என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கோவில்கள்
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில்- நாகை
- தென்கரை தலங்களில் 125-வது தலமாக உள்ளது.
- வேதாரண்யத்தில் நீராடினால் முக்தி என்பது பழமொழி.
திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி, காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி, வேதாரண்யத்தில் நீராடினால் முக்தி என்பது பழமொழி.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பிரசித்தி பெற்ற வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்பு பெற்ற இந்த கோவில் சோழநாட்டு காவிரி, தென்கரை தலங்களில் 125-வது தலமாக உள்ளது.
ரிக், யஜூர், சாம, அதர்வணம் ஆகிய வேதங்களால் பூஜிக்கப்பட்ட இந்த கோவிலில், வேதம் செடியாகி, கொடியாகி, மரமாகி வழிபட்டதால் இந்த கோவில் உள்ள பகுதி வேதாரண்யம் என்ற பெயரை பெற்றது. 64 சக்தி பீடங்களில் சுந்தரி பீடமாக உள்ள இந்த கோவிலில் இறைவனாக வேதாரண்யேஸ்வரரும், வேதநாயகி அம்பாளாகவும் உள்ளனா்.
சிவபெருமானின் திருமணம் கைலாயத்தில் நடந்தபோது அனைத்து தேவர்கள், ரிஷிகள், முனிவர்களும் அங்கு கூடியதால் வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர்ந்தது. இதனால் நிலைகுலைந்த தேவர்கள், உலகை சமநிலைப்படுத்த வேண்டும் என சிவபெருமானிடம் வேண்டினர்.
சிவபெருமான், அகத்திய முனிவரை அழைத்து தாங்கள், தென்திசைக்கு சென்று உலகை சமநிலைப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். உடனே அகத்தியர் சிவபெருமானை பணிந்து வணங்கி ஈஸ்வரா, தங்கள் திருமணக்கோலத்தை தரிசிக்க எனக்கு பாக்கியம் கிடையாதா? என்று மன வேதனையுடன் கேட்டார்.
இதைக்கேட்டு மனமுருகிய சிவபெருமான், தென்திசையில் தாங்கள் எந்த இடத்தில் இருந்து உலகை சமநிலைப்படுத்துகிறீர்களோ அங்கு நான் தங்களுக்கு திருமணக் கோலத்தில் காட்சி தருவேன் என்று வாக்குறுதி அளித்தார். இதை ஏற்றுக்கொண்ட அகத்திய முனிவர், தென்திசை நோக்கி வந்தபோது வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி வன்னிமரத்தடியில் தவம் மேற்கொண்டார்.
அப்போது உலகம் சமநிலை அடைந்தது. இதனால் மனம் மகிழ்ந்த அகத்தியர், இறைவனின் திருமண தரிசனம் கிடைக்க இந்த ஊருக்கு அருகில் உள்ள வேதாரண்யத்தில் உள்ள இறைவனை வேண்டினார். அகத்தியர் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் வேதாரண்யத்தில் பார்வதி தேவியுடன் திருமணக்கோலத்தில் சிவபெருமான் அகத்தியருக்கு காட்சி அளித்தார். பின்னர் அகத்தியருக்கு ஈஸ்வரர் பட்டம் கொடுத்து இனி தாங்கள் அகத்தீஸ்வரர் என அழைக்கப்படுவீர்கள் என அருள்புரிந்தார். இந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் சப்தமி திதியில் அகத்தியருக்கு சிவபெருமான் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த கோவிலில் சிவபெருமான், பார்வதி தேவிக்கு ஆண்டுக்கு ஒரு முறை அபிஷேகம் நடைபெறும். அப்போது கையால் அரைத்த சந்தனம் பூசப்படும்.
தேவாரப்பாடல் ஆசிரியர்களான திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் வேதாரண்யத்திற்கு வந்தனர். திருக்கோவிலை வலம் வந்தபோது அங்கு வேதங்கள் வழிபட்டு அடைத்து சென்ற கோவில் கதவை பார்த்தனர். அந்த கதவை திறக்க முடியாததால் கோவில் பூசாரிகளும், பக்தர்களும் 'திட்டி வாயில்' என்னும் பக்கவாயில் அமைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்று வந்தனர். இதை அறிந்த திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் நேர் வழியாக இறைவனை வணங்க விரும்பி வேண்டினர். இதன் விளைவாக கதவு திறந்து மூடியது. மாசிமகப் பெருவிழாவின் போது இந்த ஐதீக விழா நடக்கிறது.
மற்ற கோவில்களில் உள்ளது போல் இல்லாமல் இங்கு அனைத்து கோள்களும் நேர்பக்க வரிசையில் இறைவனின் திருமணக்கோலத்தை தரிசிப்பது போல் அமைந்துள்ளன. அதனால் இந்த கோவிலுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி வாழ்வில் வளமுடன் வாழ்வார்கள் என்பது ஐதீகம். அனைத்து கோவில்களிலும் துர்க்கை அம்மன் வடக்கு நோக்கி இருப்பது வழக்கம். ஆனால் இங்கு தெற்கு நோக்கி நின்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பது சிறப்பு வாய்ந்தது.
ஆடிப்பூரம்-மாசி மக விழா
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் தை அமாவாசை, மகாளய அமாவாசை, புண்ணிய காலங்கள் மற்றும் கிரகண காலங்களில் கல்யாணசுந்தர சுவாமி எழுந்தருளி வேதநதி என்ற கடலில் தீர்த்தம் கொடுப்பது சிறப்பு ஆகும். இந்த புண்ணிய காலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து ஆதிசேது என்ற கோடியக்கரையில் உள்ள சித்தர் கட்டத்தில் நீராடி, பின்னர் வேதாரண்யம் சன்னதி கடல் என்ற வேதநதியில் நீராடி இறைவனை வழிபடுவது வழக்கம். வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரமும், மாசிமக விழாவும் பெருவிழாவாக கொண்டாடப்படும்.
ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் நீக்கிய தலம்
ராமபிரான், இலங்கையில் ராவணனை வதம் செய்த பிறகு அவருக்கு பிரம்ம ஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதனால் ராமர், வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு வந்தபோது மேற்கு முகமாக அமைந்துள்ள விநாயகரை வணங்கினார். அப்போது விநாயகர் தனது வலது காலை தூக்கி ராமருக்கு பிடித்திருந்த பிரம்மஹஸ்தி தோஷத்தை உதைத்து நீக்கியதாக தலபுராணம் கூறுகிறது. இதனால் இந்த விநாயகருக்கு ராமவீரஹத்தி விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது. வலது காலை தூக்கியபடி நர்த்தன விநாயகர் போல் இந்த விநாயகர் காட்சி அளிப்பது மிகவும் சிறப்புடையது.
வீணை இல்லாத சரஸ்வதி
ராமபிரான், சீதையை தேடி இங்கு வந்தபோது கோடியக்கரையில் இருந்து இலங்கையை பார்த்தார். அப்போது ராவணனின் அரண்மனையின் பின்புறம் தெரிந்தது. ஒரு வீரன் கொல்லைப்புறமாக போருக்கு செல்லக்கூடாது என நினைத்த அவர், ராமேஸ்வரம் சென்று அங்கிருந்து இலங்கைக்கு சென்றதாக வரலாறு கூறுகிறது. ராமர் இங்கு முதன் முதலில் வந்ததால் ஆதிசேது என இப்பகுதி அழைக்கப்படுகிறது.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு பல்வேறு சிறப்புகள் இருந்தாலும் இத்தலத்துக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இத்தலத்தில் உள்ள சரஸ்வதி, வீணை இல்லாமல் பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாகும். இந்த கோவிலில் உள்ள வேதநாயகி அம்மனுக்கும், சரஸ்வதிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இதில் அம்மனின் குரல் இனிமையானதா, சரஸ்வதி வீணையின் நாதம் இனிமையானதா என்ற போட்டி நிலவியது. இதில் வீணையின் நாதத்தை விட அம்மனின் குரல் இனிமையாக இருந்தது. இதனால் சரஸ்வதி தவக்கோலத்தில் வீணை இல்லாமல் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
கோவிலுக்கு செல்வது எப்படி?
சென்னையில் இருந்து வேதாரண்யத்துக்கு வர விரும்பும் பக்தர்கள் கடலூர், சிதம்பரம், வழியாக நாகப்பட்டினத்துக்கு வந்து அங்கிருந்து வேளாங்கண்ணி வழியாக வேதாரண்யத்துக்கு வந்து வேதாரண்யேஸ்வரரை தரிசிக்கலாம். மதுரை, ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் பட்டுக்கோட்டைக்கு வந்து அங்கிருந்து வேதாரண்யத்தை அடையலாம். திருச்சி, தஞ்சை பகுதி பக்தர்கள் மன்னார்குடிக்கு வந்து அங்கிருந்து திருத்துறைப்பூண்டி வழியாக வேதாரண்யத்தை அடைந்து வேதாரண்யேஸ்வரரை தரிசிக்கலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்