என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
குழந்தை பராமரிப்பு
குழந்தைகளை பாதிக்கும் அடினாய்டு பாதிப்புக்கு எளிய சிகிச்சை
- அடினாய்டு பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு இரவில் சரியாக தூக்கம் வராது.
- சரியான சிகிச்சை அளிக்காத நிலையில் அந்த குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கும்.
சமீபகாலமாக குழந்தைகளுக்கு தொண்டையில் அழற்சி, குறட்டை, தூக்கமின்மை, மூக்கில் ரத்தம் வருதல் போன்ற பாதிப்புகள் காணப்படுகிறது. இதனை 'அடினாய்டிடிஸ்' (ADENOIDITIS) என்கிறார்கள்.
குழந்தைகள் முதல் டீன் ஏஜ் வயதினர் வரை இதனால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த பாதிப்பை எளிய அறுவை சிகிச்சை மூலம் சரி செய்வது குறித்து மதுரை செல்லூர் அகிம்சாபுரம் பழனியாண்டவர் ஆஸ்பத்திரி காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கண்ணப்பன் அழகப்பன் விளக்குகிறார்.
அடினாய்டு திசுக்கள்
மூக்கின் பின் பகுதியில் காணப்படும் திசுக்களுக்கு அடினாய்டு திசுக்கள் அல்லது அடினாய்டு கோளங்கள் என்று பெயர். இந்த அடினாய்டு திசுக்கள் என்பவை மூக்கின் வழியாக நுழையும் பாக்டீரியா, வைரஸ் உள்பட அனைத்து கிருமிகளையும் தடுத்து உடலுக்குள் புகாமல் தடுக்கும் பணியை செய்கின்றன. சில நேரங்களில் இந்த அடினாய்டு திசுக்கள் தொற்றால் பாதிக்கப்படும் போது மூக்கின் பின் துவாரம் மற்றும் தொண்டையும் இணையும் இடம் பாதிப்புக்கு உள்ளாகிறது. குறிப்பாக, இது போன்ற பாதிப்பு ஏற்படும் போது தொண்டையின் மேல் பகுதியையும், நடுக்காதையும் இணைக்கும் யூஸ்டேசியன் ட்யூப் என்னும் குழாயில் அடைப்பு ஏற்பட்டு நீர் கோர்த்து விடுகிறது. இது போல் இந்த இடத்தில் அடைப்பு ஏற்படும் போது அது காதின் சவ்வில் துளை ஏற்பட வழி வகுக்கிறது. இதுபோன்ற நிலை என்பது சுவாச பகுதி சுரப்பி வீங்கி பெரிதாகி இருப்பதற்கான அறிகுறி ஆகும்.
பொதுவாக, குழந்தைகளுக்கு அடினாய்டு பாதிப்பு இருக்கும் அறிகுறிகள் தெரிந்தால் அதை குழந்தைகளுக்கு உடனடியாக சரியான சிகிச்சை அளிக்க வேண்டும். அவ்வாறு சரியான சிகிச்சை அளிக்காத நிலையில் அந்த குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கும். காது வலியும், காதில் சீழ் வடிதல் மற்றும் காது அடைப்பும் காணப்படும். அடினாய்டு பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு தூக்கத்தில் குறட்டை வரும். சில நேரங்களில் மூக்கில் இருந்து ரத்தம் வரலாம். பொதுவாக, அடினாய்டு பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு இரவில் சரியாக தூக்கம் வராது. இதனால், அவர்கள் காலையில் தூங்கி எழும் போது புத்துணர்ச்சி இல்லாதவர்களாக சோம்பலுடன் காணப்படுவர். பள்ளியில் படிப்பில் கவனம் செல்லாது. உடல் எடை போதிய அளவு இல்லாமல் மெலிந்து காணப்படுவர். பல் வரிசை சரியாக அமையாமல் முன்பக்கம் உள்ள பற்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து காணப்படும். சில குழந்தைகளுக்கு மேலுதடு உயர்ந்து காணப்படும்.
கண்டறிதல் மற்றும் சிகிச்சை
ஒரு குழந்தைக்கு அடினாய்டு பாதிப்பு இருக்கிறதா என்பதை டையாக்னாஸ்டிக் நேசல் என்டோஸ்கோப்பி பரிசோதனையில் அறியலாம். அதாவது, இந்த கருவி மூலம் அடினாய்டு திசுக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளன என்பதை மிகத் துல்லியமாக பார்க்கலாம். இதுதவிர மென்திசு எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் மூலமும் பரிசோதித்து பாதிப்பின் அளவை துல்லியமாக தெரிந்து கொள்ளலாம்.
முந்தைய காலங்களில் மருத்துவர்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ள அடினாய்டு திசுக்களை தோராயமாக அறுவை சிகிச்சை மூலம் நீக்குவது வழக்கம். ஆனால், தற்போது அதிநவீன கண்டறிதல் கருவிகள் இருப்பதால் மிகத்துல்லியமாக அடினாய்டு திசுக்களின் பாதிப்பை கண்டறிந்து 99 சதவீதம் நீக்க முடியும். மீதமுள்ள 1 சதவீதம் திசுக்கள் தானாக சுருங்கி விடும். இந்த அடினாய்டு திசு பாதிப்பு நீக்க சிகிச்சைக்கு என்டோஸ்கோப்பி அடினாய்டு எக்டமி அல்லது என்டோஸ்கோப்பிக் கைடடு கன்வென்ஷனல் அடினாய்டு எக்டமி என்று பெயர். இதனை 'காபுலேசன் லேசர் சர்ஜரி' என்கிறோம். இந்த அதிநவீன அடினாய்டு அறுவை சிகிச்சையில் ரத்த இழப்பு இருக்காது. இது பாதுகாப்பான சிகிச்சை ஆகும்.
நோய் காரணங்கள்
இன்றைக்கு, குழந்தைகள் அதிக அளவில் நொறுக்கு தீனி உட்கொள்வது, அளவுக்கு மீறி சாக்லேட் மற்றும் சாக்லேட் சுவையுள்ள பிரவுன் சாக்லேட்டுகள் போன்ற இனிப்புகளை உண்பது தான் முக்கிய காரணம். இது தவிர, சுவாசிக்கும் காற்றில் உள்ள கடுமையான மாசுபாடு காரணமாக ஏற்படுகிறது.
குழந்தைகளிடத்தில் அடினாய்டு பாதிப்பை தடுக்க கண்டிப்பாக குழந்தைகள் சாக்லேட் வாங்கி தருவதை பெற்றோர்களும், குழந்தைகள் இருக்கும் வீடுகளுக்கு இனிப்பு வாங்கி செல்லும் விருந்தினர்களும் தவிர்க்க வேண்டும்.
பலன்கள்
அடினாய்டு பாதிப்புக்கு தக்க நேரத்தில் சிகிச்சை அளித்து விட்டால் அடினாய்டு காரணமாக குழந்தைகளுக்கு ஏற்படும் குறட்டை, அடிக்கடி சளி தொல்லை, காது வலி பாதிப்பு மற்றும் சோம்பல் தன்மை நீங்கி விடும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரித்து ஆரோக்கியமான குழந்தைகளாக இருப்பார்கள் என்பது உறுதி.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்