search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சிதம்பரம் நடராஜர் சன்னிதியும், மனித உடல் அமைப்பும்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சிதம்பரம் நடராஜர் சன்னிதியும், மனித உடல் அமைப்பும்

    • பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத் தலமாக திகழ்கிறது.
    • மனிதனின் உருவ அமைப்புக்கும், பொன்னம்பல நடராஜர் சன்னிதிக்கும் ஒற்றுமை இருக்கிறது.

    சிதம்பரம்:

    நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவையே பஞ்ச பூதங்கள் என அழைக்கப்படுகிறது. உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு பஞ்சபூதங்களும் பெரும்பங்கு வகிக்கின்றன. இவை இறைவனால் படைக்கப்பட்டது என புராணங்கள் உரைக்கின்றன. இதனாலேயே பஞ்ச பூதங்களை வணங்கும் முறையை நம் முன்னோர் வகுத்தனர்.

    திருவாரூர் தியாகராஜர் நிலத்தின் அதிபதியாகவும், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் நீருக்கு அதிபதியாகவும், திருக்காளத்தி காளஹஸ்தீஸ்வரர் காற்றின் அதிபதியாகவும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் நெருப்பின் அதிபதியாகவும், ஆகாயத்தின் அதிபதியாக சிதம்பரம் நடராஜ பெருமானும் உள்ளனர்.

    எனவே, பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத் தலமாக திகழ்கிறது. ஆனந்த தாண்டவம் தொடங்கி பிரளய தாண்டவம் வரை சிவபெருமான் 108 தாண்டவம் ஆடியதாக புராணங்கள் எடுத்துரைக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கதாக இருப்பவை ஐந்து. இவை பஞ்ச தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

    பஞ்ச தாண்டவங்கள் ஆடிய திருத்தலங்கள் பஞ்ச சபைகள் என அழைக்கப்படுகிறது. திருவாலங்காடு, மதுரை, திருநெல்வேலி, திருக்குற்றாலம் மற்றும் சிதம்பரம் ஆகியவை அந்த பஞ்ச சபைகளாக திகழ்கின்றன.

    நடராஜர் சன்னிதியும், மனித உடலின் அமைப்பும்

    மனிதனின் உருவ அமைப்பிற்கும், தங்கத்தால் ஆன நடராஜர் சன்னிதிக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது.

    பொன்னம்பலத்தில் நமசிவாய மந்திரம் பொறிக்கப்பட்டு வேயப்பட்டுள்ள 21,600 தங்க ஓடுகள் என்பது மனிதன் ஒரு நாளைக்கு விடும் சுவாசத்தின் எண்ணிக்கையைக் குறிக்கும் அளவில் உள்ளது.

    பொன்னம்பலத்தில் அடிக்கப்பட்டுள்ள 72,000 ஆணிகள் என்பது மனிதனின் நாடி நரம்புகளைக் குறிக்கிறது.

    கோவிலில் உள்ள 9 வாசல்கள் மனித உடலிலுள்ள 9 துவாரங்களை நினைவுபடுத்துகிறது.

    ஐந்தெழுத்து மந்திரமான சிவாயநம என்பதின் அடிப்படையில் பொன்னம்பலத்தின் ஐந்து படிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஆய கலைகள் 64-ன் அடிப்படையில் சாத்துமரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    96 தத்துவங்களைக் குறிக்கும் விதமாக 96 ஜன்னல்கள் மற்றும் நான்கு வேதங்கள், ஆறு சாஸ்திரங்கள், பஞ்ச பூதங்களின் அடிப்படையில் இங்குள்ள தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×