என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
குழந்தை பராமரிப்பு
பள்ளி குழந்தைகள் மத்தியில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளதா?
- குழந்தைகள் மத்தியில் இந்த சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது
- இந்த சட்டத்தில் உள்ள தண்டனைகளை இன்னும் கடுமையாக்க வேண்டும்.
நமது நாட்டில் பெரும்பாலான பாலியல் குற்றங்கள் மீது யாரும் புகார் கொடுக்க முன்வருவது இல்லை என்று ஒரு ஆய்வு கூறுகிறது. குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்க கொண்டு வந்த சட்டம்தான் போக்சோ. இதன் முழு விரிவாக்கம் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் என்பது ஆகும். இந்த சட்டம் கடந்த 2012-ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருந்து வருகிறது.
இந்த சட்டம் தீவிரப்படுத்தப்பட்ட பின்னர், பள்ளி படித்து வரும் குழந்தைகள் மத்தியில் இந்த சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக குழந்தைகளை பாலியல் சீண்டல்கள் செய்தாலே இந்த சட்டத்தின் கீழ் வருவதால், பல இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருவது குறைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
விழிப்புணர்வு
குறிப்பாக கோவை மாவட்டத்தில் போக்சோ சட்டம் தொடர்பாக மாணவிகள் மத்தியில் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாவட்ட சமூக நலத்துறை, மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை, சைல்டு லைன் ஆகியோருடன் போலீசார் இணைந்து பள்ளி குழந்தைகள், கிராமப்புறங்களில் போக்சோ சட்டம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.
இதனால் பாலியல் சீண்டல்கள் செய்தால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பான விழிப்புணர்வு மாணவிகளுக்கு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்படும் மாணவிகள் தங்களின் பெற்றோரிடமோ, அல்லது ஆசிரியரிடமோ தெரிவிப்பதால், அவர்கள் போலீசில் புகார் செய்து குற்றங்கள் செய்யும் நபர்களை கைது செய்து வருகிறார்கள். மேலும் போக்சோ தொடர்பாக விழிப்புணர்வை இன்னும் அதிகமாக தீவிரப்படுத்தி, இதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கோவை மாவட்டத்தை சேர்ந்த மாணவிகள், பெற்றோர், ஆசிரியர்கள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-
பயம் இல்லை
சசிகலா (ஆசிரியை, அன்னூர்):- போக்சோ சட்டம் தொடர்பாக 18 வயதுக்கு கீழ் உள்ள பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதால் மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறது. எனவே மாணவிகள் தைரியமாக இருக்கிறார்கள். இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டால் யாரிடம் சொல்வது என்று தெரியாமல் இருந்தது. அத்துடன் வெளியே சொன்னால் தங்களை பெற்றோர் பள்ளிக்கு அனுப்புவார்களோ என்ற பயமும் இருந்தது. ஆனால் இப்போது மாணவிகளிடம் அந்த பயம் இல்லை.
கந்தசாமி (பொள்ளாச்சி):- கோவை மாவட்டத்தை பொறுத்தவரை பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில்தான் போக்சோ சட்டம் அதிகளவில் பதிவாகி வருகிறது. அதுபோன்று அங்குதான் குழந்தை திருமணமும் அதிகமாக நடந்து வருகிறது. போக்சோ குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டதுதான் இதன் வெளிப்பாடு. எனவே இந்த பகுதிகளில் இன்னும் அதிகமாக கவனம் செலுத்தி அனைத்து குக்கிராமங்களுக்கும் அதிகாரிகள் நேரடியாக சென்று, பள்ளி மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பெற்றோர் ஒத்துழைப்பு
முத்துகிருஷ்ணன் (தொண்டாமுத்தூர்):- தற்போது அனைத்து பள்ளிகளிலும் நல்ல தொடுதல், (குட் டச்) தீய தொடுதல் (பேட் டச்) என்று குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் சொல்லிக்கொடுத்து வருகிறார்கள். இதனால் மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. ஆனால் குக்கிராமங்கள், மலைவாழ் பகுதியில் உள்ள மாணவிகளுக்கு சரியாக விழிப்புணர்வு சென்று சேரவில்லை. எனவே இந்த விஷயத்தில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அனைத்து மாணவிகளிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தாரணி (பள்ளி மேலாண்மை குழு தலைவர்) :- சில பள்ளிகளில் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு தொடர்பான கருத்துகளை சொல்ல நாங்கள் முயற்சி செய்து, அதில் பெற்றோரும் பங்கேற்க கூறினால், பெற்றோர் யாரும் ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை. அத்துடன் இதுபோன்ற நிகழ்ச்சிக்கும் தங்கள் குழந்தைகளை அனுப்ப மறுக்கிறார்கள். இதனால் போக்சோ தொடர்பான விழிப்புணர்வு கருத்துகளை மாணவிகளிடம் எடுத்துச்சொல்ல முடியாமல் போய்விடுகிறது. என்னதான் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினாலும் அதற்கு மாணவிகளின் பெற்றோர் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அப்போதுதான் அது முழுமையாக மாணவிகள் மத்தியில் சென்றடையும்.
தைரியம் கிடைத்து உள்ளது
கல்லூரி மாணவி:- நான் பள்ளியில் படிக்கும்போது போக்சோ சட்டம் குறித்து எங்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதனால் என்னைப்போன்ற மாணவிகளுக்கு தைரியம் ஏற்பட்டது. அத்துடன் குழந்தைகளை தவறான எண்ணத்தில் தொட்டாலே இந்த சட்டம் பாய்வதால், பலர் பயந்து வருகிறார்கள். எனவே குழந்தைகளின் நலன் கருதி, குழந்தைகளை பாதுகாக்கும் வகையில், இந்த சட்டத்தில் உள்ள தண்டனைகளை இன்னும் கடுமையாக்க வேண்டும்.
பள்ளி மாணவிகள்:- பள்ளிகளில் எங்களுக்கு போக்சோ தொடர்பாக ஆசிரியர்கள், போலீஸ் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இதுபோன்ற சம்பவம் நடக்கும்போது பெற்றோரிடம் சொல்ல பயமாக இருக்கும். எனவே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால், யாராவது தவறான எண்ணத்தில் எங்களிடம் பேசினாலோ, அல்லது தொட்டாலோ நாங்கள் உடனே எவ்வித பயமும் இல்லாமல் ஆசிரியைகளிடம் சொல்லலாம் என்ற தைரியம் எங்களுக்கு ஏற்பட்டு உள்ளது.
இளைஞர்களுக்கு விழிப்புணர்வு
சந்தோஷ்குமார்:- போக்சோ என்றால் சிறுமிகளிடம் தவறாக நடந்தால் மட்டும்தான் நடவடிக்கை என்று இல்லை. 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தினால் போக்சோ சட்டம் பாயும். எனவே மாணவர்களிடமும் இதுபோன்ற விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. அத்துடன் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை தவறாக தொட்டால் நமது வாழ்க்கையே வீணாக போய்விடும் என்று இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. மேலும் இது தொடர்பாக இளைஞர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ராஜேஸ்வரி (காரமடை):- காலையில் இருந்து மாலை வரை குழந்தைகள் பள்ளிகளில்தான் இருக்கிறார்கள். அவர்கள் பெற்றோரிடம் மனம்விட்டு பேசுவதை விட ஆசிரியைகளிடம்தான் நன்றாக பேசுவார்கள். பெற்றோர் சொன்னால் காது கொடுத்து கேட்க மாட்டார்கள். ஆனால் ஆசிரியர்கள் கூறினால் அதை கேட்பார்கள். எனவே பள்ளி குழந்தைகளிடம் நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் என்று தெளிவாக சொல்லிக்கொடுக்க வேண்டும். முக்கியமாக போக்சோ தொடர்பாக முழு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி காரணமாகஒரே பள்ளியில் 12 மாணவிகள் புகார்
போக்சோ சட்டம் தொடர்பாக அனைத்து பள்ளிகளிலும் அதிகாரிகள், போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இதன் விளைவாக ஒரு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தபோதே 12 மாணவிகள் புகார் தெரிவித்து உள்ளனர். இதுதான் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் பயன் ஆகும். ஆனால் சில பகுதிகளில் மாணவிகள் புகார் கொடுக்க முன்வந்தாலும், அவர்களின் பெற்றோர் ஒத்துழைப்பு
தண்டனையை கடுமையாக்க வேண்டும்
போக்சோ தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், சராசரியாக கோவை மாவட்டத்தில் மாதத்துக்கு 13 முதல் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளில் 5 பேர் கர்ப்பம் அடைந்துதான் வருகிறார்கள். இதில் உறவினர்களால் பாதிக்கப்படும் சிறுமிகள்தான் அதிகம். சிலர் இந்த குற்ற வழக்கில் கைதாகி இருந்தாலும் போதிய ஆதாரம் இல்லாமல் எளிதாக வெளியே வந்து விடுகிறார்கள். எனவே சிறுமிகள் பாதிக்கப்படுவதை தடுக்க, இந்த குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு மிகக்கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
சட்டம் சொல்வது என்ன?
போக்சோ சட்டத்தில் என்னென்ன பிரிவுகள் உள்ளன? அதில் கிடைக்கும் தண்டனை விவரங்கள் எவை என்பது குறித்து வக்கீல் ஒருவர் கூறும்போது, போக்சோ சட்டத்தில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. அதில் குழந்தைகளை பலாத்காரம் செய்தால் 7 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை வரை கிடைக்கும். அபராதமும் உண்டு. குழந்தைகளின் அந்தரங்க உறுப்புகளை தொடுவது, கட்டாயப்படுத்தி தொட வைப்பது பாலியல் சீண்டல் ஆகும். இதில் அதிகபட்சமாக 8 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும். பாலியல் ரீதியாக செய்கைகள் காட்டுவது, ஆபாசமாக பேசுவதும் போக்சோ சட்டத்தில்தான் வருகிறது. இதற்கு 5 ஆண்டு வரை தண்டனை கிடைக்கும் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்