search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக மண்டல பூஜை 16-ந்தேதியுடன் நிறைவு
    X

    பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக மண்டல பூஜை 16-ந்தேதியுடன் நிறைவு

    • ஜனவரி 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • 16-ம்தேதி 1,008 சங்காபிஷேகம் நடைபெற உள்ளது.

    தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகம விதிப்படி கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும். அந்த வகையில் பழனி கோவிலில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டல பூஜை தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி 11.45 மணி வரை பூஜை நடைபெறுகிறது.

    அப்போது உச்சிக்கால பூஜைக்கு முன்பு மலைக்கோவிலில் உள்ள சண்முகர் மற்றும் வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, 12 புண்ணிய கலசங்கள் வைத்து வேத மந்திரங்கள் முழங்க மண்டல பூஜை செய்யப்படுகிறது. அதைத்தொடர்ந்து உச்சிக்கால பூஜையின்போது 12 கலசங்களில் உள்ள புண்ணிய நீரில் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் 16 வகை அபிஷேகம் மற்றும் தீபாராதனை காட்டப்படுகிறது.

    பழனி முருகன் கோவிலில் மண்டல பூஜை நடைபெற்று வருவதால் பக்தர்கள் மட்டுமின்றி அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என ஏராளமானோர் பழனிக்கு வந்து சாமி தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர்.

    இந்தநிலையில் வருகிற 16-ந் தேதியுடன் 48 நாள் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு பெறுகிறது. அன்றைய தினம் பழனி மலைக்கோவிலில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் யாகசாலை பூஜை மற்றும் 1,008 சங்காபிஷேகம் நடைபெற உள்ளது. அதன்பிறகு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று மண்டல பூஜை நிறைவு பெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.

    Next Story
    ×