என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கோவில்கள்
திருவரகுணமங்கை நத்தம் விஜயாசன பெருமாள் கோவில் (சந்திரன்)
- தாயார்களுக்கு தனி சன்னதி இல்லை.
- திருவரகுணமங்கை என்னும் இத்தலம் தற்காலத்தில் நத்தம் என்றே வழங்கிவருகிறது.
நவக்கிரக நாயகர்களின் பெயரில் வரிசைப்படுத்தப்படும் நவ திருப்பதிகளில் இரண்டாவதாக சந்திரனுக்குரிய தலமாக விளங்கும் கோவில் "திருவரகுணமங்கை". தற்போது இந்த ஊர் நத்தம் என்று அழைக்கப்படுகிறது. 108-வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றாக விளங்கும் இக்கோவில், நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.
மூலவர் பெயர் : விஜயாசன பெருமாள் (வெற்றி ஆசனத்தில் அமர்ந்த கோலம்)
உற்சவர் பெயர் : எம்இடர்கடிவான்
தாயார்கள் : வரகுணமங்கை, வரகுணவல்லி (மூலவருடன் சேர்த்து திருக்கோலம்)
விமானம் : விஜயகோடி விமானம்
தீர்த்தம் : அக்னி தீர்த்தம், அகநாச தீர்த்தம், தாமிரபரணி.
கோவில் வரலாறு
முற்காலத்தில் உரோமச முனிவர் என்பவர் தன் சீடன் சத்தியவான் உடன் இங்கு எழுந்தருளினார். அப்போது சத்தியவான் இங்குள்ள அகநாச தீர்த்தத்தில் நீராடிக் கொண்டிருந்தான். அவ்வேளையில் தீர்த்தக்கரையின் மறுபக்கம் ஒரு மீனவன், மீன்களைப் பிடித்து கரையில் உலர்த்திக் கொண்டிருந்தான். இதனைப்பார்த்த சத்தியவான் அதனை கொடும் பாவமாக கருதினான். இப்படி இரக்கமேயின்றி உயிர்களைக் கொலை செய்கிறானே இவனுக்கு நரகத்தில் தான் இடம் கிடைக்கும் என்று தனக்குள் எண்ணிக் கொண்டிருந்தான்.
அப்போது மீன்களைப் பிடிப்பதற்காக மீண்டும் குளத்தில் வலையை வீச முற்பட்ட அந்த மீனவனை, பின்னால் இருந்து விஷப்பாம்பு ஒன்று தீண்டிவிடுகிறது. இதனால் அவன் அந்த இடத்திலேயே வாயில் நுரை தள்ளி இறந்துவிடுகிறான். அவன் இறந்த சில நிமிடங்களிலேயே விண்ணுலகத்தில் இருந்து வந்த ஒரு விமானம், அந்த மீனவனை ஏற்றிக்கொண்டு சொர்க்கத்திற்குச் சென்றது. இதனைக் கண்டு ஆச்சரியமும், குழப்பமும் அடைந்த சத்தியவான் உடனடியாக கரையேறி, உரோமச முனிவரிடம் சென்றான். அவரிடம் தான் பார்த்த சம்பவங்களை ஒன்றுவிடாமல் கூறிவிட்டு., அத்தோடு 'பிற உயிர்களை கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் கொலை செய்யும் ஒருவனுக்கு எப்படி சொர்க்க பதவி கிடைக்கும்' என்று முனிவரிடம் கேட்டான்.
உடனே உரோமச முனிவர் தன் ஞான திருஷ்டியால் அனைத்தையும் கண்டுணர்ந்து, சத்தியவானிடம் 'இந்தப் பிறவியில் மீனவனாய் இருந்தவன், போன பிறவியில் விதர்ப்ப நாட்டை ஆண்ட மன்னன் ஆவான். அவன் தர்மத்தின் வழியில் நின்று, அநேக நல்ல காரியங்களை செய்திருந்தாலும், கூடாத நட்பின் சேர்க்கை காரணமாக தவறான சில பாவச்செயல்களையும் செய்ததால் இப்பிறவியில் மீனவனாக பிறந்தான். அவன் செய்த புண்ணிய காரியங்களால் இந்தப் பிறவியில் இந்த வரகுணமங்கை தலத்தில் பிறந்து முக்தி அடையும் பேறு பெற்றான் என்று விளக்கிக்கூறினார். இத்தலத்தில் உயிர் நீத்தவர்கள் அனைவரும் முக்தி அடைவார்கள் என்று இத்தலத்தின் பெருமையையும் எடுத்துரைத்தார்.
வேதவித்து முக்தி பெற்ற வரலாறு
முற்காலத்தில் ரேவா நதிக்கரையில் புண்ணிய கோசம் என்னும் அக்ரகாரத்தில், வேதவித் என்ற அந்தணன் வாழ்ந்து வந்தான். அவன் தன் தாய், தந்தை, குரு ஆகியோருக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து முடித்து விட்டு, 'ஆசனதை' என்னும் மந்திரத்தை உச்சரித்து திருமாலை நோக்கி தவம் இயற்ற முடிவு செய்திருந்தான். அப்போது திருமால், வயோதிக வடிவம் கொண்டு வேதவித்தை தேடி வந்தார். 'சக்யம், மகேந்திரம் என்னும் இரு மலைகளுக்கு இடையில் உள்ள வரகுணமங்கை என்னும் பதியில் சென்று தவம் இயற்று. அதுவே ஆஸனதை மந்திரத்தை உச்சரித்து தவம் இயற்றுவதற்கு ஏற்ற இடம்' என்று கூறினார்.
வேதவித்தும் ஆசனதை மந்திரத்தை வரகுணமங்கையில் இருந்து உச்சரித்து, திருமாலை நோக்கி கடும் தவம் இருந்தான். அதன் பயனாக திருமால் வேதவித்திற்கு காட்சியளித்து, வேண்டிய வரம் கேள் என திருவாய் மலர்ந்தருள, அதற்கு தங்கள் திருவடிகளை பற்றும் அருளன்றி வேறேதுவும் வேண்டாம் என வேண்டி நின்றார். அவ்வாறே பெருமாளும் வேதவித்துக்கு முக்தியருளினார்.
எனவே இங்கு வந்து முறைப்படி வழிபட்டால் முக்தி அடையலாம் என்பது திண்ணம்.
அக்னி பகவானுக்கு சாப விமோசனம் அளித்த வரலாறு:
முற்காலத்தில் ஒரு சமயம் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டது. அக்கினி தேவனும் அந்த சண்டையில் ஈடுபட்டு ஏராளமான அசுரர்களை அழித்தான். அப்போது தாரகன், கமலாட்சன், காலதம்ஷ்ட்ரன், பராசு, விரோசனன் முதலான அரக்கர்கள் தேவர்களுக்குப்பயந்து கடலில் புகுந்து ஒளிந்து கொண்டனர். இருப்பினும் தேவர்கள் அசரும்போதெல்லாம் வெளியே வந்து அவர்களை தாக்கிவிட்டு, மீண்டும் கடலுக்குள் சென்று ஒளிந்த வண்ணம் இருந்தனர். இதனால் கோபமுற்ற இந்திரன் அக்கினி தேவரை அழைத்து, "அசுரர்களுக்கு அரணாகத்திகழும் சமுத்திரத்தின் நீர் வற்றிப்போகும் படி செய்" என்று கட்டளையிட்டார். ஆனால் சமுத்திரத்தில் அநேக கோடி உயிர்கள் வாழ்வதால், அந்த நீரை வற்றச்செய்வதில் விருப்பம் இல்லாத அக்கினி பகவான், இந்திரனின் கட்டளையை நிறைவேற்ற முடியாது என்று பணிவுடன் கூறினார். ஆனாலும் வெகுண்ட தேவேந்திரன் அக்கினிதேவனை பூவுலகில் மனிதனாக பிறக்கும்படி சாபமளித்தார்.
இந்திரனின் சாபப்படி பூவுலகில் இந்த திருவ ரகுணமங்கை பகுதியில் மனிதனாகப்பிறந்த அக்கினிதேவன், இங்குள்ள பெருமாள் மீது அதிக பக்தி செலுத்தினார். திருவர குணமங்கை தலத்தில் தீர்த்தம் ஒன்றை உருவாக்கி, அதில் நீராடி தினமும் பெருமாளை வணங்கி வந்தார். இதனால் மகிழ்ந்த பெருமாள், இந்திரனுக்கு காட்சியளித்து சாப நிவர்த்தியருளினார் என்பதும் வரலாறு.
பிரம்மனின் ஆணவம் அடக்கி, உரோமச முனிவருக்கு அதிக ஆயுளை அருளுதல்:
படைக்கும் கடவுளான பிரம்மாவுக்கு ஒருமுறை தனக்கு தான் அதிக ஆயுட்காலம் இருக்கிறது என்ற கர்வம் ஏற்பட்டது. இதனை அறிந்த திருமால் அவரின் ஆணவத்தை அடக்க திருவுள்ளம் கொண்டார்.
பிரம்மாவின் ஆயுட்காலம்
பூவுலகில் கிருஷ்ணபட்சம் என்பது 15-நாட்களை கொண்டது. இந்த 15-நாட்கள் தேவலோகத்தினருக்கு ஒரு இரவு பொழுது ஆகும். அதுபோல சுக்லபட்சம் என்பது 15-நாட்களை கொண்டது. இந்த 15-நாட்கள் தேவலோகத்தினருக்கு ஒரு பகல் பொழுது ஆகும். இந்த இரண்டு பட்சங்களும் சேர்ந்த 15+15=30 நாட்கள் பூவுலகத்தினருக்கு ஒரு மாத காலம் ஆகும். தேவலோகத்தினருக்கு இந்த 30 நாட்களை சேர்த்தால் தான் ஒரு நாள் ஆகும். இப்படி 360-நாட்கள் சேர்ந்தால் அது தேவர்களுக்கு ஒரு வருடம்என்று கணக்கிடப்படும். இப்படி 12,000 தேவ வருடங்கள் சேர்ந்தால் அது ஒரு சதுர்யுகம் என்று கணக்கிடப்படும்.
கிருதயுகம், திரதாயுகம், துவாபராயுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களும் தோன்றி மறையும் காலம் ஒரு சதுர்யுகம் என்று கணக்கிடப்படும். அது மனிதர்களின் கால கணக்குப்படி மொத்தம் 43,20,000 ஆண்டுகள் ஆகும். இதைப்பத்து பங்காக பிரித்தால் அதில் நான்கு பங்கு கிருதயுகத்தின் காலம். அதாவது 17,28,000-ம் ஆண்டுகள். மூன்று பங்கு திரேதாயுகத்தின் காலம். அது 12,96,000 வருடங்கள் ஆகும். இரண்டு பங்கு 8,64,000 ஆண்டுகள் துவாபராயுகத்தின் காலம்.
மீதி ஒரு பங்கு 4,32,000 ஆண்டுகள் என்பது கலியுகம். ஆக சதுர்யுகங்கள் என்பது 43,20,000 ஆண்டுகளாகும். இவ்வாறு 1000 சதுர்யுகங்கள் சேர்ந்தால் அது தான் பிரம்மாவின் பாதி நாள். இதுவே கல்ப காலம் எனப்படுகிறது. 1000 சதுர்யுகங்கள் பிரம்மனுக்கு ஒரு பகல் பொழுது, 1000 சதுர்யுகங்கள் பிரம்மனுக்கு ஒரு இரவு பொழுது என சேர்த்து 2000 சதுர்யுகங்கள் பிரம்மனுக்கு ஒரு நாளாக கணக்கிடப்படுகிறது. ஒரு பிரம்மாவின் ஆயுட்காலம் முடிவடையும் போது பிரளயம் ஏற்பட்டு, பிரம்ம சிருஷ்டி முடிவுறும் என்பது கணக்கு.
இதனால் தான் பிரம்மாவுக்கு தனக்கு மட்டுமே நீண்ட ஆயுள் என்ற கர்வம் ஏற்பட்டது. இந்த சமயத்தில் தான் தன் மேனி முழுவதும் அதிக உரோமங்கள்(முடி) கொண்ட உரோமச முனிவர் திருமாலை குறித்து இந்த திருவரகுணமங்கை பகுதியில் தவமியற்றியதாகவும், அந்த தவத்தை மெச்சிய பெருமாள், அவருக்கு காட்சியளித்து, ஒரு பிரம்மனின் ஆயுட்காலம் முடியும் தருணத்தில் உன் உடம்பில் இருந்து ஒரு உரோமம் உதிரும், இப்படி உன் உடம்பிலுள்ள உரோமங்கள் உதிரும் வரை உரோமச முனிவரின் ஆயுட்காலம் நீண்டுகொண்டே இருக்கும் என்று வரமளித்தார்.
இவ்வாறு இத்தலத்தில் தான் பிரம்மனின் ஆணவத்தை அடக்க, உரோமச முனிவருக்கு அதிக ஆயுளை பெருமாள் அருளியதாக பிரம்மாண்ட புராணம் கூறுகிறது.
மூலவர் விஜயாசனர்:
கருவறையில் விஜயகோடி விமானத்தின் கீழ் ஆதிசேஷன் குடைபிடிக்க, வெற்றி ஆசனத்தில் பெருமாள் அமர்ந்த கோலத்தில், சங்கு, சக்கரம், ஏந்தியபடி, அபய வரத முத்திரைகள் காட்டி கிழக்கு முகமாக, இருபுறமும் பூகளும், நிலமகளும் வீற்றிருக்க சேர்த்தியாக அற்புத காட்சியளிக்கிறார் விஜயாசன பெருமாள்.
வரகுணமங்கை தாயார்
ஸ்ரீ தேவியின் அம்சமான பெரியபிராட்டியாய் இரண்டு கரங்கள் கொண்டு, அமர்ந்த கோலத்தில், கருவறையில் விஜயாசன பெருமாளுக்கு வலதுபுறம் காட்சித்தருகிறாள் வரகுணமங்கை தாயார்.
வரகுணவல்லி தாயார்:
பூ தேவியின் அம்சமான பூமிபிராட்டியாய் இரண்டு கரங்கள் கொண்டு, அமர்ந்த கோலத்தில், கருவறையில் விஜயாசன பெருமாளுக்கு இடதுபுறம் காட்சித்தருகிறாள் வரகுணவல்லி தாயார். இங்கு கருவறையில் தாயார்கள் இருவரும் பெருமாளோடு சேர்த்தியாக இருப்பதால், தாயார்களுக்கு தனி சன்னதி இல்லை.
உற்சவர் எம்இடர்கடிவான் சிறப்பு
இங்கு உற்சவர் தன்னை நாடி வரும் பக்தர்களின் துன்பங்களையும், துயரங்களையும் போக்குகிறார் என்பதால் நம்இடர்களை களையும் பெருமாளை எம்கடர்கடிவான் என்று சிறப்பித்து அழைக்கும்படியாக திருநாமம் கொண்டு காட்சித்தருகிறார்.
தாமிரபரணி ஆற்றின் வடகரையில் அமையப்பெற்றுள்ள இக்கோவில், ஐந்து நிலை ராஜகோபுரத்தை கொண்டது.
இந்த கோபுரத்தை தாண்டி உள்ளே சென்றால் கொடிமரமும், பலிபீடமும் அமையப்பெற்றுள்ளது. அதனை தாண்டி கருவறைக்கு நேரெதிரே கருடன் சன்னதி உள்ளது. அவரை வணங்கி, அடுத்த வாயில் வழியே உள்ளே சென்றால் நடுநயமாக பெருமாள் சன்னதியும், கருவறையை சுற்றிவர பிரகாரமும் அமையப்பெற்றுள்ளது
இதுதவிர முன்பக்கம் தனி சன்னதியில் யோக நரசிம்மர் சன்னதி அமையப்பெற்றுள்ளது. வெளித்திருச்சுற்றில் நந்தவனம் அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே தீர்த்தக்கிணறும் உள்ளது.
கோவில் சிறப்புக்கள்
இந்த தலத்தை நம்மாழ்வார் ஒரு சொல்லால் மங்களாசாசனம் செய்துள்ளார். இங்கு தாயார்கள் இருவரும் கருவறையில் பெருமாளோடு சேர்த்தியாக இருப்பதால், இவர்களுக்கு இங்கு தனி சன்னதி இல்லை.
திருவரகுணமங்கை என்னும் இத்தலம் தற்காலத்தில் நத்தம் என்றே வழங்கிவருகிறது. நத்தம் கோவில் என்று கேட்டால் தான் இப்போது தெரியும். இங்குள்ள யோக நரசிம்மருக்கு பிரதோஷ வேளையில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இவருக்கு செவ்வரளி மாலை சாத்தி, நீராஞ்சனம் சமர்பித்து வழிபடுவது இங்கு சிறப்பம்சம் ஆகும்.
திருவிழாக்கள்
இங்கு மாசி மாதம் கொடியேற்றமாகி பத்து நாட்கள் பெருந்திருவிழா நடைபெறும். திரு விழாவின் இறுதியாக இத்தல பெருமாள் திருவைகுண்டம் தாமிரபரணிக்கு எழுந்தருளி தீர்த்தவாரி காண்பார். சித்திரை மாதம் திருவைகுண்டம் கள்ளர்பிரானுக்கு நடை பெறும் பத்து நாட்கள் திருவிழாவின் ஐந்தாம் திருநாளுக்கு, இத்தல பெருமாள் எழுந்தருளி கருடசேவை காட்சியளிப்பார். வைகாசியில் ஆழ்வார்திருநகரியில் நடைபெறும் நம்மாழ்வார் அவதார உற்சவத்தின் ஐந்தாம் நாள், இத்தல பெருமாள் ஆழ்வார்திருநகரி எழுந்தருளி கருடசேவை காட்சியருளுகிறார். இதுதவிர புரட்டாசி சனிக்கிழமைகள், மார்கழி மாத வைகுண்ட ஏகாதசியை ஒட்டி நடைபெறும் முன்பத்து, பின்பத்து திருவிழாக்கள் ஆகியவையும் இங்கு சிறப்புப்பெற்றதாகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்