search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் 28-ந்தேதி கும்பாபிஷேகம்
    X

    தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் 28-ந்தேதி கும்பாபிஷேகம்

    • திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில்.
    • மாற்றுத் திறனாளிகளுக்கு தரிசனத்துக்கான சிறப்பு வழி ஏற்படுத்த வேண்டும்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில், வருகிற 28-ந் தேதி காலை 9.35 மணி அளவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    இதுதொடர்பாக முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கி பேசிய போது கூறியதாவது:-

    கும்பாபிஷேகத்தன்று சாமி தரிசனத்துக்காக கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் தவிர்க்க தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும். மேலும் பக்தர்களுக்கான குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக செய்து கொடுக்க வேண்டும்.

    கோவிலை சுற்றியுள்ள இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும். அப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கோவில் வளாகம் மற்றும் வெளிப்புற பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை பக்தர்கள் பயன்படுத்தாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு தரிசனத்துக்கான சிறப்பு வழி ஏற்படுத்த வேண்டும்.

    பக்தர்கள் அதிகமாக கூடும் இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். கோவில் அமைந்துள்ள இடத்தில் புறநகர் காவல் நிலையம் அமைத்து பாதுகாப்பு பணிக்கு போலீசாரை நியமிக்க வேண்டும். பக்தர்கள் நடந்து வரும் நடைபாதைகளின் இருபுறமும் மின்விளக்கு வசதி செய்ய வேண்டும்.

    திருவிழா நடக்கும் நாட்களில் தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்ய வேண்டும். கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்பு அதற்கென அமைக்கப்படும் ஏணி, சாரங்கள் உறுதியாக இருக்கிறதா? என்று பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்து சான்று அளிக்க வேண்டும்.

    பக்தர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக முக்கிய இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட வேண்டும். மேலும் அவற்றில் போதுமான அளவு மருத்துவ அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். உயிர் காக்கும் மருந்துகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். போதுமான எண்ணிக்கையில் ஆம்புலன்ஸ் வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    தீயணைப்பு துறையினர் தேவையான இடங்களில் தேவையான எண்ணிக்கையில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி வாகனங்கள் நிறுத்தி வைக்க வேண்டும். கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளில் சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும். நகரில் அமைந்துள்ள அனைத்து ஓட்டல்கள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் இடங்களில் பாதுகாப்பான, சுகாதாரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் பேசினார்.

    கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் சேக் முகையதீன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, கோவில் செயல் அலுவலர் முருகன் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

    Next Story
    ×