search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஸ்ரீரங்கம் கொள்ளிடத்தில் திருவெள்ளறை பெருமாள் தீர்த்தவாரி கண்டருளினார்
    X

    ஸ்ரீரங்கம் கொள்ளிடத்தில் திருவெள்ளறை பெருமாள் தீர்த்தவாரி கண்டருளினார்

    • தேரோட்டம் வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ளது.
    • 19-ந்தேதி ஆளும்பல்லக்குடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் சார்பு கோவிலும், 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானதுமான திருவெள்ளறை பங்கஜவல்லி சமேத புண்டரீகாட்ச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் 10 நாட்கள் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 10-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து திருவெள்ளறை மற்றும் சுற்றுப்பகுதிகளுக்கு தினமும் பெருமாள்-தாயார் மண்டகப்படிகளுக்கு சென்று வருகின்றனர். மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில் திருவெள்ளறை கோவில் உற்சவர்கள் செந்தாமரைக்கண்ணன், பங்கஜவல்லித்தாயாருடன் தீர்த்தவாரிக்காக நேற்று ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் எழுந்தருளினார். இதற்காக நேற்று முன்தினம் நள்ளிரவு பங்கஜவல்லித்தாயார் சமேத செந்தாமரைக்கண்ணன் சுவாமி பல்லக்கில் ஸ்ரீரங்கம் புறப்பட்டார். வழிநடை உபயங்கள் கண்டருளியவாறு நேற்று காலை 10 மணியளவில் பெருமாள், தாயார் ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரையை அடைந்தனர். அங்கு அவர்களுக்கு தீர்த்தவாரி மற்றும் சிறப்பு திருவாராதனங்கள் நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்துடன் இரவு வரை பக்தர்களுக்கு தாயார்-பெருமாள் காட்சியளித்தனர். நள்ளிரவுக்குமேல் அங்கிருந்து மீண்டும் திருவெள்ளறை புறப்பட்டனர்.

    உற்சவத்தின் சிறப்பு நிகழ்ச்சிகளாக இன்று(திங்கட்கிழமை) இரவு கருட வாகனத்திலும், 15-ந் தேதி இரவு யானை வாகனத்திலும், 16-ந் தேதி பூந்தேரிலும் சுவாமி வீதி உலா வருகிறார். 17-ந்தேதி குதிரை வாகனத்தில் வையாளி கண்டருளுகிறார்.

    முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 18-ந்தேதி காலை நடைபெற உள்ளது. அன்று இரவு சப்தாவரணம் நடக்கிறது. மறுநாள் 19-ந் தேதி இரவு ஆளும்பல்லக்குடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் திருவெள்ளறை கோவில் அர்ச்சகர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×