search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா 31-ந்தேதி தொடங்குகிறது
    X

    மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா 31-ந்தேதி தொடங்குகிறது

    • உச்சிப்பிள்ளையாருக்கு 150 கிலோ எடையில் கொழுக்கட்டை படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்
    • செப்டம்பர் 13-ந்தேதி மாணிக்க விநாயகர் சன்னதியில் ஏகாதின லட்சார்ச்சனை நடைபெறும்.

    தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பிள்ளையார்பட்டிக்கு அடுத்தப்படியாக திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் ஆண்டுதோறும் 14 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இங்கு மாணிக்க விநாயகருக்கும், உச்சிப்பிள்ளையாருக்கும் 150 கிலோ எடை கொண்ட மெகா கொழுக்கட்டை படையல் இட்டு நெய்வேத்தியம் செய்யப்படும்.

    இதற்காக கோவில் மடப்பள்ளி பணியாளர்கள் பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், ஜாதிக்காய், எள், நெய், தேங்காய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, பின்னர் இரு பங்காக பிரித்து துணியில் கட்டி பெரிய பாத்திரத்தில் வைத்து தொடர்ந்து 18 மணி நேரம் அவிப்பார்கள். இதைத்தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி அன்று காலை இந்த மெகா கொழுக்கட்டையை தொட்டில் போன்ற அமைப்பில் வைத்து பக்தர்கள் சுமந்து உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு எடுத்துச்சென்று நிவேதனம் செய்யப்படும்.

    இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந்தேதி (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருச்சி மலைக்கோட்டை பிள்ளையார் கோவிலில் வருகிற 31-ந்தேதி காலை மாணிக்க விநாயகர், உச்சிப்பிள்ளையாருக்கு 150 கிலோ எடையில் பிரமாண்ட கொழுக்கட்டை படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    விழாவையொட்டி 31-ந் தேதி முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 12-ந்தேதி வரை தினமும் பால கணபதி, நாகாபரண கணபதி, லட்சுமி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூஷிக கணபதி, ராஜ அலங்காரம், மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷபாரூடர், சித்திபுத்தி கணபதி, நர்த்தன கணபதி ஆகிய அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    அடுத்த மாதம் (செப்டம்பர்) 13-ந்தேதி மாணிக்க விநாயகர் சன்னதியில் ஏகாதின லட்சார்ச்சனை காலை 7 மணிக்கு நடைபெறும். அதைத்தொடர்ந்து அன்று காலை 11 மணிக்கு மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. மேலும் 14 நாட்களும் சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடைபெறும்.

    Next Story
    ×