search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    திருத்தொலை வில்லிமங்கலம் சீனிவாச பெருமாள் திருக்கோவில்
    X

    திருத்தொலை வில்லிமங்கலம் சீனிவாச பெருமாள் திருக்கோவில்

    • இக்கோவில் இரட்டை திருப்பதி என்றே வழங்கி வருகிறது.
    • இந்த கோவில் ராகுவின் அம்சமாக விளங்குகிறது.

    நவக்கிரக நாயகர்களின் பெயர் வரிசையில் எட்டாவதாகவும், நவதிருப்பதி வரிசைகளுள் நான்காவதாகவும் விளங்குவது "திருத்தொலை வில்லிமங்கலம்" தெற்கு கோவில். இது ராகுவின் அம்சமாக விளங்குகிறது. தற்போது இக்கோவில் இரட்டை திருப்பதி என்றே வழங்கி வருகிறது. நவதிருப்பதிகளுள் இரண்டு கோவில்கள் ஒரே இடத்தில் இருப்பதால் இரட்டை திருப்பதி என அழைக்கப்படுகிறது.

    மூலவர் பெயர்: சீனிவாச பெருமாள்.

    உற்சவர் பெயர் : ஸ்ரீ தேவி, பூ தேவி சகிதமாக தேவர்பிரான் பெருமாள்.

    தாயார்: அலர்மேல் மங்கை தாயார், பத்மாவதி தாயார்.

    விமானம்: குமுத விமானம்.

    தீர்த்தம்: வருண தீர்த்தம், தாமிரபரணி.

    கோவில் விருட்சம்: விளா மரம்.

    கோவில் வரலாறு:

    முற்காலத்தில் சுப்பரர் என்ற ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் பெருமாள் மீது தீவிர பக்தி கொண்டவர். அவருக்கு ஒரு முறை பெரும் யாகம் செய்ய ஆசை ஏற்பட்டது. அந்த யாகத்தை நடத்துவதற்கு தகுந்த இடம் தேடி அலைகிறார் முனிவர். அந்த வேளையில் தான் தாமிரபரணியின் கரையில் தென்றல் தவழ்ந்து, அழகிய மலர்கள் பூத்துக் குலுங்கிய சோலையாக திகழ்ந்த ஒரு இடத்தை கண்டு அதனை யாகம் செய்ய ஏற்ற இடமாக தேர்வு செய்கிறார் சுப்பரர். அவர் மனது மகிழ்ச்சியடையும் படியே அனைத்து சிறப்புக்களையும் கொண்டு திகழ்ந்த அந்த இடத்தில் முதலில் தான் தங்குவதற்கு ஒரு குடில் அமைத்தார்.

    பின்னர் வேள்விச்சாலை அமைப்பதற்காக அந்த இடத்தை கொத்தி சீர் செய்தார். அப்போது ஓர் இடத்தில் மண்ணை கொத்திய போது, அங்கு ஓர் தராசும், வில்லும் கிடைக்கிறது. அதனை தன் கைகளால் முனிவர் வெளியே எடுக்க, அப்போது அந்த தராசு ஓர் அழகிய ஆண் மகனாகவும், வில் ஓர் அழகிய பெண் மகளாகவும் மாறிட, முனிவரோ அதிசயித்து நின்றார். அப்போது அந்த ஆணும், பெண்ணும் தம்பதியாக முனிவரின் கால்களில் வீழ்ந்து வணங்கி நிற்கின்றனர். அவர்களை ஆசிர்வதித்த முனிவர், அவர்களிடம் தாங்கள் யார்? எப்படி இங்கு வந்தீர்கள் எனக் கேள்வி எழுப்ப, அதற்கு அந்த ஆண் மகனாக இருந்தவர் தான் ஒரு தேவகுமாரன் என்றும் தன் பெயர் வித்யாதரன், இந்த பெண் என் மனைவி, நாங்கள் இருவரும் தேவலோகத்தில் மகிழ்ச்சியாக இருந்த போது அங்கு வந்த குபேரனை மதிக்காமல் அவமரியாதை செய்த காரணத்தால், அவரால் சபிக்கப்பட்டு இந்த பூ உலகில் தராசாகவும், வில்லாகவும் மாறி வீழ்ந்தோம் என்றும், பின் தங்கள் தவற்றை உணர்ந்து குபேரனிடம் மன்றாடியதன் பலனாக, அவர் மனம் இறங்கி நீங்கள் இருக்கும் பூ உலகில் ஒரு தவ முனிவர் வருவார், அவர் கைகளால் நீங்கள் தீண்டப்படும் போது சாப விமோசனம் பெற்று சுய உருவை பெறுவீர்கள் என அருளினார் என்றும் அதன்படி தாங்கள் எங்களை தொட்டு தீண்டியதால் விமோசனம் பெற்றோம் எனக்கூறி முடித்தார்.

    இதனைக் கேட்ட முனிவர் அகம் மகிழ்ந்து அவர்களை வழியனுப்பி வைத்து விட்டு, அந்த இடத்தில் முறைப்படி வேள்விச் சாலை அமைத்து, பல்வேறு யாகங்களை மேற்கொண்டார். யாகத்தில் இருந்து தேவர்களுக்கு கிடைக்க வேண்டிய அவிர்பாகத்தையும் முறைப்படி அவர்களுக்கு பகிர்ந்து அளித்த அந்த முனிவரின் யாகத்தின் பலனாக இறுதியில் மகாவிஷ்ணு சீனிவாசனாக காட்சி அளித்து அந்த முனிவருக்கு அருளை வாரி வழங்கினார்.அந்த யாகத்தில் தேவர்களின் சார்பாக இருந்து அவிர்பாகங்களை ஏற்று பகிர்ந்து அளித்ததால் இத்தல பெருமாள் தேவர்பிரான் என்று சிறப்பித்து அழைக்கப்படுகிறார்.

    மூலவர் சீனிவாச பெருமாள்:

    கருவறையில் மூலவராக நின்ற கிருக்கோலத்தில் காட்சியளிக்கிறார் சீனிவாச பெருமாள். இவர் நான்கு கரங்களுடன், மேல் இரு கரங்களில் சங்கு-சக்கரம் ஏந்தியும், கீழ் இரு கரங்களில் வலது கரம் அபயம் காட்டியும், இடது கரத்தை தொடையில் வைத்தபடியும் அருள்பாலிக்கிறார்.இங்கு தாயார்களுக்கென தனி சன்னதி இல்லை. அலர்மேல் மங்கை தாயார் மற்றும் பத்மாவதி தாயார் தனி உற்சவத் திருமேனிகளாகவே இங்கு எழுந்தருளி உள்ளார்கள்.

    உற்சவர் தேவர்பிரான் சிறப்பு:

    இங்கு உற்சவர் நின்ற கோலத்தில், நான்கு திருக்கரங்கள் கொண்டு தேவர்பிரானாக ஸ்ரீ தேவி, பூ தேவி உடன் அருள்பாலிக்கிறார்.

    கோவில் அமைப்பு:

    தாமிரபரணி ஆற்றின் வடக்கு கரையை ஒட்டி இரட்டை திருப்பதியின் ஒரு கோவிலான தேவர்பிரான் கோவில் அமையப்பெற்றுள்ளது. இது இரட்டை திருப்பதி என வழங்கப்படும் இரண்டு கோவில்களுள் தெற்கு கோவில் என்று அழைக்கப்படுகிறது.

    இத்திருக்கோவிலில் கோபுரங்கள் எதுவும் கிடையாது. உள்ளே சென்றால் முன் மண்டபத்தில் பலிபீடமும், கொடிமரமும் அமையப் பெற்றுள்ளது. அதனை தாண்டி உள்ளே சென்றால் அர்த்த மண்டபத்தில் உற்ச வராகிய தேவர்பிரான் பெருமாள், ஸ்ரீ தேவி மற்றும் பூ தேவி உடன் சேவை சாதிக்கிறார். பின்னால் கருவறையில் நின்ற கோலத்தில் சீனிவாச பெருமாள் காட்சி தருகிறார். உள்பிரகாரத்தில் பன்னிரு ஆழ்வார்களுக்கு சன்னதி இருக்கிறது. இங்கு தாயார்களுக்கு தனி சன்னதி கிடையாது. வெளிப் பிரகாரம் முழுவதும் நந்தவனமாக பராமரிக்கப்படுகிறது.

    கோவில் சிறப்புக்கள்:

    இங்கு பத்மாவதி தாயார் தன் மார்பில் மகா விஷ்ணுவை தாங்கி கொண்டிருப்பதாக ஐதீகம். இந்த கோவிலில் வழங்கப்படும் மஞ்சள் காப்பு பிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இது தீராத பல நோய்களையும் தீர்த்து வைப்பதாக ஐதீகம். நம்மாழ்வார் இத்தலத்தில் பதினொரு திருவாய்மொழி பாசுரமங்கள் (3371 முதல் 3281 ம் பாடல் வரை) பாடி மங்களாசாசனம் செய்துள்ளார்.

    இரட்டைத் திருப்பதி என வழங்கிவரும் இங்கு ஒரே இடத்தில் அருகருகே இரண்டு தனிக் கோவில்கள் அமையப்பெற்றுள்ளது. அதில் இக்கோவில் தெற்கு கோவில் என்று அழைக்கப்படுகிறது.

    துலை எனப்படும் தராசும், வில்லும் இங்கு சாப விமோசனம் பெற்றதால் துலைவில்லிமங்கலம் என்ற பெயர் பெற்றதாக கூறுகிறார்கள். இரட்டைத் திருப்பதி என்று அழைக்கப்படும் இக் கோவிலின் புராணப் பெயர் திருத்தொலைவில்லிமங்கலம் ஆகும்.

    முக்கிய திருவிழாக்கள்:

    கார்த்திகை மாதம் இங்கு கொடியேற்றமாகி பதினொரு நாட்கள் பெருந்திருவிழா விமரிசையாக நடைபெறும். இதில் ஐந்தாம் நாள் இரட்டை கருட சேவை சிறப்பாக நடைபெறும்.

    வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தை ஒட்டி ஆழ்வார்திருநகரியில் நடைபெறும் நம்மாழ்வார் அவதார உற்சவத்தின் ஐந்தாம் நாள் இத்தல தேவர்பிரான் பெருமாள் அங்கு எழுந்தருளி கருடசேவை காட்சியளிக்கிறார். இதுதவிர ஆவணி பவித்ரோத்சவம், புரட்டாசி சனிக்கிழமைகள், மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி ஆகிய திருவிழாக்களும் இங்கு விமரிசையாக நடைபெறும்.

    அமைவிடம்:

    திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 28கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது திருவைகுண்டம். திருவைகுண்டத்தில் இருந்து தென் கிழக்கே சுமார் 12கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது திருத்தொலைவில்லிமங்கலம் எனும் இரட்டை திருப்பதி.நெல்லை புதியபேருந்துநிலையத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பேருந்தில் ஸ்ரீவைகுண்டம் சென்று, அங்கிருந்து தனியார் வாகனங்களில் இக்கோவிலை சென்றடையலாம்.

    Next Story
    ×