search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதி பிரம்மோற்சவ விழாவை காணவரும் பக்தர்களுக்கு ருசியான, தரமான உணவு வழங்க ஏற்பாடு
    X

    திருமலையில் உள்ள அன்னதானக்கூடம்.

    திருப்பதி பிரம்மோற்சவ விழாவை காணவரும் பக்தர்களுக்கு ருசியான, தரமான உணவு வழங்க ஏற்பாடு

    • 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் 5-ந்தேதி வரை பிரம்மோற்சவம் நடக்கிறது.
    • காலை 8 மணியிலிருந்து இரவு 11.30 மணி வரை அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 27-ந்தேதியில் இருந்து அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா 2 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக நடக்க உள்ளது.

    அதையொட்டி திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் பல்வேறு துறைகள் சார்பாக பக்தர்களுக்கு மேற்கொள்ளப்பட உள்ள சேவைகள் குறித்து தெரிவித்து வருகிறது. அதன்படி திருமலை-திருப்பதி தேவஸ்தான அன்னதானத்திட்டம் சார்பாக மேற்கொள்ளப்படுகிற சேவைகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பசி தெரியாமல் இருக்க, அன்னதானத்தை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தொடர்ந்து வழங்கி வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தாலும் அவர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் அன்னதானம் வழங்கி வருகிறது.

    திருமலையில் ஏழுமலையானுக்கு கைங்கர்யம் செய்து வந்த தரிகொண்டா வெங்கமாம்பா 17-ம் நூற்றாண்டில் பக்தர்களுக்கு அன்னதானத்தை வழங்கினார். திருமலையில் முதல் முதலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய பெருமை தரிகொண்டா வெங்கமாம்பாவையே சாரும்.

    திருமலையில் அன்னதான வினியோகத்தின் முன்னோடியான தரிகொண்டா வெங்கமாம்பா பெயரில் புதிதாக அன்னப்பிரசாத பவன கட்டிடத்தை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் புதிதாக கட்டி திறந்து வைத்தது. அங்கு நவீன வசதிகளுடன் ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பக்தர்கள் அமர்ந்து உணவு சாப்பிடும் வகையில் 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி அப்போதைய குடியரசு தலைவராக இருந்த பிரதீபா பட்டீல் திறந்து வைத்தார்.

    திருமலையில் அன்னதானம் தயாரிப்பதற்காக தினமும் சுமார் 10 முதல் 12 டன் அரிசி மற்றும் 7 முதல் 8 டன் காய்கறிகள் பயன்படுத்தப்படுகின்றன. அன்னதானத்திட்ட அறக்கட்டளைக்கு ரூ.1,502 கோடி காணிக்கை பக்தர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.

    தற்போது திருமலையில் சாதாரண நாட்களில் 55 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. வார இறுதி நாட்கள் மற்றும் விழா நாட்களில் அன்னதானம் சாப்பிடும் பக்தர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டும்.

    வருகிற வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்கும் அனைத்துப் பக்தர்களுக்கும் 9 நாட்களுக்கு தினமும் காலை 8 மணியில் இருந்து இரவு 11.30 மணி வரையிலும், கருடசேவை அன்று நள்ளிரவு 1 மணி வரையிலும் ருசியான, தரமான வகையில் அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தேவஸ்தான அன்னதானத்திட்டம் ஒரு அட்சய பாத்திரமாக விளங்குகிறது.

    மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×