search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    உமாமகேஸ்வரர் கோவில் - ஆந்திரா
    X

    உமாமகேஸ்வரர் கோவில் - ஆந்திரா

    • இந்தக் கோவில் வளாகத்தில், ‘புஷ்கரணி’ என்னும் சிறிய குளம் உள்ளது.
    • நந்தியின் வாய் வழியாக விழும் நீர், வருடம் முழுவதும் வந்து கொண்டே இருக்கிறது.

    ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ளது, யாகந்தி என்ற ஊர். இங்கு உமாமகேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் 15-ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் சங்கம வம்சத்தின் மன்னரான ஹரிஹரி புக்க ராயரால் கட்டப்பட்டது.

    முன் காலத்தில் இந்தப் பகுதிக்கு வந்த அகத்தியப் பெருமான், இங்கு ஒரு பெருமாள் ஆலயத்தை கட்ட விரும்பினார். இதற்காக பெருமாள் விக்கிரகம் செய்தபோது, அது முழுமை பெறுவதற்கு முன்பாகவே, அதில் ஏதாவது ஒரு குறை ஏற்பட்டு அந்தப் பணி தடைபட்டுக் கொண்டே வந்தது. எத்தனையோ முறை முயற்சி செய்து பார்த்தும், அகத்தியரால் பெருமாள் சிலையை முழுமையாக முடிக்க முடியவில்லை.

    இதையடுத்து அவர் சிவபெருமானை நினைத்து வேண்டினார். தன்னுடைய பணியை முடிக்க உதவும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் அவர் முன்பாக தோன்றிய சிவபெருமான், "இது கயிலைக்கு ஒப்பான தலம். ஆகையால் இது விஷ்ணுவுக்கு உகந்த தலம் இல்லை" என்று கூறினார். உடனே அகத்தியர், உமையம்மையுடன் இங்கே தங்கும்படி சிவபெருமானை பணித்தார். அதற்கு இறைவனின் அருள் கிடைத்தது.

    இதையடுத்து ஒரே கல்லில் சிவன், பார்வதி உருவத்தை, உமா மகேஸ்வரராக செய்தார், அகத்தியர். இங்குள்ள மூலவர், அர்த்தநாரீஸ்வரரின் தோற்றத்தில் அருள்பாலிப்பது குறிப்பிடத்தக்கது.

    முன்காலத்தில் இங்கே ஒரு சிவ பக்தர் வாழ்ந்து வந்தார். அவர் இறைவனைக் காண வேண்டி தவம் மேற்கொண்டார். அவரது தவத்திற்கு இரங்கிய சிவபெருமான், புலி வடிவத்தில் அந்த பக்தருக்கு காட்சி தந்தார். வந்தது இறைவன் என்பதை உணர்ந்து கொண்ட அந்த பக்தர், 'நேனு சிவனே கண்டி' (நான் சிவபெருமானை கண்டுகொண்டேன்) என்று கூறினார். இதனால் இத்தலம் 'நேனுகண்டி' என்றானது. அதுவே மருவி தற்போது 'யாகந்தி' என்று அழைக்கப்படுகிறது.

    இந்தக் கோவில் வளாகத்தில், 'புஷ்கரணி' என்னும் சிறிய குளம் உள்ளது. மலை உச்சியில் இருந்து வரும் நீர், நந்தியின் வாய் வழியாக இந்த புஷ்கரணியில் விழுவது போல அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீரானது, சுவையாகவும் எப்போதும் குளிர்ச்சியாகவும் இருக்கிறது. நந்தியின் வாய் வழியாக விழும் நீர், வருடம் முழுவதும் வந்து கொண்டே இருக்கிறது. இந்த புஷ்கரணியில் நீராடிதான், அகத்தியா் சிவபெருமானை வழிபட்டதாக தல வரலாறு சொல்கிறது.

    கர்னூல் மாவட்டம் பங்கனப்பள்ளியில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, இந்தத் திருத்தலம்.

    கோவிலைச் சுற்றியுள்ள குகைகள்அகத்தியர் குகை

    மகாவிஷ்ணுவின் சிலையில் ஏதாவது ஒரு குறை ஏற்பட்டு, சிலை வடிக்க முடியாமல் போனதையடுத்து சிவபெருமானை நோக்கி அகத்தியர் தவம் செய்த இடம் இது என்று சொல்கிறார்கள். இந்தக் குகையைக் காண, 120 செங்குத்தான படிகளை கடந்து செல்ல வேண்டும். இந்த குகைக்குள் அம்பாளின் சிலை ஒன்றும் வைக்கப்பட்டிருக்கிறது.

    வெங்கடேஸ்வரர் குகை

    இந்த குகையில் வெங்கடேஸ்வரரின் சிதைந்த சிலை ஒன்று உள்ளது. அகத்தியர் குகையுடன் ஒப்பிடுகையில், மிகப்பெரிய குகை இது. ஆனால் இதன் உள்ளே செல்லும் வழி மிகவும் குறுகலானது. எனவே குனிந்தபடிதான் செல்ல வேண்டும்.

    வீரபிரம்மேந்திரர் குகை

    இந்தக் குகை, குபேரபுரி வீரா பிரம்மேந்திர சுவாமி என்பவருக்குரியது. தனது ஞானக் கவிதைகளை, அந்த துறவி எழுதிய இடம் இது என்கிறார்கள். இந்த குகையின் முகப்பு பகுதியின் உயரம் குறைவானது. எனவே இதற்குள்ளும் குனிந்தபடிதான் சென்று வந்தாக வேண்டும்.

    Next Story
    ×