search icon
என் மலர்tooltip icon

    உலக கோப்பைச்செய்திகள்

    டான்டனில் நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் சதம் அடித்து அசத்தினார்.
    ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 17-வது லீக் ஆட்டம் டான்டனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.



    இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஆஸ்திரேலியா ஸ்கோர் சிறப்பான வகையில் உயர்ந்தது. ஆரோன் பிஞ்ச் 84 பந்தில் 82 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் 51 பந்தில் அரைசதம் அடித்த டேவிட் வார்னர் 102 பந்தில் 11 பவுண்டரி, 1 சிக்சருடன் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 107 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    ஓராண்டு தடைக்குப்பின் சர்வதேச போட்டியில் களம் இறங்கிய டேவிட் வார்னரின் முதல் சதம் இதுவாகும்.
    வர்ணனையின்போது நடுவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டாம் என்று ஐசிசி கேட்டுக்கொண்டதற்கு, ஹோல்டிங் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா இடையிலான போட்டியின்போது நடுவர்கள் ஏராளமான தவறுகள் செய்தனர். குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக நடுவர்கள் செயல்பட்டதால் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியை சந்திக்க நேர்ந்தது.

    நடுவர்கள் முடிவு குறித்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் மற்றும் பிராத் வைட் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர். போட்டியின்போது வர்ணனை செய்து கொண்டிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் ஹோல்டிங் ‘நடுவர்களின் முடிவு கொடூரமானது’ என்று தெரிவித்திருந்தார்.

    இதனால் ஐசிசி வர்ணனையாளர்கள் லைவ் போட்டியின்போது நடுவர்கள் குறித்து விமர்சனம் செய்யும்போது கவனமாக பேசவேண்டும் என்று கேட்டுக்கொண்டது. இதுகுறித்து மைக்கேல் ஹோல்டிங்கிற்கு இ-மெயில் அனுப்பியது.

    இதனால் கடுங்கோபம் அடைந்த அவர், கால்பந்து போட்டியாக இருந்திருந்தால் நடுவர் வீட்டுக்கு போய் இருப்பார். கிரிக்கெட்டில் நான் வீட்டிற்கு செல்ல வேண்டுமா? என்று காட்டமாக குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுகுறித்து மைக்கேல் ஹோல்டிங் கூறுகையில் ‘‘ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான போட்டியில் நடுவர்கள் செய்த தவறுகளை பிபா அம்பயர்கள் செய்திருந்தால், அவர்கள் வீட்டிற்கு சென்றிருப்பார்க்ள. அவர்கள் இன்னொரு உலகக்கோப்பைக்கான போட்டியில் நடுவராக செயல்பட முடியாது. ஒரு கிரிக்கெட்டராக, கிரிக்கெட் உயர்ந்த தரமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நடுவர்கள் தவறுகள் செய்தாலும், அவர்களை பாதுகாக்க வேண்டும் நோக்கம் உள்ளதா?.

    ஐசிசி கூறிய வேண்டுகோளில் எனக்கு உடன்பாடில்லை. இதனால் நான் அடுத்த போட்டிக்கு செல்வதற்குப் பதிலாக சொந்த நாடு திரும்ப வேண்டுமா? என்பதை தெரியப்படுத்துங்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.
    உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணியுடன் நாளை மோதும் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி பெறும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றனர்.
    நாட்டிங்காம்:

    12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் 10 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ரவுண்டு ராபின் முறையில் ஒரு ஆட்டத்தில் விளையாட வேண்டும். அதன்படி ஒவ்வொரு அணிக்கும் 9 ஆட்டம் இருக்கும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

    விராட்கோலி தலைமையிலான இந்திய அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 36 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.

    இந்திய அணி 3-வது ஆட்டத்தில் நியூசிலாந்தை நாளை (13-ந் தேதி) எதிர்கொள்கிறது. நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு இந்தப் போட்டி நடக்கிறது.

    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சம பலத்துடன் திகழும் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றியை பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

    நியூசிலாந்து அணி இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை. தான் மோதிய 3 ஆட்டத்திலும் வென்று இருந்தது. இதனால் அந்த அணியை வீழ்த்துவது சவாலாக விளங்கும்.

    ஆனால் அதே நேரத்தில் நியூசிலாந்து பெரிய அணிகளுக்கு எதிராக இந்த வெற்றியை பெறவில்லை. இதனால் நம்பிக்கையுடன் இந்திய அணி விளையாடும்.

    தொடக்க வீரர் தவான் காயம் அடைந்தது இந்திய அணிக்கு மிகப்பெரிய பாதிப்பாகும். பெருவிரலில் ஏற்பட்ட எலும்பு முறிவால் அவர் 2 போட்டிகளில் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் நாடு திரும்ப மாட்டார் என்பதால் மாற்று வீரர் அனுப்பப்படமாட்டார்.

    தவான் நாளைய போட்டியில் ஆட மாட்டார் என்பதால் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக லோகேஷ் ராகுல் விளையாடுகிறார். அவர் தற்போது 4-வது வரிசையில் விளையாடி வருகிறார்.

    இதனால் 4-வது வரிசையில் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் அல்லது விஜய் சங்கர் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

    தினேஷ் கார்த்திக் அனுபவம் வாய்ந்தவர். விஜய் சங்கர் ஆல்ரவுண்டர் வரிசையில் ஜொலிக்க கூடியவர். இருவரும் உலக கோப்பையில் இதுவரை விளையாடவில்லை.

    அதே நேரத்தில் ரவீந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு இருக்கிறது. ஆல்ரவுண்டரில் முத்திரை பதிக்கக்கூடியவர். மேலும் அனுபவம் வாய்ந்தவர். இதனால் ஜடேஜா முன்னுரிமையில் இருக்கிறார். ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து வீரர்கள் தேர்வு இருக்கும்.

    இந்திய அணியின் பேட்டிங் வலுவாக இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இதை காண முடிந்தது. ரோகித் சர்மா, கேப்டன் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, டோனி, ராகுல் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    இதேபோல பந்து வீச்சும் நேர்த்தியுடன் இருக்கிறது. வேகப்பந்தில் பும்ரா, புவனேஷ்வர்குமார் ஆகியோரும் சுழற்பந்தில் யசுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரும் திறமையாக வீசி வருகிறார்கள்.

    பந்து வீச்சாளர்கள் நல்ல நிலையில் இருப்பதால் அணியில் மாற்றம் செய்யப்படமாட்டாது. இதனால் முகமது சமிக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம். ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் கூடுதல் சாதகமாக இருந்தால் குல்தீப் யாதவ் இடத்தில் அவர் தேர்வாகலாம்.

    வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    அந்த அணி தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் வங்காள தேசத்தை 2 விக்கெட் வித்தியாசத்திலும், 3-வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.

    நியூசிலாந்து அணியின் பேட்டிங்கில் கேப்டன் வில்லியம்சன், காலின் முன்ரோ குப்பில் ஆகியோரும், பாபவசல் டிரான்ட் போல்ட், ஹென்றி, ஜேம்ஸ் நிசம் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    நியூசிலாந்து மிகப்பெரிய அணியுடன் தற்போது மோதுவதால் மிகவும் கவனத்துடன் விளையாடும். அதேநேரத்தில் இங்கிலாந்து போன்ற ஆடுகளங்களில் அந்த அணி வீரர்கள் திறமையாக ஆடக் கூடியவர்கள்.

    நாளைய ஆட்டத்திலும் மழை அச்சுறுத்தல் இருக்கிறது. பிற்பகல் மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இரு அணிகளும் கடைசியாக இந்த ஆண்டு ஜனவரி- பிப்ரவரி மாதம் நியூசிலாந்தில் ஒரு நாள் தொடரில் மோதின. இதில் இந்தியா 4-1 என்ற கணக்கில் தொடரை வென்று இருந்தது.
    நீண்ட நாட்கள் நடைபெறும் மிகப்பெரிய உலகக்கோப்பை தொடரில் ‘ரிசர்வ் டே’ என்பது மிகவும் சிக்கலான ஒன்று என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. பொதுவாக போட்டியை நடத்தும் நாட்டின் கோடைக்காலத்தை கணக்கில் கொண்டுதான் போட்டியின் அட்டவணை தயாரிக்கப்படும். அதன்படி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் ஜூன் முதல் ஜூலை மாதம் வரை கோடைக்காலமாகும்.

    இதனால் போட்டி அட்டவணை மே மாதம் 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை நடத்தப்படும் வகையில் அமைக்கப்பட்டது. ஆனால் பருவமற்ற கால மழையால் பிரிஸ்டோல், சவுத்தாம்ப்டன் போட்டிகளில் சில தடைபட்டுள்ளன. குறிப்பாக பாகிஸ்தான் விளையாட இருந்த இரண்டு ஆட்டங்கள் மழையால் கைவிடப்பட்டுள்ளன தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை மற்றும் வங்காள தேச அணிகளுக்கு தலா ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது.



    இதனால் மழையால் போட்டி தடைபட்டால் அடுத்த நாள் போட்டியை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

    இந்நிலையில் ‘ரிசர்வ் டே’ என்பது மிகவும் சிக்கலான ஒன்று என ஐசிசி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐசிசி-யின் தலைமை நிர்வாகி டேவிட் ரிச்சர்ட்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘ஒவ்வொரு போட்டிக்கும் ‘ரிசர்வ் டே’ உண்டு என்றால், முக்கியத்துவம் வாய்ந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நீண்டு கொண்டே செல்லும். நடைமுறையில் அது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும்’’ என்றார்.
    உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 17-வது லீக் ஆட்டம் டான்டனில் மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    ஆஸ்திரேலிய அணியில் ஸ்டாய்னிஸ்க்குப் பதிலாக ஷான் மார்ஷ் சேர்க்கப்பட்டுள்ளார்.
    ஐபிஎல் தொடரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்த டேவிட் வார்னர், உலகக்கோப்பையில் மந்தமாக விளையாடுவதற்கு இதுதான் காரணம் என ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலிய அணியின் தொடக்க பேட்ஸ்மேனான டேவிட் வார்னர் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடினார். அவர் 12 இன்னிங்சில் ஒரு சதம், 8 பவுண்டரிகளுடன் 692 ரன்கள் குவித்தார். சராசரி 69.20. ஸ்டிரைக் ரேட் 143.86 ஆகும்.

    ஆனால் உலகக்கோப்பையில் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கி வரும் டேவிட் வார்னரால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

    ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 114 பந்தில் 89 ரன்கள் சேர்த்தார். பவர் பிளே ஆன முதல் 10 ஓவரில் ஆஸ்திரேலியா 55 ரன்கள் சேர்த்தது. டேவிட் வார்னர் 32 பந்தில் 17 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஸ்டிரைக் ரேட் 50-க்கும் குறைவாகவே இருந்தது. இந்தியாவுக்கு எதிராக பவர்பிளேயில 34 பந்தில் 18 ரன்களே சேர்த்தார்.

    வார்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாதது திணறுகிறார் என்ற விமர்சனம் எழும்பியுள்ளது. ஆனால், ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான ஆரோன் பிஞ்ச் அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

    டேவிட் வார்னரின் ஸ்டிரைக் ரேட் குறைவாக இருப்பது குறித்து ஆரோன் பிஞ்ச் கூறுகையில் ‘‘ஐபிஎல் தொடருக்கும், உலகக்கோப்பை தொடருக்கும் முற்றிலும் வேறுபாடு உள்ளது. இந்திய ஆடுகளங்களில் காத்திருந்து பந்தை விரட்டுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால், இங்கிலாந்தில் உள்ள ஆடுகளத்தில் எல்லா ஓவர்களிலும் ‘க்ரீஸ்’க்கு வெளியில் வந்து பந்தை எளிதாக அடித்து விரட்ட முடியாது.

    உலகக்கோப்பையில் அனைத்து அணிகளிலும் உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர். கிளப் போட்டிகள் போன்று ஒரு பந்து வீச்சாளரை குறிவைத்து அதிரடியாக விளையாட முடியாது. ஒரு பந்து வீச்சாளரை தேர்வு செய்வது மிகவும் கடினம். ஒவ்வொரு அணியும் வலுவாக உள்ளது. இதனால் ஆட்டம் செல்வதை கணித்து அதற்கு ஏற்ப ஆட்டத்தை கொண்டு செல்வது எளிதான காரியம் அல்ல. தற்போது வரை டேவிட் வார்னரின் செயல்பாடு சிறப்பாகவே உள்ளது. இன்னும் அதிரடி ஆட்டத்தை மட்டும்தான் அவரால் வெளிப்படுத்தவில்லை.

    அவர் மெதுவாக விளையாடுவது அணியின் திட்டத்தில் ஒரு அம்சம் இல்லை. கடந்த இரண்டு போட்டிகளில், குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான போட்டியின்போது இந்தியாவின் பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. இதனால்தான் அவர் அடித்த பெரும்பாலான பந்துகள் பீல்டர் வசம் சென்றது. இதனால் டேவிட் வார்னர் மிகவும் ஏமாற்றம் அடைந்திருப்பார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த அவர் தனது மனநிலையை சற்று மாற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்’’ என்றார்.
    பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டாலும் எங்களுக்கு பாதிப்பு இருக்காது என்று ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இன்றுவரை 16 போட்டிகளில் நடைபெற்றுள்ளன. இதில் மூன்று போட்டிகளில் மழையால் கைவிடப்பட்டுள்ளது. நாளை பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டமும் மழையால் பாதிக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது.

    இந்நிலையில் மூன்று ஆட்டத்தில் இரண்டில் வெற்றி பெற்றுள்ள எங்களுக்கு, மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலும் அது எங்களை பாதிக்காது என்று ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஆரோன் பிஞ்ச் கூறுகையில் ‘‘அடுத்த இரண்டு மூன்று நாட்களில் வானிலை (Weather) மிகப்பெரிய பங்கு வகிக்கும் என்று நினைக்கிறேன். அடுத்த வாரம் வானிலை சிறப்பாக மாறிவிடும். அதன்பின் நாடு முழுவதும் உலகக்கோப்பை தொடர் தங்கு தடையின்றி சிறப்பாக நடக்கும்.

    உலகக்கோப்பையின் தொடக்கத்தில் வெற்றி பெறுவது முக்கியத்துவம் வாய்ந்தது. ஒன்றிரண்டு போட்டிகள் கைவிடப்பட்டு டாப் 4-ல் இருந்து பின் தங்குவதை எந்த அணியும் விரும்பாது. பாகிஸ்தான் மிகவும் அபாயகரமான அணி. நாளைய போட்டி மழையால் பாதிக்கப்பட்டாலும் எங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது’’ என்றார்.
    ‘ஜிங் பெய்ல்ஸ்’ குறித்து முன்னணி வீரர்கள் குறை கூறிய போதிலும், போட்டியின் பாதியில் ஏதும் செய்ய இயலாது என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
    கிரிக்கெட் போட்டியில் காலத்திற்கு ஏற்ப நவீன மாற்றங்களை ஐசிசி செய்து வருகிறது. இதனடிப்படையில்தான் ‘ஜிங் பெய்ல்ஸ்’ அறிமுகம் செய்யப்பட்டது.

    பந்து ஸ்டம்பை தாக்கியதும் ‘ஜிங் பெய்ல்ஸ்’ ஜொலிக்கும். அதேபோல் ஸ்டம்பும் பிளிங்க் ஆகும். ஆனால், சில நேரங்களில் ஸ்டம்பை பந்து தாக்கும்போது ‘ஜிங் பெய்ல்ஸ்’ ஜொலித்தாலும் ஸ்டம்பில் இருந்து பெய்ல்ஸ் கீழே விழுவதில்லை. இதனால் பேட்ஸ்மேன் அவுட்டில் இருந்து தப்பி விடுகிறார். ஆகவே சர்ச்சை எழுந்த வண்ணம் உள்ளது.

    தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பையில் இதுபோன்று ஐந்து முறைக்கு மேல் நடந்துள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான போட்டியில் கூட இதுபோன்று நடந்துள்ளது. வார்னர் 1 ரன் எடுத்திருந்த நிலையில் பும்ரா பந்தை எதிர்கொண்டார். அப்போது வார்னர் தடுத்தாடிய பந்து பின்னால் சென்று லெக் ஸ்டம்பை பலமாக தாக்கியது. ஆனால் ‘ஜிங் பெய்ல்ஸ்’ ஜொலிக்கவும் இல்லை. ஸ்டம்பும் பிளிங்க் ஆகவில்லை. இதனால், இந்திய அணி கேப்டன் விராட் கோலி, துணைக் கேப்டன் ரோகித் சர்மா ஏமாற்றம் அடைந்தனர்.

    இதுகுறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் வாகன் போன்றோர் கேள்வி எழுப்பினர்.

    இதனால் ‘ஜிங் பெய்ல்ஸ்’ மாற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், போட்டியின் பாதியில் மாற்றம் செய்தால் அது போட்டிக்கான கண்ணியத்தை விட்டுக்கொடுத்தது போன்றதாகிவிடும். அனைத்து போட்டிக்கும் ‘ஜிங் பெய்ல்ஸ்’தான் பயன்படுத்தப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து ஐசிசி கூறுகையில் ‘‘நாங்கள் போட்டியின் மத்தியில் எதையும் மாற்றமாட்டோம். அப்படி செய்தால் தொடரின் கண்ணியத்தை விட்டுக்கொடுத்ததாகி விடும். 10 அணிகள் விளையாடும் 48 போட்டிகளுக்கும் ஒரே மாதிரியான பெய்ல்ஸ்தான் பயன்படுத்தப்படும்.



    கடந்த நான்கு ஆண்டுகளாக ஸ்டம்புகள் மாற்றப்படவில்லை. 2015 ஆண்களுக்கான உலகக்கோப்பையில் இருந்து ஐசிசி நடத்தும் தொடர்களில் இவைகள்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1000 போட்டிகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை போட்டியின் ஒரு பகுதி’’ என்று தெரிவித்துள்ளது.
    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
    பிரிஸ்டோல்:

    இலங்கை - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 16-வது லீக் ஆட்டம் இன்று மதியம் 3 மணிக்கு பிரிஸ்டோலில் தொடங்குவதாக இருந்தது. இந்த போட்டிக்கான டாஸ் 2.30 மணிக்கு சுண்டப்பட்டிருக்க வேண்டும்.

    ஆனால் மழை பெய்து வருவதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நீண்ட நேரம் ஆகியும் மழை நிற்காததால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இலங்கை, வங்கதேசம் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

    இதேபோல், நேற்று நடைபெற இருந்த தென்ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது என்று குறிப்பிடத்தக்கது.
    ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஸ்டாய்னிஸ் காயம் அடைந்ததால், பாகிஸ்தானுக்கு எதிராக ஷான் மார்ஷ் களம் இறங்குகிறார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் இடம் பிடித்துள்ளார். இவர் ஆடும் லெவன் அணியில் இடம்பிடித்து விளையாடி வருகிறார்.



    நாளை ஆஸ்திரேலியா பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்காக ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது. இந்நிலையில் மார்கஸ் ஸ்டாய்னிஸ் இடுப்பு வலியால் (Side Strain) அவதிப்பட்டு வருகிறார். அதனால் ஸ்டாய்னிஸ்க்குப் பதிலாக ஷான் மார்ஷ் இடம் பிடிப்பார் என்று அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளார்.
    எங்களை வீழ்த்த வேண்டும் என இந்தியாவுக்கு அதிகப்படியான நெருக்கடி இருக்கும் என்று நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பெர்குசன் தெரிவித்துள்ளார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை நடந்து முடிந்த போட்டிகளில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மட்டுமே தோல்விகளை சந்திக்காத அணிகளாக உள்ளது. நியூசிலாந்து அணி விளையாடியுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி வாகை சூடியுள்ளது.

    அதேபோல் இந்திய அணி தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஆட்டம் நாளை மறுதினம் நாட்டிங்காமில் நடக்கிறது. இதில் வெற்றி பெற இரு அணிகளும் ஆர்வமாக இருக்கும் என்பதால் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் மழை குறுக்கிடாமல் இருந்தால் ரசிகர்கள் ஜோராக ரசிக்கலாம்.

    உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து இந்தியாவை வீழ்த்தியிருந்தது. இதற்கு பழி தீர்க்கும் வகையில் இந்தியா விளையாடும்.

    இந்நிலையில் எங்களை வீழ்த்த வேண்டும் என இந்தியாவுக்கு அதிகப்படியான நெருக்கடி இருக்கும் என நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் பெர்குசன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பெர்குசன் கூறுகையில் ‘‘இந்திய அணி வீரர்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒட்டுமொத்த இந்திய அணியில் ஏராளமான தரமான வீரர்களும், சில எதிர்பார்ப்புக்குரிய தனித்துவமான வீரர்களும் உள்ளனர். தொடர் வகையிலான கிரிக்கெட் (Tournament cricket) மிகவும் சுவாரஸ்யமான ஒன்று.

    எங்களை வீழ்த்த வேண்டும் என்று இந்தியாவுக்கு அதிகப்படியான நெருக்கடி இருக்கும். எல்லாத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்த விரும்பும். பயிற்சி ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாக விளையாடினோம். அதை வைத்து தொடரை கணக்கிடக்கூடாது. ஆனால், பயிற்சி ஆட்டத்தில் பெற்ற வெற்றியால் நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்.



    எங்களுடைய தொடக்க பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து ஸ்விங் செய்து விக்கெட்டுக்களை வீழ்த்தினால், மிடில் ஓவர்களில் என்னுடைய வேலை எளிதாக இருக்கும்.

    குறைந்த தூரம் கொண்ட பவுண்டரி லைன் மைதானத்தில் பந்து வீசுவது எளிதான காரியம் இல்லை. இருந்தாலும், போட்டி ரசிகர்களுக்கு மிகச்சிறந்த பொழுதுபோக்காக இருக்கும். நாட்டிங்காமில் இதற்கு முன் நடைபெற்ற இரண்டு பேட்டிகளிலும் அதிக அளவில் பவுன்ஸ் மற்றும் வேகம் இருந்தது. இது எனக்கு எப்போதுமே உதவியாக இருக்கும். வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர்கள் இங்குள்ள ஆடுகளத்தில் சிறப்பாக பந்து வீசினார்கள்’’ என்றார்.
    உலகக்கோப்பை தொடரில் விளையாடி வரும் இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மலிங்கா அவசரமாக இலங்கை திரும்புகிறார்.
    இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. உலகக்கோப்பைக்கான இலங்கை அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார். இன்று இலங்கை அணி வங்காள தேசத்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்காக மலிங்கா முழுவீச்சில் தயாராகி கொண்டிருந்தார்.

    இந்நிலையில் அவரது மாமியார் காலமாகிவிட்டதாக அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் இன்றைய போட்டி முடிந்த பின்னர் அவசரமாக இலங்கை திரும்புகிறார். பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த போட்டியில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து வந்து விடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×