search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    காரைக்குடி அருகே 60 கிராம மக்கள் பங்கேற்ற பாரிவேட்டை திருவிழா
    X

    காரைக்குடி அருகே 60 கிராம மக்கள் பங்கேற்ற பாரிவேட்டை திருவிழா

    • பெண்கள் ஆரத்தி எடுத்து வணங்கி அனுப்பி வைத்தனர்.
    • சுமார் 5 ஆயிரம் பேர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

    மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நாயத்தான்பட்டி கிராமத்தில் வல்லடிக்காரர் தெய்வத்தை குலதெய்வமாக வணங்கும் 60 கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரி திருவிழாவில் இருந்து 3 நாட்களுக்கு பின்னர் காரைக்குடியை அடுத்த கல்லல் அருகே அரண்மனைசிறுவயல் கிராமத்தில் உள்ள குளத்தில் நீராடி ஆயுதங்களுடன் பாரிவேட்டைக்கு செல்வது வழக்கம். அதன்படி இந்தாண்டும் இந்த விழா நடைபெற்றது.

    முன்னதாக நாயத்தான்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பேர் இந்த விழாவில் கலந்துகொண்டு அரண்மனைசிறுவயல் குளத்தில் நீராடிய பின்னர் அங்குள்ள பாரிவேட்டை திடலில் கிராம அம்பலக்காரர்கள் அமர்ந்து வழிபாடு நிகழ்ச்சியை நடத்தினர்.

    அதன் பின்னர் அவர்கள் பாரிவேட்டைக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களுடன் வேட்டைக்கு சென்றனர். அவர்களை பெண்கள் ஆரத்தி எடுத்து வணங்கி அனுப்பி வைத்தனர். தமிழ்நாடு வனத்துறை சார்பில் பாரிவேட்டைக்கு தடை விதிக்கப்பட்டதால் சம்பிரதாயத்திற்காக சிறிது தூரம் அவர்கள் நடந்து சென்று வந்தனர். அதன் பின்னர் விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதன்பிறகு அவர்கள் அரண்மனைசிறுவயல் கிராமத்தில் இருந்து புறப்பட்டு தங்களது சொந்த கிராமத்திற்கு சென்று 15 நாட்கள் வரை விரதம் கடைபிடிப்பது வழக்கம்.

    அவ்வாறு விரதம் இருக்கும் இந்த நாட்களில் வீடுகளில் எண்ணெய் பயன்படுத்தி சட்டியில் சமைப்பதோ அல்லது தாளிப்பதோ கிடையாது. மேலும் அவர்கள் வெளியூர் பயணங்களுக்கும் செல்வதில்லை என்று அந்த ஊர் கிராம மக்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×