search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஓவியங்கள் மீண்டும் புனரமைக்கப்படுமா?: பக்தர்கள் எதிர்பார்ப்பு

    • இந்த கோவிலில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 6-ந் தேதி, 418 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • இன்று வரை ஓவியங்கள் முழுமை பெறாமல் மோசமாக காட்சி தருகின்றன.

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் 108 வைணவத் திருப்பதிகளில் ஒன்று. நம்மாழ்வாரால் பாடல் இயற்றப்பட்ட திருத்தலம் என்ற சிறப்பைப்பெற்றது. இந்த கோவிலில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 6-ந் தேதி, 418 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதன்பின்பு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.

    ஆனால் கோவிலில் போதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என்றால் இல்லை என்ற பதில்தான் கிடைக்கிறது.

    கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தபோது கோவில் பிரகாரம் மற்றும் வெளிப்புறத்தில் புதியதாக ரூ.17 லட்சம் செலவில் விளக்குகள் பொருத்தப்பட்டது. இந்த விளக்குகள் பொருத்திய போது ஜெனரேட்டரும் அமைக்க வேண்டும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது. ஆனால் இன்று வரை ஜெனரேட்டர் நிறுவப்படவில்லை. இதனால் திடீரென மின்சாரம் தடைபடும்போது, யு.பி.எஸ். மூலம் சில விளக்குகள் மட்டுமே எரிகிறது. கோவிலில் பெரும்பாலான பகுதி இருட்டாக மாறி விடுகிறது. எனவே விரைவில் ஜெனரேட்டரை நிறுவ ஏற்பாடு செய்யவேண்டும் என்று பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கோவிலின் கருவறையைச்சுற்றி மியூரல் ஓவியங்கள் சுமார் ரூ. 75 லட்சம் செலவில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என கூறப்பட்டது. அதன்படி கேரளாவில் இருந்து ஓவியர்கள் வரவழைக்கப்பட்டு ஓவியங்களை தீட்டினர். ஓவியங்களை தீட்டியவர்கள் அப்படியே அரைகுறையாக விட்டு விட்டு சென்றுள்ளனர்.

    இன்று வரை ஓவியங்கள் முழுமை பெறாமல் மோசமாக காட்சி தருகின்றன. இந்த ஓவியங்கள் முழுமை பெற செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கையாக உள்ளது.

    திருவட்டார்-குளச்சல் சாலையில் தபால் நிலைய சந்திப்பில் இருந்து ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு செல்லும் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் பெருமளவில் காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் பெருமளவில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மேலும் கோவிலில் பல்வேறு ேமம்பாட்டு பணிகள் செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும் கருத்துகளை பார்ப்போம்.

    நாதஸ்வர கலைஞர்

    கேசவபுரத்தை சேர்ந்த நேசமணி:-

    கோவிலில் வேலை பார்த்த நாதஸ்வரக்கலைஞர், தவில் கலைஞர் ஆகியோர் ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆகிறது. அதன் பின்னர் கோவிலில் பூஜைகளும், மாலை நேர தீபாராதனைகளும் இசையின்றி நடக்கிறது. பழம் பெருமை வாய்ந்த இந்த கோவிலில் திருவிழாக்களின் போது மட்டும் வெளியூர் கோவிலில் இருந்து தற்காலிகமாக இசைக்கலைஞர்களை அழைத்து வந்து தவில், நாதஸ்வரம் வாசிப்பார்கள். தற்போது கோவிலில் பூஜைகளின் போது தவில், நாதஸ்வரம் இசைக்கப்படாதது பக்தர்களை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது. எனவே தவில், நாதஸ்வரக் கலைஞர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

    25-க்கும்மேற்பட்ட பூசாரிகள் வேலை பார்த்த கோவிலில் இன்று வெறும் 5 பூசாரிகள் மட்டுமே வேலையில் உள்ளனர். இதனால் பக்தர்கள் வெகுநேரம் கோவிலில் வழிபாட்டுக்காக காத்து நிற்க வேண்டியுள்ளது. எனவே கூடுதல் பூசாரிகளை நியமிக்க வேண்டும். மேலும் குலசேகரப் பெருமாள் கோவிலுக்கு தனி பூசாரி நியமிக்க வேண்டும்.

    கூடுதல் பக்தர்களுக்கு அன்னதானம்

    ஆற்றூரை சேர்ந்த லலிதா:-

    தினமும் அறநிலையத்துறை சார்பில் 150 பக்தர்களுக்கு மட்டுமே கோவிலில் மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. அதுவும் டோக்கன் முறையில் வழங்கப்படுகிறது. இதனால் பல பக்தர்கள் கோவிலுக்கு வந்து விட்டு அன்னதானம் கிடைக்காமல் ஏமாற்றமுடன் திரும்பிச்செல்கின்றனர். குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் பக்தர்கள் வருகை தருகிறார்கள். அந்த நாட்களில் கூடுதலாக 200 பக்தர்களுக்காவது அன்னதானம் வழங்க முன் வரவேண்டும்.

    கடிதம் எழுதப்பட்டுள்ளது

    பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பாக கோவில் மேலாளர் மோகன் குமார் கூறியதாவது:-

    கோவிலில் போதிய அர்ச்சகர்களை நியமிக்கவும், இசைக் கலைஞர்கள் நியமிக்கவும் மேலதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளோம். ஜெனரேட்டர் விரைவில் பொருத்தப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பக்தர்களின் கோரிக்கையை ஏற்று மேம்பாட்டு பணிகள் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என்பது பக்தர்கள் கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×