search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    அருள்மிகு வேதநாயகி உடனுறை ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில்- வேதாரண்யம்
    X

    அருள்மிகு வேதநாயகி உடனுறை ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில்- வேதாரண்யம்

    • குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டுகிறார்கள்.
    • பிரம்மஹத்தி போன்ற பாவங்களும் நீங்கும்.

    மூலவர் – எதிருமறைக்காடர் (வேதாரண்யேஸ்வரர்)

    அம்மன் – வேதநாயகி, யாழைப் பழித்த மொழியாள், வீணாவாத விதூஷணி

    தல விருட்சம் – வன்னிமரம், புன்னைமரம்

    தீர்த்தம் – வேததீர்த்தம், மணிகர்ணிகை

    பழமை – 1000 வருடங்களுக்கு முன்

    புராணப் பெயர் – திருமறைக்காடு

    திருமறைக்காடு என்று தமிழிலும், வேத ஆரண்யம் என்று வடமொழியிலும் வழங்கப்பெறும் மிகப்பழமை வாய்ந்த சிவதலம். சப்தவிடத்தலங்களுள் இது இரண்டாவது தலம். சக்தி பீடங்கள் 64 ல் மிக்க விசேசம் வாய்ந்த சுந்தரி பீடத்தைப் பெற்று விளங்கும் கோயில். மூலவருக்கு மறைக்காட்டுறையும் மணாளர் என்று சிறப்பு பெயரும் உண்டு.

    இத்தலத்து அம்பாளின் பெயர் "வேதநாயகி" எனவும் தமிழில், "யாழைப் பழித்த மொழியாள்" என்றும் வடமொழியில், "வீணாவாத விதூஷணி" எனவும் வழங்கப்படுகிறது. அம்பிகையின் குரல் சரசுவதியின் வீணை நாதத்தை விட இனிமையாக இருந்ததால் அம்பிகைக்கு இங்கே இப்பெயர். இதன் நினைவாக சரஸ்வதி இத்தலத்தில் வீணையில்லாமல் தவக்கோலத்தில் சுவடியைக் கைக் கொண்டு இருப்பதைக் காணலாம்.

    இத்தலத்தின் பரிவார தேவதையான துர்க்கை தென்திசை நோக்கியுள்ளாள். திரிபங்கி வடிவில் நின்ற கோலத்தில் முறுவல் காட்டி எழுந்தருளி உள்ள இக்காவல் தெய்வம் இத்தலத்தில் பிரார்த்தனை தெய்வம்.

    இத்தலம் சப்தவிடத்தலங்களில் ஒன்று. முசுகுந்த சக்கரவர்த்திக்கு இந்திரன் அளித்த தியாகமூர்த்தங்களுள் ஒன்று. இவர் செய்யும் நடனம் அம்சநடனம் எனப்படும்.

    63 நாயன்மார்களோடு சேர்ந்து தொகையறாக்கள் 10 பேர். ஆக மொத்தம் 73 பேருக்கும் இங்கு சிலைகள் உள்ளன. அகத்தியருக்கு திருமணக்கோலத்தில் இறைவன் காட்சி தந்த தலம். மனு, மாந்தாதா, தசரதன், இராமன், பஞ்சபாண்டவர், மகாபலி முதலியோர் வழிபட்ட தலம். பதினாறு சபைகளில் 12 வது தேவ பக்த சபை என்ற திருநாமம் உடைய தலம். புகழ்பெற்ற கோளறு பதிகத்தை ஞானசம்பந்தர் இங்கேதான் பாடியருளினார்.

    தேவாரத்தின் ஏழு திருமுறைகளிலும் பதிகம் பெற்ற சிறப்பான தலம் இது. இத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் மேலக்குமரர் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்றவர். திருவிளையாடற்புராணம் பாடிய பரஞ்சோதி முனிவர் இவ்வூரைச் சேர்ந்தவர். இக்கோயில் வளாகத்திற்கு வெளியில் உள்ள அத்தனை இடங்களிலும் உப்பு கரிக்கும் தண்ணீரே இருக்கும். இத்தலத்தில் மட்டுமே நல்லதண்ணீர் உள்ளது. இவ்வூருக்கு குடிதண்ணீர் இந்த கோயில் வளாகத்துக்குள் இருந்து எடுத்துதான் பயன்படுத்தப்படுகிறது.

    இத்தலத்தில் மேற்குக் கோபுர வாயிலில் உள்ள விநாயகர், இராமபிரானைத் துரத்திவந்த வீரகத்தியை தமது ஒரு காலைத் தூக்கி விரட்டியதாக வரலாறு. இங்கு சுவாமி அம்பாள் விநாயகர் மூவருக்கும் தனித்தனி கொடிமரம் உண்டு.

    இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தியாகேசர் சன்னதியில் உள்ள மரகத இலிங்கத்திற்கு காலை மாலை இருவேளையும் பூஜை உண்டு. இந்திரன் அளித்து முசுகுந்தன் பிரதிஷ்டை செய்த இலிங்கம் இது. வன்னிமரத்தில் ஒருபுறம் காய்கள் நீளமாகவும் முட்கள் உடையதாகவும் இன்னொரு பக்கம் உருண்டையாகவும் முட்கள் இல்லாமலும் இருக்கின்றன என்பது சிறப்பம்சம். நவகிரகங்கள் ஒரே முகத்தோடு தனிதனி விக்ரகமாக சுவாமி – அம்பாள் திருமணக்கோலத்தை காண ஒரே திசையில் உள்ளது.

    ராஜகோபுரம் 5 நிலைகளுடன் கிழக்கு நோக்கியது. முன் மண்டபத்தின் பக்கத்தில் தலமரம் வன்னி உள்ளது. அதன் அடியில் எண்ணற்ற நாகப்ப்ரதிஷ்டைகள். எதிரில் தீர்த்தமுள்ளது. உள்சுற்றில் அறுபத்துமூவர், இராமநாதலிங்கம் உள்ளது. வெளிப்பிரகாரத்தில் இராமரைத் தொடர்ந்து வந்த வீரகத்தி தோஷத்தை நீக்கிய வீரகத்தி வினாயகர், குமரன் சன்னிதி ஆகியன உள்ளன. சேர, சோழ, பாண்டிய இலிங்கங்கள் தனித்தனி சன்னிதியாக உள்ளன. புன்னை மரத்தடியில் நசிகேது, ஸ்வேதகேது ஆகியோரின் உருவங்களைக் காணலாம்.

    சுவாமிக்கருகில் அம்பாள் சன்னிதி கிழக்கு நோக்கி தனிக்கோயிலாக உள்ளது. உள்வலமாக வரலாம். முன்மண்டபத்தின் மேற்புரம் வண்ண ஓவியங்கள் உள்ளன. தலவினாயகர், காட்சி கொடுத்த நாயனார், ஆறுமுகர், ஜுரதேவர், சனிபகவான், வீணையிலாத சரஸ்வதி, அன்னபூரணி, துர்கை, சோழீஸ்வர இலிங்கம் ஆகியன உள்ளன. இங்குள்ள நடராஜ சபை தேவசபை எனப்படும். இத்தலத்தில் நவக்கிரகங்கள் வரிசையாக உள்ளன.

    ஏனெனில் இது ஒரு கோளிலித்தலமாகும். பள்ளியறையை அடுத்து பைரவர், சூர்ய சந்திரர் சன்னிதிகள் உள. உள்வலமுடித்துப் படிகளேறி முன்மண்டபத்தை அடைந்தால் தியாகராஜ சபை. விடங்கர் பெட்டிக்குள் பாதுகாப்பாக உள்ளார். உள்வாயிலைக்கடந்தால் உற்சவத்திருமேனிகள் இருபுறமும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. சுதையாலான துவாரபாலகர்களைக் கடந்து உட்சென்றால் மூலவர் தரிசனம்.

    மூலவர் வேதாரண்யேஸ்வரர் சிவலிங்கத்திருமேனி. சுவாமிக்குப் பின்னால் – மறைக்காட்டுறையும் மணாளர் – திருமணக்கோலத்தில் காட்சியளிக்கிறார். இக்கோயிலில் சோழர் காலத்திய கல்வெட்டுகள் 92 கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இறைவனை – வேதவனமுடையார் – என்று குறிப்பிடுகிறது.

    பிரார்த்தனை:

    இத்தலத்தில் வழிபடுவோர்க்கு பாவங்கள் விலகும். நாக தோசம் நீங்கும். இக்கோயிலுக்குள் உள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடினால் கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவேரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடியதற்கு சமம். இதில் நீராடி தங்கள் பாவங்களைக் கழுவிக் கொள்வதாக ஐதீகம். பிரம்மஹத்தி போன்ற பாவங்களும் நீங்கும். பல ஆண்டுகள் யோகம், தானம், தவம் செய்த பலன்களை அடையலாம். இத்தலத்திற்கு தெற்கே நேர் எதிரே கிழக்கே உள்ள கடல் ஆதி சேது என்னும் கடல் தீர்த்தம். இதில் ஒருமுறை நீராடுவது சேதுவில் நூறு தடவை நீராடுவதற்கு சமம்.

    இத்தீர்த்தங்களில் ஒவ்வோராண்டும் ஆடி அமாவாசை, தை அமாவாசை மாசி மாதத்தில் மகாளய அமாவாசை முதலிய நாட்களில் கோடியக்கரை ஆதிசேதுவிலும், வேதாரண்ய சன்னதிக் கடலிலும் அதன்பின்னர் மணிகர்ணிகையிலும் நீராடி மணமக்களாக எழுந்தருளியுள்ள இறைவனையும் இறைவியையும் வழிபட்டால் திருமணவரம், குழந்தைபாக்கியம், கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம், செல்வ செழிப்பு, பிணியற்ற வாழ்வு ஆகியன கிடைக்கும்.

    இத்தலத்து திருமறைக்காடரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

    நேர்த்திக்கடன்:

    குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டுகிறார்கள். திருமண வரம் வேண்டுவோர் சுவாமி அம்பாளுக்கு கல்யாண மாலை சாத்தி வழிபடுகின்றனர். மிகப்புகழ்பெற்ற பரிகார தோச நிவர்த்தி தலம் என்பதால் பல்வேறு தோசங்களுக்கும் நிவர்த்தி பரிகாரங்கள் செய்து வழிபடுகிறார்கள். அம்மனுக்கு புடவை சாத்துதலும், அபிசேகம் செய்தலும், சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது. சுவாமிக்கு அபிசேகம் செய்யலாம். மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம்.

    வழிகாட்டி:

    நாகப்பட்டினத்திலிருந்து 45 கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது. நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூரிலிருந்து நேரடி பஸ் உள்ளது.

    காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

    Next Story
    ×