பட்ட சாளர மையம் உள்ளது.

    கோவிலின் மைய ஆலயத்தில், சாரங்கபாணியின் உருவம் பள்ளிகொண்ட தோரணையில் உள்ளது. இங்கு, சாரங்கபாணி, தலையை தனது வலது கையில் வைத்தவாறு, சயனத் திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். முனிவர் ஹேமரிஷி, லட்சுமி மற்றும் திருவிழா படங்கள் கருவறைக்குள் பொறிக்கப்பட்டுள்ளன. கருவறைக்கு உத்தராயண வாசல் மற்றும் தட்சினாயண வாசல் என பெயரிடப்பட்ட இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஆறு மாத காலத்திற்கு திறந்திருக்கும். ஜனவரி 15 முதல் ஜூலை 15 வரை, உத்தராயண வாசல் திறக்கப்படுகிறது. அதே போல, தட்சினாயண வாசல் ஆண்டின் பிற் பாதியில் திறக்கப்படுகிறது.

    இங்கு சயனகோலத்தில் இருக்கும் இறைவனின் திருப்பெயர் ஆராவமுதன். அமுதமே அருந்தினாலும் கொஞ்சத்திலேயே நமக்குத் திகட்டிவிடும். ஆனால், இந்த பெருமாளின் திருவருள் என்னும் அமிர்தத்தை எவ்வளவுதான் அருந்தினாலும், திகட்டவும் செய்யாது; பெருமாளை அனுதினமும் தரிசிக்கவேண்டும் என்ற நம் ஆர்வமும் தீரவே தீராது. எனவேதான், பெருமாளுக்கு இந்தத் திருப்பெயர் ஏற்பட்டது.

    இந்த உலகில் நாம் மறுபடியும் பிறவி எடுக்காமல் இருக்கவேண்டும் என்றால், ஆராவமுதனையும், சாரங்கம் ஏந்தி நின்று காட்சி தரும் சாரங்கபாணியையும் தரிசித்து நல்லருள் பெறுவோம்.

    Next Story
    ×