search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    திருத்தொலைவில்லிமங்கலம் ஸ்ரீ அரவிந்தலோசன பெருமாள் திருக்கோவில்
    X

    திருத்தொலைவில்லிமங்கலம் ஸ்ரீ அரவிந்தலோசன பெருமாள் திருக்கோவில்

    • இந்த கோவில் கேதுவின் அம்சமாக விளங்குகிறது.
    • நவதிருப்பதிகளுள் இரண்டு கோவில்கள் ஒரே இடத்தில் இருப்பதால் இரட்டை திருப்பதி என அழைக்கப்படுகிறது.

    நவக்கிரக நாயகர்களின் பெயர் வரிசையில் ஒன்பதாவதாகவும், நவதிருப்பதி வரிசைகளுள் நான்காவதாகவும் விளங்குவது "திருத்தொலைவில்லிமங்கலம்" வடக்கு கோவில். இது கேதுவின் அம்சமாக விளங்குகிறது.

    தற்போது இக்கோவில் இரட்டை திருப்பதி என்றே வழங்கி வருகிறது. நவதிருப்பதிகளுள் இரண்டு கோவில்கள் ஒரே இடத்தில் இருப்பதால் இரட்டை திருப்பதி என அழைக்கப்படுகிறது.

    முற்காலத்தில் சுப்பரர் என்னும் முனிவர் இப்பகுதியில் வேள்விச் சாலை அமைத்து அதில் சிறப்பு யாகங்கள் செய்து தேவர்பிரானாக மகா விஷ்ணுவின் காட்சி பெற்ற முந்தைய வரலாறு நாம் அறிந்ததே. அந்த தேவர்பிரானை அம் முனிவர் தினமும் யாரும் முகர்ந்து பார்க்காத அழகிய பெரிய செம்மை நிறம் கொண்ட தாமரைப் பூக்களால் அர்ச்சித்து வருகிறார்.

    இதற்காக இக்கோவிலின் வடக்கு புறம் உள்ள ஓரு பொய்கையில் தினமும் சென்று அந்த செந்தாமரை மலர்களை பறித்து வருகிறார். இந்த வழிபாட்டினால் பேரானந்தம் அடைந்த மகா விஷ்ணு ஒரு நாள் அந்த செந்தாமரை மலர்களை பறிக்க சென்ற முனிவரை பின் தொடர்ந்து செல்கிறார். அவர் பொய்கையில் செந்தாமரை மலர்களை பறித்து திரும்பும் போது தனக்கு பின் ஒருவர் நிற்பதை கண்டு அதிசயித்த முனிவருக்கு பெருமாள் தன் சுய உருவில் காட்சியளித்தார். அதனைக் கண்டு மகிழ்ந்த முனிவர் தனக்கு காட்சியளித்த கோலத்திலேயே அங்கு நித்ய வாசம் புரிய வேண்டிக் கொண்டார். அதற்கு இசைந்த பெருமாளும் நான் செந்தாமரை மலர்களை விரும்பி இங்கு வந்ததால் அரவிந்தலோசனன் என்னும் திருநாமத்தில் அங்கேயே நிரந்தரமாக காட்சியளிப்பதாக கூறி முனிவருக்கு அருள்புரிந்தார்.

    அசுவினி குமாரர்களுக்கு அருள் செய்த வரலாறு:

    முற்காலத்தில் அசுவினி குமாரர்கள் என்னும் இரண்டு தேவ சகோதரர்கள் வைத்திய சாத்திரங்களுக்கு அதிபதியாக விளங்கி வந்தார்கள். அவர்கள் பூ உலகில் நடைபெறும் யாகங்களில் இருந்து அவர்களின் பங்கிற்குரிய அவிர்ப்பாகம் பெற்று வந்தார்கள். காலப்போக்கில் அவர்களுக்கு வர வேண்டிய அவிர்ப்பாகம் தடைபட்டது. அதற்குரிய காரணத்தை பிரம்மனிடம் கேட்க, பிரம்மதேவனோ பூ உலகில் வைத்திய சாத்திரம் கற்ற வைத்தியர்கள் செய்த பாவத்தினால் உங்களுக்கு வர வேண்டிய அவிர் பாகம் தடைபட்டுள்ளது, அதனை சரி செய்ய நீங்கள் பூ உலகம் சென்று தாமிரபரணி நதிக்கரையில் உறையும் அரவிந்த லோசனனை நினைத்து தவமியற்றினால் பயன் பெறலாம் எனக் கூறினார்.

    அதன்படி அந்த அசுவினி குமாரர்கள் இருவரும் பூ உலகம் வந்து இத்தல அரவிந்தலோசனரை வழிபட்டு வந்ததன் பலனாக, பெருமாள் அவர்களுக்கு காட்சியளித்து வேண்டும் வரம் தருவதாய் வாக்களிக்க, அசுவினி குமாரர்களோ யாகங்களில் இருந்து தங்களுக்கு கிடைக்க வேண்டிய அவிர்ப்பாகம் முறைப்படி கிடைக்க வேண்டும் என வேண்டிட, பெருமாளும் அவ்வாறே அருள் புரிந்தார். அந்த அசுவினி குமாரர்கள் இங்கு நீராடிய தீர்த்தமே அசுவினி தீர்த்தம் என்று சிறப்பிக்கப்படுகிறது.

    விபிதனின் குஷ்ட நோய் தீர்த்த வரலாறு:

    முற்காலத்தில் அங்கமங்கலம் என்னும் ஊரில் சத்தியசீலன் என்னும் குரு ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் மிகப் பெரிய விஷ்ணு பக்தர் ஆவார். அவருக்கு வன்னிசாரன், விபிதகன், சொர்ணகேது என மூன்று மகன்கள் இருந்தனர். இதில் விபிதகன் என்பவன் முற்பிறவி வினைப் பயனால் குஷ்ட நோயால் பாதிக்கப்பட, அது கண்டு வருந்திய சத்தியசீலரிடம், நாரதர் மகிரிஷி வந்து உன் மகன் முற்பிறவியில் தன் குருவுக்கு நிந்தனை செய்த காரணத்தினால் தான் இப்பிறவியில் குஷ்ட நோய் பீடித்துள்ளது என்றும் அதனை போக்க தாமிரபரணி கரையில் உள்ள அசுவினி தீர்த்தத்தில் நீராடி, அரவிந்தலோசனருக்கு செந்தாமரை மலர்களால் அர்சித்து வழிபட்டு வர நோய் நீங்கும் என கூறுகிறார்.

    அதன்படி விபிதகனும் இங்கு வந்து அசுவினி தீர்த்தத்தில் நீராடி, செந்தாமரை மலர்களால் பெருமாளை அர்சித்து வழிபட அவனை பீடித்திருந்த குஷ்ட நோய் நீங்கியதாகவும் கூறப்படுகிறது.

    மூலவர் ஸ்ரீ அரவிந்த லோசன பெருமாள்:

    கருவறையில் மூலவராக அமர்ந்த திருக்கோலத்தில், தன் இரு தேவியர்களோடு காட்சியளிக்கிறார் ஸ்ரீ அரவிந்த லோசன பெருமாள். இவர் நான்கு கரங்களுடன், மேல் இரு கரங்களில் சங்கு-சக்கரம் ஏந்தியும், கீழ் இரு கரங்களில் அபயம் வரதம் காட்டியும், அருள்பாலிக்கிறார். இங்குள்ள உபய நாச்சியாரான தாயார் கருத்தடங்கண்ணி என்ற திருநாமம் கொண்டு அருள்பாலிக்கிறாள். அதாவது கரிய நிறமுடைய கண்களை கொண்டவள் என்பது அந்த திருநாமத்தின் பொருள் ஆகும்.

    உற்சவர் செந்தாமரைக்கண்ணன் சிறப்பு:

    இங்கு உற்சவர் நின்ற கோலத்தில், நான்கு திருக்கரங்கள் கொண்டு செந்தாமரை கண்ணனாக ஸ்ரீ தேவி, பூதேவி உடன் அருள்பாலிக்கிறார். இவர் செம்மை நிறமுடைய தாமரை மலர்களை ஏற்று அருள்புரிவதால் இப்பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

    இங்குள்ள அரவிந்த லோசன பெருமாளை 1008 செந்தாமரை மலர்களால் சகஸ்ர நாம அர்ச்சனை செய்து நீராஞ்சனம் சமர்பித்து வழிபட்டால் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. இங்கு எழுந்தருளி உள்ள துலைவில்லி தாயார் இத்தலத்தின் காவல் தெய்வமாக பிரசித்தி பெற்று விளங்குகிறாள்.

    நம்மாழ்வார் இத்தலத்தில் பதினொரு திருவாய்மொழி பாசுரமங்கள் (3371 முதல் 3281 ம் பாடல் வரை) பாடி மங்களாசாசனம் செய்துள்ளார்.

    Next Story
    ×