search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பழனி கோவிலில் கும்பாபிஷேக பூஜை இன்று தொடங்கியது
    X

    பழனி கோவிலில் கும்பாபிஷேக பூஜை இன்று தொடங்கியது

    • புதுப்பிக்கப்பட்ட கலசங்கள் வேத மந்திரங்கள் முழங்க ஸ்தாபனம் செய்யப்பட்டது.
    • வருகிற 27ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வருகிற 27ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதற்காக கடந்த சில நாட்களாக கோவில் முழுவதும் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேகத்துக்கான பூஜைகள் இன்று காலை முதல் தொடங்கியது.

    காலை 9 மணி அளவில் மலைக்கோவிலில் உள்ள ராஜகோபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட கலசங்கள் வேத மந்திரங்கள் முழங்க ஸ்தாபனம் செய்யப்பட்டது. இதில் ஏராளாமான பக்தர்கள், கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இன்று மாலை 4 மணிக்கு சாயரட்சசை பூஜையும், அதனைத் தொடர்ந்து 5 மணிக்கு யாகசாலையில் தீப வழிபாடும் நடைபெறுகிறது. அதன்பின் மங்கள இசையுடன் பழனி கோவில் தவில் நாதஸ்வர குழுவின ர்களின் தீபத்திருமகள் வழிபாடு, திருவிள க்கேற்றுதல், கோவில் ஓதுவார் மூர்த்திகள் பண்ணிசை திருநேரிசை, 4-ம் திருமுறை, இறைவன் அனுமதி பெறுதல், முழு முதற்கடவுள், முதல்நிலை வழிபாடு, பேரொளி வழிபாடு நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து திருஒளி வழிபாடு, திருநீறு, அமுது வழங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதனைத் தொடர்ந்து கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் ஜனவரி 23ந் தேதி முதல் தொடங்குகிறது. தண்டாயுதபாணி சுவாமி கலசத்தில் ஆவாஹனம் செய்த பின் யாகசாலையில் எழுந்தருளுவார்.

    வருகிற 26ந் தேதி படிப்பாதை சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கும் நிலையில் அதுவரை பக்தர்கள் கட்டுப்பாடின்றி அனுமதிக்கப்படுவார்கள். 27ந் தேதி நடக்கும் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கோவில் இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் அளிக்கும் நபர்களில் குலுக்கல் முறையில் 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கான அனுமதி அவரவர் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி யாக அனுப்பப்படும். அதனை கோவில் நிர்வாகத்திடம் காட்டி கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்கான அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.

    நாளை மாலைவரை மட்டுமே விண்ணப்பங்கள் அனுப்ப முடியும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பழனி கோவிலுக்கு தற்போது பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது. பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலமும் பக்தர்கள் வருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு ரோப்கார், மின் இழுவை ரெயில் மூலம் வருகை தருகின்றனர். காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ரோப்கார் இயக்கப்படுகிறது. இந்த ரோப்கார் உறுதி தன்மையை அறிந்து கொள்ளும் வகையில் மாதத்தில் ஒரு நாளும், வருடத்தில் ஒரு மாதமும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுகிறது.

    இந்நிலையில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (19ந் தேதி) நிறுத்தப்படுகிறது. எனவே பக்தர்கள் மின் இழுவை ரெயில், படிப்பாதையை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு செல்லலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×