search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    ரத்த தானம் செய்வதன் நன்மைகள் என்னென்ன?
    X

    ரத்த தானம் செய்வதன் நன்மைகள் என்னென்ன?

    • 3 மாதங்களுக்கு ஒருமுறை ரத்த தானம் செய்யலாம்.
    • ரத்த தானம் செய்வதால் உடலுக்கு பாதிப்போ, பலவீனமோ ஏற்படாது.

    விபத்தின்போதோ, அறுவை சிகிச்சையின்போதோ, வேறு ஏதேனும் வகையில் ஒருவருக்கு ரத்த இழப்பு ஏற்படும்போது அவரது உயிரை காக்கவும், இழந்த ரத்தத்தை ஈடு செய்யவும் பிறரிடம் இருந்து ரத்தம் தானமாக பெறப்படுகிறது. உயிரை காக்கும் அருங்கொடையான ரத்த தானம் செய்வது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14-ந் தேதி ரத்ததான தினம் அனுசரிக்கப்படுகிறது.

    அன்றைய நாளில் மட்டும் ரத்த தானம் செய்வதற்கு ஆர்வம் காட்டாமல், ஆரோக்கியமான மனிதர் 3 மாதங்களுக்கு ஒருமுறை ரத்த தானம் செய்யலாம்.

    மனித உடலில் சராசரியாக 5 லிட்டர் ரத்தம் உள்ளது. அதில் 470 மில்லி லிட்டர் வரை ரத்தத்தை தானமாக வழங்கலாம். ரத்த தானம் செய்வதால் உடலுக்கு பாதிப்போ, பலவீனமோ ஏற்படாது. ஏராளமான நன்மைகளைத்தான் வழங்கும். அவற்றுள் சில...


    1. மாரடைப்பை தடுக்கும்

    உடலில் இரும்புச்சத்து அதிகமாக குவிந்து விட்டால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது. தொடர்ந்து ரத்த தானம் செய்து வருவது உடலில் இரும்பு சத்தை குறைக்கவும், அதனை சீராக நிர்வகிக்கவும் உதவும். எனவே அடிக்கடி ரத்த தானம் செய்வது மாரடைப்பு அபாயத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    2. புற்றுநோய் அபாயத்தை குறைக்கும்

    உடலில் அதிக அளவு இரும்புச்சத்து புற்றுநோயின் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும். ரத்த தானம் செய்வது இரும்பு அளவை பராமரிக்க உதவும். புற்றுநோய் செல்கள் உருவாகும் அபாயத்தையும் குறைக்கும். அதிலும் அடிக்கடி ரத்த தானம் செய்வது கல்லீரல், வயிறு, நுரையீரல், பெருங்குடல் மற்றும் தொண்டை புற்றுநோய் போன்ற முக்கியமான புற்றுநோய்களை நெருங்க விடாது.

    3. கல்லீரலை காக்கும்

    ரத்த ஓட்டத்தில் கலந்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுத்தன்மை கொண்ட பொருட்களை நீக்குவதே கல்லீரலின் முக்கியமான செயல்பாடாகும். ஆனால் கல்லீரலில் ஆக்சிஜனேற்றப்பட்ட இரும்புச்சத்து அதிகம் இருந்தால் அதனால் திறம்பட செயல்பட முடியாது. மேலும் அதிகப்படியான இரும்புச்சத்து செல் சேதத்துக்கும் வழிவகுக்கும். அதனால் கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படும். ரத்த தானம் செய்வதன் மூலம் உடலில் இருக்கும் அதிகப்படியான இரும்பை அகற்றுவதோடு கல்லீரலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.

    4. உடல் எடை குறைப்பு

    உடல் எடையை குறைப்பதிலும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்து வதிலும் ரத்த தானம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது 450 மில்லி லிட்டர் ரத்த தானம் செய்வது உடலில் 650 கலோரிகளை எரிக்கச் செய்யும். வழக்கமான உடற்பயிற்சி மற்றும் தினசரி உணவில் சத்தான உணவுகளை சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் எடையை சீராக பராமரிக்கலாம். மீண்டும் ரத்தம் உற்பத்தியாகுவதற்கும் வழிவகை செய்துவிடலாம்.

    5. புதிய ரத்த அணு உற்பத்தி

    ரத்த தானம் செய்வது புதிய ரத்த அணுக்களின் உற்பத்தியையும் ஊக்குவிக்கும். ரத்த தானம் செய்ததும் 48 மணி நேரத்திற்குள் எலும்பு மஜ்ஜையின் உதவியுடன் உடல் அமைப்பு துரிதமாக செயல்படத் தொடங்கும். 30 முதல் 60 நாட்களுக்குள் ரத்த சிவப்பணுக்கள் மாற்றப்பட்டு புதிய ரத்த அணுக்கள் உருவாக தொடங்கிவிடும்.

    Next Story
    ×