search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    கோடை வெப்பத்தை தணிக்கும் 10
    X

    கோடை வெப்பத்தை தணிக்கும் '10'

    • கோடை வெப்பத்தை சமாளிப்பதற்கு ஏற்ற வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம்.
    • அடர் நிறம் கொண்ட துணிகள் அணிவதை தவிர்க்கவும்.

    கோடை காலத்தில் வெப்பநிலையில் ஏற்படும் மாறுபாடுகளை சமாளிப்பதற்கு ஏற்ற வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம். அதன் மூலம் உடல் ஆற்றலை அதிகரித்துக்கொள்ளலாம். தேவையற்ற பிரச்சினைகளில் இருந்து உடலை தற்காத்தும் கொள்ளலாம். அதற்கு செய்ய வேண்டிய 10 விஷயங்கள்:

    1. அடர் நிறம் கொண்ட துணிகள் அணிவதை தவிர்க்கவும். வெளிர் நிறத்திலும் வெள்ளை நிற ஆடைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

    2. காபின் அதிகம் கொண்ட பானங்கள் நீரிழப்பை ஏற்படுத்தும். அந்த பானங்கள் பருகுவதற்கு இதமாக இருந்தாலும் கோடை காலத்தில் அவற்றை அறவே தவிர்த்துவிடுவது நல்லது. மதுப்பழக்கத்தையும் தவிர்க்கவும். அதுவும் நீரிழப்பை அதிகப்படுத்திவிடும்.

    3. வெயிலின் தாக்கத்தால் உடலில் இருந்து வெளிப்படும் அதிகப்படியான வியர்வை உடலில் இருந்து சோடியம் மற்றும் பொட்டாசியத்தை இழக்க வழிவகுக்கும். எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர், ஸ்வீட் கார்ன், தர்பூசணி, வெள்ளரி ஆகியவை கோடைகால உணவில் அவசியம் இடம் பெற்றிருக்க வேண்டும். இவை இழந்த வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை மீட்டெடுக்க உதவும்.

    4. புரதம் மற்றும் கொழுப்பு கொண்ட உணவுகள் செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். மேலும் அவை உடலின் அடிப்படை வெப்பநிலையையும் அதிகப்படுத்திவிடும். இந்த கோடை வெப்பத்தில் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வது சிறப்பானது.

    5. மூன்று வேளை சாப்பிடும் உணவுகளை கோடை காலத்தில் ஐந்து முறையாக பிரித்து சாப்பிடலாம். அப்படி சாப்பிடுவது செரிமானம் இலகுவாக நடைபெற உதவும். நாள் முழுவதும் உடல் ஆற்றலுடன் செயல்படவும் வித்திடும்.

    6. நேரடி சூரியத் தொடர்பைத் தவிர்க்கவும். காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்வதை கூடுமானவரை தவிர்க்கவும். தலையை பாதுகாக்க குடை மற்றும் தொப்பியைப் பயன்படுத்தவும். சன்ஸ்கிரீன் பூசுவதற்கும் மறந்துவிடாதீர்கள்.

    7. மாய்ஸ்சுரைசர் போடுவது சருமத்திற்கு கூடுதல் சுமையாகத் தோன்றலாம். ஆனால் அது சருமத்தை ஈரப்பதமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். மென்மையான கிரீம் அல்லது கற்றாழை ஜெல் சருமத்திற்கு இதமளிக்கும்.

    8. கோடையில் எல்லோரும் விரும்பும் பயிற்சிகளில், முதன்மையானது நீச்சல். அது உடலை வெப்பத்தில் இருந்து காக்கும். காலை அல்லது மாலையில் நடைப்பயிற்சி செய்வது, சைக்கிள் ஓட்டுவது கூட புத்துணர்ச்சி அளிக்கும்.

    9. காதுகளின் பின்புறம், மணிக்கட்டு, கழுத்து, முழங்கைகள், முழங்கால்கள் போன்ற பகுதிகளில் ஐஸ்கட்டி கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம். குளிர்ந்த பாட்டிலை உருட்டியும் மசாஜ் செய்யலாம். அது உடலை விரைவாக குளிர்விக்க உதவும்.

    10. அடிக்கடி தண்ணீர் பருக மறக்காதீர்கள். கோடையை சமாளிக்க தினமும் போதுமான அளவு ஓய்வெடுங்கள்.

    Next Story
    ×