search icon
என் மலர்tooltip icon

    உலக கோப்பைச்செய்திகள்

    நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் இந்தியா ஐந்து ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
    இந்தியா - நியூசிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டம் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 240 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    டிரென்ட் போல்ட், ஹென்ரி தொடக்க ஓவர்களை வீசினர். இருவரது பந்து வீச்சையும் எதிர்கொள்ள ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் திணறினர். 2-வது ஓவரை ஹென்ரி வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் ரோகித் சர்மா 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    ஹென்ரி

    அடுத்து வந்த விராட் கோலி 3-வது ஓவரின் 4-வது பநதில் எல்பிடபிள்யூ ஆனார். 4-வது ஓவரின் முதல் பந்தில் லோகேஷ் ராகுல் ஆட்டமிழந்தார். மூன்று பேரும் தலா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 3.1 ஓவரில் 5 ரன்னுக்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து திணறி வருகிறது.
    மான்செஸ்டர் அரையிறுதி போட்டியில் இந்தியாவுக்கு 240 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து.
    இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் அரையிறுதி ஆட்டம் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நேற்று தொடங்கியது. நியூசிலாந்து 46.1 ஓவரில் 211 ரன்கள் எடுத்திருக்கும்போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் அதன்பின் ஆட்டம் நடைபெறவில்லை.

    ‘ரிசர்வ் டே’யான இன்று ஆட்டம் தொடங்கியது. டெய்லர், லாதம் ஆட்டத்தை தொடங்கினர். பும்ரா, புவனேஷ்வர் பந்து வீசியதால் ஒன்றிரண்டு ரன்களாக திரட்டினர். அணியின் ஸ்கோர் 225 ரன்னாக இருக்கும்போது டெய்லரை மின்னல் வேகத்தில் ரன்அவுட் ஆக்கினார் ஜடேஜா. டெய்லர் 74 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

    ஜடேஜா

    புவனேஷ்வர் குமார் வீசிய 49-வது ஓவரில் டாம் லாதம் (10), ஹென்ரி (1) ஆகியோர் ஆட்டமிழந்தனர். பும்ரா வீசிய கடைசி ஓவரில் -- ரன்கள் அடித்தனர். இதனால் நியூசிலாந்து 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் அடித்துள்ளது. இன்று 23 பந்தில் 3 விக்கெட்டுக்களை இழந்து 28 ரன்கள் அடித்தது நியூசிலாந்து.

    பின்னர் 240 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.
    அரையிறுதியில் நியூசிலாந்து 250 ரன்கள் அடித்து டார்கெட் நிர்ணயித்தால் இந்திய அணி சேஸிங் செய்ய திணறும் என பிரெண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.
    இந்தியா - நியூசிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டம் நேற்று மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்றது. நியூசிலாந்து 46.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை பெய்தது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் நேற்று முழுவதும் ஆட்டம் நடைபெறவில்லை.

    இதனால் ‘ரிசர்வ் டே’யான இன்று போட்டி தொடர்ந்து நடைபெறுகிறது. மழை குறுக்கீடு இந்தியாவுக்கே சாதகம் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கையில், நியூசிலாந்து அணி முன்னாள் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம், 250 ரன்கள் டார்கெட்டாக நிர்ணயித்தால் இந்தியாவுக்கு சிக்கல்தான் என்று தெரிவித்துள்ளார்.

    டக்வொர்த் லீவிஸ் விதிப்படி நியூசிலாந்து பேட்டிங் செய்யாமல் இருந்தால், இந்தியா 20 ஓவரில் 148 ரன், 25 ஓவரில் 172, 30 ஓவரில் 192 ரன், 35 ஓவரில் 209, 40 ஓவரில் 223 ரன், 46 ஓவரில் 237 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது குறிப்பிடத்தக்கது.
    இந்தியா-நியூசிலாந்து மோதிய அரையிறுதி போட்டி மழையால் பாதிக்கப்பட்டதையடுத்து ஐசிசி கூறும் விதி என்ன என்பதை பார்க்கலாம்.
    இந்தியா-நியூசிலாந்து மோதிய அரையிறுதி போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால் ஐசிசி-யின் ரிசர்வ் டே விதிப்படி ஆட்டம் நடைபெற வாய்ப்பு உள்ளது.

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 46.1 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் சேர்த்திருந்தபோது மழை குறிக்கீட்டது. இதனால் ஆட்டம் பாதியில் தடைபட்டது.

    விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள்


    இதுபோன்ற முக்கியமான போட்டிகளில் மழை குறிக்கீடு செய்து ஆட்டம் தடைபட்டால் வெற்றி தோல்வி முடிவை நிர்ணயம் செய்ய மாற்றுநாள் எனப்படும் ரிசர்வ் டே என்ற முறையை ஐசிசி அறிமுகப்படுத்தியது.

    ஐசிசி-யின் ரிசர்வ் டே விதி கூறுவதாவது:-

    உலகக்கோப்பை தொடரின் முக்கிய போட்டிகள் மழையால் தடைபட்டால் ரிசர்வ் டே என்ற முறைப்படி ஆட்டம் வேறொரு நாளுக்கு மாற்றப்படும். மேலும் போட்டி கைவிடப்பட்ட அதே மைதானத்திலேயே  ஆட்டத்தில் மீதம் இருக்கும் ஓவரில் இருந்து வீசப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஐசிசி-யின் இந்த விதியின் மூலம் மழைகாரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான அரையிறுதி ஆட்டம் இன்று ஒருவேளை முடிவு தெரியாமால் கைவிடப்பட்டாலும் ரிசர்வ் டே முறைப்படி மீண்டும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.  

    இன்றைய நிலவரப்படி ஒருவேளை மழை முற்றிலும் நின்று ஆட்டம் மீண்டும் தொடர்ந்தால் டக்வொர்த் லீவிஸ் முறை பின்பற்றப்பட்டு இந்திய அணிக்கு 46 ஓவர்களில் 237 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்படும். ஒருவேளை நேரமின்மை காரணம் ஏற்பட்டால் ஆட்டம் 20-ஓவர்களாக குறைக்கப்படும். அவ்வாறு குறைக்கப்பட்டால் 148 ரன்கள் என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்படும்.
    பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் சீன வீராங்கனையை வீழ்த்தி சிமோனா ஹாலெப் அரையிறுதிக்கு முன்னேறினார்.
    விம்பிள்டன் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் நடைபெற்று வருகிறது. ஒரு ஆட்டத்தில் 7-ம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் தரநிலை பெறாத சீனாவின் ஷாங் சுவாய்-ஐ எதிர்கொண்டார்.

    இதில் சிமோனா ஹாலெப்பிற்கு ஷாங் கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் முதல் செட் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் ஹாலெப் 7(7)-6(4) என கைப்பற்றினார். 2-வது செட்டை சிரமமின்றி 6-1 என எளிதில் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    செரீனா வில்லியம்ஸ்

    மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் 11-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் சக நாட்டு தரநிலை பெறாத அலிசன் ரிஸ்க்-ஐ எதிர்கொண்டார்.

    முதல் செட்டை செரீனா வில்லியம்ஸ் 6-4 எனக் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை 4-6 என இழந்தார். வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் செரீனா ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6-3 எனக் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.
    நியூசிலாந்து 46.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருக்கும்போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு சாஹல் சேர்க்கப்பட்டார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முகமது ஷமிக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் இந்திய அணி நிர்வாகம் மீது டுவிட்டர்வாசிகள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

    நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில், நிக்கோல்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். புவனேஷ்வர் குமார், பும்ரா புதுப்பந்தில் இணைந்து வீசிய ஓவர்களை நியூசிலாந்து தொடக்க ஜோடி எதிர்கொள்ள திணறியது.

    14 பந்தில் ஒரு ரன் எடுத்த நிலையில் மார்ட்டின் கப்தில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து நிக்கோல்ஸ் உடன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. பவர் பிளேயான முதல் 10 ஓவரில் நியூசிலாந்து 27 ரன்களே எடுத்திருந்தது.

    அணியின் ஸ்கோர் 69 ரன்னாக இருக்கும்போது நிக்கோல்ஸ் ஜடேஜா பந்தில் க்ளீன் போல்டானார். அவர் 51 பந்தில் 28 ரன்கள் சேர்த்தார்.

    3-வது விக்கெட்டுக்கு கேன் வில்லியம்சன் உடன் ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நியூசிலாந்தை ஆபத்தில் இருந்து மீட்டது. மிடில் ஓவர்களில் இந்த ஜோடியை வீழ்த்த இந்திய பந்து வீச்சாளர்கள் திணறினார்கள். நியூசிலாந்து 28.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.

    கேன் வில்லியம்சன் 79 பந்தில் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினார். அப்போது 67 ரன்கள் எடுத்திருந்தது நிலையில் சாஹல் பந்தில் ஆட்டமிழந்தார். கேன் வில்லியம்சன் 95 பந்தில் 6 பவுண்டரியுடன் இந்த ரன்னை எடுத்தார்.

    கேன் வில்லியம்சன்

    கேன் வில்லியம்சன் - ராஸ் டெய்லர் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்தது. கேன் வில்லியம்சன் ஆட்டமிழந்ததும், ராஸ் டெய்லர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவர் 73 பந்தில் அரைசதம் அடித்தார். நீஷம் (12), கிராண்ட்ஹோம் (16) விரைவில் ஆட்டமிழக்க நியூசிலாந்து சற்று நெருக்கடிக்குள்ளானது.

    நியூசிலாந்து அணி 46.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருக்கும்போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
    மான்செஸ்டர் போட்டியில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 67 ரன்னில் ஆட்டமிழந்ததால், இந்திய பந்து வீச்சாளர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.
    இந்தியா - நியூசிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டத்தில் மார்ட்டின் கப்தில் 1 ரன்னில் ஆட்டமிழந்ததும்  நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் களம் இறங்கினார். ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த நிலையில், கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.

    அவர் தொடர்ந்து விளையாடினால் நியூசிலாந்தின் ஸ்கோர் 250 ரன்களை தாண்டும் என்ற நிலை இருந்தது. அந்த நிலையில் சாஹல் வீசிய 36-வது ஓவரின் 2-வது பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

    அவர் ஆட்டமிழக்கும்போது நியூசிலாந்து 134 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் இந்திய பந்து வீச்சாளர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். அவர் சதம் அடித்திருந்தால் இந்தியாவுக்கு பாதகமாக அமைந்திருக்கும்.
    அரையிறுதியில் சேஸிங்கை கண்டு பயப்படவில்லை என இங்கிலாந்து பயிற்சியாளர் பெய்லிஸ் ஆஸ்திரேலியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    இங்கிலாந்து அணி அதன் சொந்த மைதானத்தில் சேஸிங் செய்வதில் கிங்காக திகழ்ந்தது. இதனால் பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக இங்கிலாந்து சேஸிங் செய்தது.

    இங்கிலாந்து எளிதாக சேஸிங்  செய்துவிடும் என்ற நிலையில் பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சேஸிங் செய்ய முடியாமல் தோல்வியை சந்தித்தது.

    இதனால் அரையிறுதிக்கான வாய்ப்பில் சிக்கல் ஏற்பட்டது.  அதன்பின் சுதாரித்துக் கொண்டு இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வெற்றி பெற்றது. இதன்மூலம் அரையிறுதிக்கு முன்னேறியது.

    ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் சேஸிங் செய்த இங்கிலாந்து 221 ரன்னில் சுருண்டது.

    இரண்டு அணிகளும் அரையிறுதியில் மோதுகின்றன. அப்போது டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் கேட்டால் இங்கிலாந்து மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்யும் நிலை ஏற்படும்.

    அந்த சூழ்நிலை வந்தால் எங்கள் வீரர்கள் சேஸிங்கை கண்டு பயப்படவில்லை என இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பெய்லிஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பெய்லிஸ் கூறுகையில் ‘‘கடந்த நான்கு ஆண்டுகளில் நாங்கள் கடைசி 17 ஆட்டங்களில் 14 முறை சேஸிங்கில் வெற்றி பெற்றுள்ளோம். ஆகவே, எங்கள் வீரர்கள் சேஸிங்கை கண்டு பயப்படவில்லை.  இந்தத் தொடர் தொடங்கியபோது இருந்து ஆடுகளங்களை விட தற்போது சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது. நாங்கள் முழு நம்பிக்கையுடன் அரையிறுதி ஆட்டத்தை மகிழ்ச்சியாக எதிர்கொள்ள இருக்கிறோம்’’ என்றார்.
    அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி 6-வது முறையாக உலகக்கோப்பையை வெல்வோம் என்று ரிக்கி பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணிதான் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    அதேவேளையில் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியிருந்ததால், அரையிறுதி ஆட்டத்திலும் வெற்றி பெறுவோம் என்று ஆஸ்திரேலிய வீரர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.

    இந்நிலையில் இங்கிலாந்தை அரையிறுதியில் வீழ்த்தி 6-வது முறையாக உலகக்கோப்பையை வெல்வோம் என்று அந்த அணியின் பேட்டிங் ஆலோசகராக பணிபுரியும் ரிக்கி பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில் ‘‘உலகக்கோப்பையில் வீரர்கள் காயம் அடைவது வழக்கத்திற்கு மாறானது என்று கூற முடியாது. என்றாலும் கவாஜா, ஸ்டாய்னிஸ் அரையிறுதிக்கு முந்தைய ஆட்டத்தின் போது காயத்திற்கு உள்ளாது சற்று மாற்றத்தை ஏற்படுத்தும்.

    உலகக்கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டிக்குச் செல்லும்போது இதுபோன்ற காயம் சிறந்ததாக இருக்காது.

    உலகக்கோப்பை லீக் சுற்றில் ஏற்கனவே நாங்கள் இங்கிலாந்தை வீழ்த்தியிருக்கிறோம். இந்த நாள் வரை நாங்கள் உலகக்கோப்பையில் தலைசிறந்த அணியாக இருக்கிறோம். கடைசி லீக்கில் தென்ஆப்பிரிக்காவிடம் தோற்றது சிறந்தது அல்லது. அதேபோல் மோசமான விஷயமும் அல்ல.

    அது எங்களுக்கான எச்சரிக்கையாகும். லீக் ஆட்டத்திற்குப் பிறகு சில நாட்கள் ஓய்வு கிடைத்துள்ளது. ஓய்வு நேரத்தை சிறப்பாக பயன்படுத்தி சிறந்த அணியாக உருவாகி, அரையிறுதியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். இங்கிலாந்தை தோற்கடிக்க வீரர்கள் அடுத்த லெவல் வழிகளை கண்டுபிடித்துள்ளனர். நாங்கள் 6-வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றுவோம்’’ என்றார்.
    மான்செஸ்டர் அரையிறுதி ஆட்டத்தில் முதல் 10 ஓவரில் நியூசிலாந்து ஒரு விக்கெட் இழப்பிற்கு 27 ரன்கள் எடுத்துள்ளது.
    இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் அரையிறுதி ஆட்டம் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் குல்தீப் யாதவுக்குப் பதிலாக சாஹல் சேர்க்கப்பட்டார். முகமது ஷமிக்கு இடமில்லை.

    மார்ட்டின் கப்தில், ஹென்ரி நிக்கோல்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை புவி வீசினார். முதல் பந்தை மார்ட்டின் கப்தில் எதிர்கொண்டார். பந்து கால் பேடை தாக்கியது. இந்திய வீரர்கள் அப்பீல் கேட்க நடுவர் விக்கெட் கொடுக்க மறுத்துவிட்டார்.

    இதனால் இந்தியா ரிவியூ கேட்டது. பந்து லெக் ஸ்டம்பிற்கு வெளியில் சென்றதால் இந்தியாவின் ரிவியூ முதல் பந்திலேயே பறிபோனது. புவி வீசிய முதல் ஓவரிலும், பும்ரா வீசிய 2-வது ஓவரிலும் நியூசிலாந்து ரன்ஏதும் அடிக்கவில்லை. புவனேஷ்வர் குமார் வீசிய 3-வது ஓவரின் 5-வது பந்தில்தான் நியூசிலாந்து முதல் ரன்னை அடித்தது.

    பும்ரா

     4-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் மார்ட்டின் கப்தில் ஆட்டமிழந்தார். அடுத்து கேன் வில்லியம்சன் களம் இறங்கினார். இவர் நிக்கோல்ஸ் உடன் இணைந்து தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் ஸ்கோர் மந்த நிலையில் சென்றது.

    பும்ரா மற்றும் புவி  இணைந்து முதல் 9 ஓவரில் 23 ரன்களே விட்டுக்கொடுத்தனர். 10-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். இந்த ஓவரில் நியூசிலாந்து நான்கு ரன்கள் சேர்க்க பவர்பிளேயான முதல் 10 ஓவரில் நியூசிலாந்து ஒரு விக்கெட் இழப்பிற்கு 27 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. 
    உலகக்கோப்பைக்கான முதல் அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. இதில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    இந்திய அணியில் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு சாஹல் சேர்க்கப்பட்டுள்ளார். முகமது ஷமிக்கு இடமில்லை.
    எங்களுக்கு எதிரான 2-வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்குதான் நெருக்கடி என்று ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் தெரிவித்துள்ளார்.
    உலகக்கோப்பை போட்டியில் 2-வது அரைஇறுதி 11-ந்தேதி எட்ஜ்பாஸ்டனில் நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இங்கிலாந்துக்கு எதிரான  போட்டி குறித்து ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் கூறியதாவது:-

    இங்கிலாந்து அணியில் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக இங்கிலாந்து ‘நம்பர் 1’ அணியாக உள்ளது. இந்த உலககோப்பை தொடரில் அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்என்று பலரும் சொல்கிறார்கள்.

    அதைவைத்து பார்த்தால் எங்கள் மீது எந்தவித அழுத்தமும் கிடையாது. அவர்கள் (இங்கிலாந்து) தோல்வி அடைந்தால் இழக்க நிறைய இருக்கிறது. எனவே இங்கிலாந்து அணி மீது நெருக்கடி உள்ளது.

    இந்த அரைஇறுதி போட்டியின் முடிவு ஆஷஸ் தொடருக்கு முன்னோட்டமாக இருக்கும். வருகிற 14-ந்தேதி நடக்கும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய விளையாடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் புகழ் ஆஷஸ் தொடருக்கு முன்பாக இருஅணி வீரர்களும் வார்த்தை போர்களில் ஈடுபடுவது வழக்கம். அதுபோன்று ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் தற்போது கருத்தை தெரிவித்துள்ளார்.
    ×