search icon
என் மலர்tooltip icon

    கால்பந்து

    யூரோ கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ஸ்பெயின்
    X

    யூரோ கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ஸ்பெயின்

    • கோல் அடிப்பதில் முனைப்பு காட்டினர்.
    • நிகோ வில்லியம்ஸ் அதனை கோலாக மாற்றினார்.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்றது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றன.

    ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெற்றன. லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் மோதின. இதில் வெற்றி பெற்ற ஸ்பெயின், ஃபிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.

    முதலாவது அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் அணியும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறின. நேற்று நள்ளிரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து வீரர்கள் துவக்கம் முதலே கோல் அடிப்பதில் முனைப்பு காட்டினர்.

    போட்டியின் முதல் பாதி வரை இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி வரை போட்டி 0-0 என்ற கணக்கிலேயே இருந்தது. இரண்டாவது பாதி ஆட்டத்தில் ஒரு கோல் அடித்து கோப்பையை வெல்ல இரு அணி வீரர்களும் தீவிரமாக விளையாடினர். போட்டியின் 47 ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் யமால் அசிஸ்ட் செய்ய நிகோ வில்லியம்ஸ் அதனை கோலாக மாற்றினார்.


    இதன்பிறகு ஆட்டம் சூடுபிடிக்க துவங்கியது. துவக்கம் முதலே போராடி வந்த ஸ்பெயின் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. போட்டியில் ஒரு கோல் அடிக்கப்பட்டதை தொடர்ந்து விறுவிறுப்பாக மாறியது. ஸ்பெயின் போட்டியில் ஆதிக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து இங்கிலாந்து வீரர்கள் பதில் கோல் அடிக்க தீவிரம் காட்டினர்.

    இதன் முயற்சியாக 73 ஆவது நிமிடத்தில் பெலிங்கம் அசிஸ்ட் செய்ய இங்கிலாந்து வீரர் கோலெ பால்மர் கோல் அடித்து அசத்தினார். இதனால் போட்டி முடியும் தருவாயில் பரபர சூழல் உருவானது. இரு அணிகளும் தலா ஒரு கோல் என்ற கணக்கில் மற்றொரு கோல் அடித்து வெற்றி வாகை சூட இரு அணி வீரர்களும் களத்தில் மல்லுக்கட்டினர்.

    நீண்ட நேரம் நீடிக்காத போராட்டத்தால் 86 ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் மிகெல் ஒயர்சபால் கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இவர் கோல் அடிக்க ககெரெல்லா அசிஸ்ட் செய்தார். இதைத் தொடர்ந்து போட்டி முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதன் காரணமாக ஸ்பெயின் அணி 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி யூரோ கோப்பை சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    இந்த வெற்றியின் மூலம் ஸ்பெயின் அணி நான்காவது முறைாக யூரோ கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. முன்னதாக 1964, 2008, 2012 ஆகிய ஆண்டுகளில் ஸ்பெயின் அணி யூரோ கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தது. யூரோ கோப்பை வரலாற்றில் இதுவரை எந்த அணியும் நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×