search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    இன்று தைப்பூச திருவிழா: பழனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
    X

    இன்று தைப்பூச திருவிழா: பழனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

    • பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா இன்று நடக்கிறது.
    • காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் வந்தனர்.

    பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பாதயாத்திரையாக பக்தர்கள் பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. சிகர நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நேற்று பழனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

    குறிப்பாக திண்டுக்கல், தாராபுரம், உடுமலை என அனைத்து சாலைகளிலும் பாதயாத்திரை பக்தர்கள் அணி, அணியாக நடந்து வந்தனர். அவ்வாறு வந்த பக்தர்கள் சண்முகநதி, இடும்பன்குளத்தில் புனித நீராடிய பின் திருஆவினன்குடி, மலைக்கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகை அதிகரிப்பால் பழனி அடிவாரம், சன்னதி ரோடு, அய்யம்புள்ளி ரோடு, கிரிவீதிகள் ஆகிய பகுதிகளில் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலான பக்தர்கள் மேள, தாளத்துடன் ஆங்காங்கே கோலாட்டம், கலில், ஒயில் ஆகிய பாரம்பரிய ஆட்டம் ஆடியபடி சென்றனர். மேலும் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் வந்தனர்.

    பழனி தைப்பூச திருவிழாவில் இன்று தேரோட்டம் நடைபெறுவதால் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும். இந்நிலையில் பக்தர்களுக்கான வசதிகள் கோவில் மற்றும் அனைத்து துறை சார்பில் செய்யப்பட்டு இருந்தது. குறிப்பாக ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழனிக்கு அதிக அளவில் பக்தர்கள் வந்ததால் ஒட்டன்சத்திரம்-பழனி சாலையில் பஸ்கள், வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. எனவே அனைத்து வாகனங்களும் ஒட்டன்சத்திரத்தில் இருந்து பைபாஸ் சாலை வழியாக திருப்பிவிடப்பட்டது.

    அதேபோல் பக்தர்கள் நெரிசலில் சிக்குவதை தடுக்க ஆங்காங்கே போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சாலை நெடுகிலும் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தல், அன்னதான கூடங்களில் உணவு, குடிநீர், ஐஸ்கிரீம், இளநீர் என வெயிலுக்கு ஏற்ற பானங்களும் வழங்கப்பட்டன. இந்நிலையில் நேற்று பகல் முழுவதும் விட்டுவிட்டு சாரல் மழை பெய்ததால் அதில் ஆனந்தமுடன் நனைந்தபடி பக்தர்கள் வந்தனர்.

    பழனிக்கு வந்த பக்தர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் கூட்டம் காரணமாக நகரில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் தடுக்க பழனி சின்னாரக்கவுண்டன்வலசு பகுதியில் தற்காலிக பஸ்நிலையம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து கோவை, திருச்சி, மதுரை, தேனி என புறநகர் செல்லும் பஸ்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கழிப்பறை, குடிநீர் என அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

    இந்நிலையில் நேற்று திருச்சி, மதுரை, அறந்தாங்கி, திண்டுக்கல் என புறநகர் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் தற்காலிக பஸ்நிலையத்துக்குள் செல்லாமல், பழனி பஸ்நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் பஸ்நிலைய பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் அங்கு வந்து சீரமைத்தனர்.

    Next Story
    ×