search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதியில் ஏழுமலையான் தங்க தேரில் 4 மாட வீதிகளில் உலா
    X

    திருப்பதியில் ஏழுமலையான் தங்க தேரில் 4 மாட வீதிகளில் உலா

    • பிரமோற்சவ விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது.
    • ஸ்ரீதேவி பூதேவி சமேத ஏழுமலையான் தங்கத் தேரில் 4 மாட வீதிகளில் உலா.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவ விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. 6-வது நாளான நேற்று மாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத ஏழுமலையான் தங்க தேரில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இரவு 7 மணிக்கு ஏழுமலையான் கஜ வாகனத்தில் 4 மாட வீதிகளில் பவனி வந்தார். அப்போது ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, ஒடிசா, பாண்டிச்சேரி, ராஜஸ்தான் உள்ளிட்ட 10 மாநிலங்களை சேர்ந்த 250 கலைஞர்கள் 4 மாட வீதிகளில் கலை நிகழ்ச்சிகளை செய்து காட்டி பக்தர்களை பரவசப்படுத்தினர்.

    பாண்டிச்சேரி லலிதாம்பிகை கலைக்குழுவை சேர்ந்த 25 கலைஞர்கள் பிரம்மா லட்சுமி நாராயணா பகிரதன் போன்று வேடமணிந்து கலை நிகழ்ச்சி செய்தனர்.

    இதேபோல் கேரளா கலைஞர்கள் பாரம்பரிய உடை அணிந்து கரகாட்டம் ஆடினர். பிரம்மோற்சவ விழா 7-வது நாளான இன்று காலை ஏழுமலையான் சூரிய பிரபை வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்தார்.

    மதியம் 1 மணி முதல் 3 வரை வரை ஏழுமலையானுக்கு ஸ்நான திருமஞ்சனம் நடந்தது. இரவு 7 மணி முதல் 9 மணி வரை ஏழுமலையான் சந்திரபிரபை வாகனத்தில் 4 மாட வீதிகளில் பவனி வந்தார்.

    நேற்று ஏழுமலையானை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் அனைத்து அறைகளும் நிரம்பி வழிந்தது.

    கிருஷ்ண தேஜா தங்கும் விடுதி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தனர். திருப்பதியில் நேற்று 74,884 பேர் தரிசனம் செய்தனர். 32,213 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 2.70 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    Next Story
    ×