search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    பாவங்கள் போக்கும் திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் திருக்கோவில்
    X

    பாவங்கள் போக்கும் திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் திருக்கோவில்

    • காசியை விட பன்மடங்கு சிறப்பு கொண்டது திருவாஞ்சியம்.
    • இந்த கோவிலில் எமனை வழிபடுபவர்களுக்கு எமபயம் இல்லை.

    பாவங்கள் போக்கும் சிவாலயங்களில் காசிக்கு நிகரான புகழ் பெற்ற சிவாலயமாக திருவாரூர் மாவட்டம் திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவில் உள்ளது.

    திருவாரூர்-மயிலாடுதுறை வழித்தடத்தில் திருவாரூரில் இருந்து 16 கி.மீ. தொலைவில் திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவில் உள்ளது. இங்குள்ள இறைவன் வாஞ்சிஈஸ்வரர் என்றும், வாஞ்சிநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி மங்களாம்பிகை என்றும் மறுவார் குழலி என்றும் அழைக்கப்படுகிறார்.

    எமதர்மன் தனி சன்னதி கொண்டுள்ள இந்த கோவிலில் குப்த கங்கை என்ற தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தத்தில் கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடி எமதர்மராஜாவை வணங்கினால் அனைத்து பாவங்களும் நீங்கி எம பயம் தீரும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. மேலும் காசிக்கு சென்று வந்த புண்ணியத்தை பெறலாம். இந்த கோவிலில் உள்ள மகிஷாசுர மர்த்தினியை 108 தாமரை மலர்களால் அர்ச்சித்தால் பயம் நீங்குவதோடு நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும்.

    பாவங்கள் நீங்கும்

    தென்னாட்டில் காசிக்கு நிகராக போற்றப்படும் 6 திருத்தலங்கள் உள்ளன. இவை திருவையாறு, திருவிடைமருதூர், மயிலாடுதுறை, திருவெண்காடு, சாயாவனம்(பூம்புகார்), திருவாஞ்சியம். இந்த ஆறிலும் முதன்மையானது திருவாஞ்சியம். காசியில் இறப்பவர்களுக்கு முக்தி கிடைத்தாலும் எம உபாதை பைரவ உபாதை இருக்கும். ஆனால் திருவாஞ்சியத்தில் இறப்பவர்களுக்கு முக்தி கிடைப்பதோடு எம உபாதையும், பைரவ உபாதையும் இருக்காது. எனவே காசியை விட பன்மடங்கு சிறப்பு கொண்டது திருவாஞ்சியம்.

    கலியுகத்தில் பாவம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதனால் பாவம் செய்தவர்களில் பலர் காசிக்கு சென்று கங்கையில் நீராடி தங்களின் பாவங்களை போக்கிக் கொண்டதால் கங்கையில் பாவம் சேர்ந்தது.

    இதனால் அச்சம் அடைந்த கங்கா தேவி, சிவபெருமானிடம் சென்று அனைவரும் தங்களின் பாவங்களை என்னிடம் ஒப்படைத்து விடுகிறார்கள். என்னிடம் பாவம் சேர்ந்து விட்டது. இந்த பாவங்களை என்னால் சுமக்க முடியவில்லை. இதற்கு மாற்று வழி கூறுங்கள் என வேண்டினார்.

    எமதர்மனின் கோபம்

    உடனே சிவபெருமான், தென்னகத்தில் திருவாஞ்சியம் என்ற திருத்தலத்தில் நான் இருக்கிறேன். நீ உனது ஆயிரம் கலையில் ஒரு கலையை மட்டும் காசியில் வைத்துவிட்டு மீதி உள்ள 999 கலைகளுடன் அங்கு குப்த கங்கையாக வீற்றிருப்பாய் என்று ஆணையிட்டார்.

    உடனே கங்காதேவி. சிவனின் ஆணைப்படி திருவாஞ்சியத்தில் புண்ணிய தீர்த்தமாக அமர்ந்தாள். சூரியனுக்கும், உஷா தேவிக்கும் மகனாக அவதரித்தவர் எமன். உலகின் உயிர்கள் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அவரவர்களுக்கு நரகத்தையும், சொர்க்கத்தையும், அளித்து வருபவர் இவர்.

    கலியுகம் பிறக்கும்போது எமனுக்கு பயம் வந்து விட்டது. தனக்கு(எமதர்மனுக்கு) உயிரை எடுக்கும் கொலை பணியை சிவபெருமான் ஒதுக்கி விட்டார்களே என்று சிவபெருமான் மீது கோபம் கொண்டார். அவரது கோபம் அறிந்த சிவபெருமான் உயிரை எடுக்கும் பணியை எமனிடம் இருந்து பறித்து விட்டார். இதனால் பயந்து போன எமன், அனைத்து கோவில்களுக்கும் சென்று சிவனை வழிபட தொடங்கினார்.

    குப்த கங்கை

    திருவாரூர் தியாகராஜர் கோவிலில் எமதர்மன், சிவபெருமானை நோக்கி மனம் உருகி வேண்டியபோது திருவாஞ்சியம் சென்று வழிபடு என்று அசரீரி கூறியது. அதன்படி அங்கு சென்று பல ஆண்டுகள் தவம் புரிந்தார் எமதர்மன். மேலும் அங்கு தனது பெயரில் ஒரு தீர்த்தம் உருவாக்கி அதில் நீராடினார். மாசி மாதம் பரணி நட்சத்திரத்தன்று சிவபெருமான் எமனுக்கு காட்சி கொடுத்து எமன் கேட்ட வரங்களை வாரி வழங்கினார்.

    திருவாஞ்சியம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் குப்த கங்கையில் நீராடி விட்டு உன்னை(எமனை) வணங்கிய பிறகு தான் விநாயகரை வழிபட்டு, என்னை வணங்குவார்கள் என்றும் வரமளித்தார்.

    எம பயம் நீங்கும்

    இதனால் திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலில் அமர்ந்த கோலத்தில் தெற்கு நோக்கிய தனி சன்னதியில் அனுக்கிரக மூர்த்தியாக சேத்திர பாலகராக இருந்து எமதர்மராஜா பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தமிழகத்தில் எமதர்மராஜனுக்கு உள்ள மிக பழமையான சன்னதி இந்த கோவிலில் உள்ள சன்னதி ஆகும்.

    திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலில் எமனை வழிபடுபவர்களுக்கு எமபயம் இல்லை. ஆயுள் விருத்தியாகும் என்பது ஐதீகம். இதனால்தான் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் எமதர்மனை வணங்கி பின்னர் கோவிலுக்குள் செல்வது இன்றும் வழக்கமாக உள்ளது.

    சூரியனின் பாவம் தீர்த்த தலம்

    தட்சன், தனது மகள் தாட்சாயினியை சிவனுக்கு திருமணம் செய்து வைக்க மறுத்தார். ஆனால் அதை ஒரு பொருட்டாக எண்ணாத சிவபெருமான் எதிர்ப்பையும் மீறி தாட்சாயினியை திருமணம் செய்தார். இதனால் கோபம் அடைந்த தட்சன், சிவபெருமானை அழைக்காமல் யாகத்துக்கு ஏற்பாடு செய்தார். சிவபெருமானைத்தவிர மற்ற அனைத்து தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் யாகத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். இதனால் சிவபெருமானை தவிர அனைவரும் யாகத்தில் கலந்து கொண்டனர். இது பற்றி அறிந்த தாட்சாயினி தேவி கடும் கோபம் அடைந்தாள்.

    நான் எனது தந்தை தட்சன் நடத்தும் யாகத்துக்கு சென்று மருமகனை அழைக்காமல் யாகம் நடத்துவது தவறு என்று சுட்டிக் காட்டுகிறேன் என்று சிவபெருமானிடம் அனுமதி கேட்டார். ஆனால் சிவபெருமான் அதற்கு அனுமதி மறுத்ததோடு அங்கு போகக்கூடாது என்று கூறி தாட்சாயினியை தடுத்து நிறுத்தினார்.

    சிவபெருமான் கட்டளையை மீறி தாட்சாயினி யாகத்துக்கு சென்றாள். அங்கு தட்சன் அவளை அவமதித்ததால் கோபம் அடைந்த தாட்சாயினி யாகத்திற்கு வந்த தேவர்கள், முனிவர்கள், தட்சன் ஆகியோர் விரைவில் அழிந்து போவார்கள் என்று சாபம் கொடுத்தாள்.

    இதனை அறிந்த சிவன் கடும் கோபம் கொண்டு பெரும் பலம் கொண்ட வீரபத்திரனை அனுப்பி யாகத்தை அழித்து தண்டிக்கச் சொன்னார். சிவனின் கட்டளையை ஏற்று வீரபத்திரன் தன் கணங்கள் சூழ யாகசாலை சென்று அங்கு இருந்த அனைவரையும் அடித்து நொறுக்கி அளித்தார். அப்போது சூரியனின் கன்னத்தில் வீரபத்திரன் ஓங்கி அறைந்ததால் சூரியனின் பற்கள் கீழே கொட்டின. கண்கள் ஒளி இழந்தன.

    அனைவரையும் தாக்கிய வீரபத்திரனின் கோபத்தை மகாவிஷ்ணு குறைத்தார். அப்போது அங்கு தோன்றிய சிவபெருமானிடம் பற்களை இழந்த சூரியன், எனது பாவம் தீர வழி கூறுங்கள் என்று வேண்டினார். உனது(சூாியன்) பாவங்கள் தீர வாஞ்சியத்தில் நீராடி கார்த்திகை மாதம் முழுவதும் வழிபட்டால் சிவ துரோகத்தால் வந்த பாவம் போகும் என்று சிவன் வழி சொன்னார்.

    அவ்வாறே சூரியன் திருவாஞ்சியம் வந்து முனி தீர்த்தம் என்ற குப்த கங்கையில் நீராடி கார்த்திகை மாதம் முழுவதும் தவமிருந்து இறைவனை வணங்கினார். இதனால் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான், சூரியன் முன் தோன்றி பாவம் நீக்கி பழைய ஒளியை தந்தார். அத்துடன் கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடியவர்களின் பஞ்சமா பாவங்களும் மன்னிக்கப்படும் என்று அருள்புரிந்தார்.

    வழிபடும் முறை

    வாகை சூட அருள் தரும் வாஞ்சிநாதர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் முதலில் புனித தீர்த்த குளமான குப்த கங்கையில் நீராடி கங்கை கரை விநாயகரை தரிசிக்க வேண்டும். பின்னர் சேத்திர பாலகர் எமதர்மராஜாவை வழிபட வேண்டும். அதன் பிறகு விநாயகரை வழிபட்டு கோவிலுக்குள் செல்ல வேண்டும்.

    எமதர்மராஜா சன்னதியில் தங்களது வயதிற்கு ஏற்ப நெய் விளக்கேற்றி வழிபட்டால் ஆயுள் விருத்தி உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    ராகுவும், கேதுவும்

    திருவாஞ்சியம் கோவிலில் ராகுவும், கேதுவும் ஒரே மூர்த்தியாக வீற்றிருந்து அருள் பாலிக்கிறார்கள். மகாவிஷ்ணுவின் மோகினி அவதாரத்தால் வெட்டுப்பட்ட ராகு-கேது ஆகிய இரண்டு கிரகங்களும் தனித்தனி தலங்களில் இருந்தாலும் ஒரே மூர்த்தியாக இருப்பது இங்கு மட்டும்தான். இதனால் இரண்டு கிரகங்களின் பரிகாரங்களையும் இங்கு செய்யலாம். இந்த அமைப்பு சண்டராகு என்று கூறப்படுகிறது. மேலும் துர்க்கை திருவாஞ்சியத்தில் அஷ்ட புஜங்களோடு மகிஷாசுர மர்த்தினியாக காட்சியளிக்கிறார். துர்க்கை அம்மனுக்கு 108 தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டால் நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும்.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள திருவாஞ்சியத்தில் வாஞ்சிநாதர் கோவில் உள்ளது. சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் திருவாரூருக்கு வந்து அங்கிருந்து நன்னிலத்துக்கு சென்று நன்னிலத்தில் இருந்து மாப்பிள்ளைகுப்பம் என்ற பகுதிக்கு சென்றால் அங்கிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலை அடையலாம்.

    வெளிமாவட்ட பக்தர்கள் தங்கள் பகுதியில் இருந்து நேரடியாக கும்பகோணத்துக்கு வந்து கும்பகோணத்தில் இருந்து நன்னிலம் செல்லும் பஸ்சில் ஏறி அச்சுதமங்கலத்தில் இறங்கி 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவிலை அடையலாம். அல்லது திருவாரூரில் இருந்து கும்பகோணம் செல்லும் பஸ்சில் பயணித்து மணக்கால் பகுதியில் இறங்கி அங்கிருந்து 5 கி.மீட்டர் தொலைவில் உள்ள கோவிலை அடையலாம்.

    Next Story
    ×