search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    பயணத்தின் போது கால்கள் வீங்குவது எதனால் தெரியுமா?
    X

    பயணத்தின் போது கால்கள் வீங்குவது எதனால் தெரியுமா?

    • இறுக்கமாக அழுத்தக்கூடிய காலுறைகளை அணிந்து கொள்ளுங்கள்.
    • ஒரே நிலையில் தொங்கப் போட்டுக் கொண்டு வரக்கூடாது.

    ஒரே இடத்தில் தொடர்ந்து நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தால், அல்லது கால்களைத் தொங்கப் போட்டுக் கொண்டு வந்தால், கால்களிலுள்ள ரத்தக்குழாய்களில் அழுத்தம் அதிகமாகிறது. இதனால் ரத்தக் குழாய்களிலிருந்து, நீர் வெளியே வந்து, சுற்றியிருக்கும் திசுக்களில் கொஞ்சம் கொஞ்சமாக சேருகிறது. இப்படித்தான் கால் வீக்கம் ஏற்படுகிறது.


    அதிக உடல் எடை, நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்பது அல்லது அமர்ந்திருப்பது, இறுக்கமான காலுறைகள், ஜீன்ஸ் பேண்ட் நீண்ட நேரம் அணிந்திருப்பதாலும் காலில் நீர் சேரலாம்.

    இதுதவிர சிறுநீரகம், இதயத் தசைகள் பாதிப்பு, புற்றுநோய் சிகிச்சை மருந்துகளின் பக்க விளைவு, காலிலுள்ள ரத்தக் குழாய்கள் மூலம் இதயத்துக்கு ரத்தம் வந்து சேருவதில் பிரச்சினை, ஹார்மோன் பிரச்சனை, நிணநீர் மண்டல பாதிப்பு, சிறுநீரக வடிகுழாய்களில் பிரச்சினை, கர்ப்ப காலம், நுரையீரல் ரத்தக் குழாய்களில் அதிக ரத்த அழுத்தம், கால்களிலுள்ள ரத்தக் குழாய்களில் ரத்தக் கட்டி அடைப்பது, அதிக உப்புள்ள உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது, காலில் ஏதாவது புண், மூட்டு வீக்கம் இருப்பது, சோடா, குளிர்பானங்கள் அடிக்கடி அதிகமாகக் குடிப்பது போன்ற பல காரணங்களினால் கால்களில் வீக்கம் ஏற்படுவதுண்டு.

    பயணத்தின் போது காலில் வீக்கம் வராதிருக்க, அதிக உப்பு சேர்த்த உணவுப் பொருட்களைத் தொடவே வேண்டாம். காலை நன்றாக, இறுக்கமாக அழுத்தக்கூடிய காலுறைகளை அணிந்து கொள்ளுங்கள். கால்களை ஒரே நிலையில் தொங்கப் போட்டுக் கொண்டு வரக்கூடாது.

    நிறைய காய்கறிகள், பழங்கள், தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். சோடா, சிப்ஸ், குளிர்பானங்களை தவிர்க்கவும்.


    வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கால்களை தூக்கி தலையணை மீதோ அல்லது மேஜை மீதோ வைத்துக் கொள்ளவும். ஏதாவது ஒரு வழியில் கால்களை ஆட்டிக் கொண்டே இருங்கள்.

    'கால் ஆட்டியாவது காஞ்சிபுரத்தில் போய் பிழைத்துக் கொள்ளலாம்' என்று தறி நெய்யும் வேலைக்காக சொல்வதுண்டு. இது அன்றைய பழமொழி. 'கால் ஆட்டிக்கொண்டே இருந்தால், கால் வீக்கம் இல்லாமல் தப்பித்துக் கொள்ளலாம்'- இது இன்றைய புதுமொழி.

    பகலில் கால்கள் வீங்குவதும், இரவு தூங்கி காலையில் எழுந்தால், கால் வீக்கம் சுத்தமாக வடிந்து விடுவதும் சிலருக்கு ஏற்படுவதுண்டு. இது பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் கால் வீக்கம் 3 நாட்கள் கழித்தும் வடியவில்லை என்றால் உடனே உங்கள் குடும்ப டாக்டரைச் சந்திக்கவும்.

    Next Story
    ×