search icon
என் மலர்tooltip icon

    கர்நாடகா

    • இரு வீட்டார் சம்மதத்துடன் நேற்று காலை திருமணம் நடந்தது.
    • 2 பேரும் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கி கொண்டனர்.

    பெங்களூரு:

    கர்நாடகாவின் கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் ஆண்டர்சன்பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கெம்பாபுராவை அடுத்த செம்பரகானஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 30). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    அதே பகுதியை சேர்ந்தவர் லிகிதா ஸ்ரீ (20). இவர்கள் 2 பேரும் காதலித்தனர். இரு வீட்டார் சம்மதத்துடன் நேற்று காலை திருமணம் நடந்தது.

    இதையடுத்து மதியம் புதுமணத்தம்பதிகளை முனியப்பபாவின் வீட்டில் இருந்த ஒரு அறையில் தனியாக வைத்தனர். அப்போது தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கி கொண்டனர். 2 பேரும் ரத்த காயத்தில் சுருண்டு விழுந்து கிடந்தனர். இதையடுத்து குடும்பத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் லிகிதா ஸ்ரீ உயிரிழந்தார். இதையடுத்து குடும்பத்தினர் நவீன் குமாரை மீட்டு கோலார் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு நவீன் குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விசாரணையில் திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் 2 பேருக்கும் இடையே கருத்துவேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. இதில் அவர்கள் 2 பேரும் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கி கொண்டனர்.

    இதில் கத்திக்குத்து காயம் அடைந்த லிகிதா ஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நவீன் குமார் படுகாயம் அடைந்தது தெரியவந்தது. தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். புதுமண தம்பதி இடையே ஏற்பட்ட தகராறுக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து ஆண்டர்சன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமான சில மணி நேரத்திலேயே புதுமண தம்பதிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில், காதல் மனைவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வாகனம் அம்மாநிலத்தில் 21 முறை விதிமீறல்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
    • ஜூலை 14 அன்று அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது.

    கர்நாடக மாநிலத்தில் அரசு வாகனத்திற்கு ரூ.18 ஆயிரம் அபாரதம் விதிக்கப்பட்ட சம்பவம் பேசுபொருளாகி இருக்கிறது. போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கு இ சல்லான் முறையில் அபராதம் வசூலிக்கும் திட்டம் கர்நாடக மாநிலத்தில் நீண்ட காலமாக அமலில் இருந்து வருகிறது.

    அந்த வரிசையில், அம்மாநிலத்தின் அரசு பயன்பாட்டிற்காக KA-01-G-6601 என்ற பதிவு எண் கொண்ட வாகனம் வழங்கப்பட்டு இருந்தது. இந்த வாகனம் அம்மாநிலத்தில் 21 முறை விதிமீறல்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

    இதனையடுத்து அந்த வாகனத்திற்கு அபராதத் தொகையாக ரூ.18 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மீறல்களும் 2 மாதங்களுக்குள் (ஜூலை, ஆகஸ்ட்) பதிவு செய்யப்பட்டுள்ளன. விதிமீறல்களுக்கு ஒவ்வொரு வாகனத்திற்கும் தலா ரூ. 1,000 அல்லது ரூ. 500 விதிக்கப்படுகிறது.

    கர்நாடக காவல்துறையால் தொடங்கப்பட்ட இ-சலான் (https://echallan.ksp.gov.in/) இணையதளத்தின் தரவுகளின்படி, இந்த வாகனம் பல முறை விதிமீறல்களில் ஈடுபட்டு வந்தது கண்டறியப்பட்டுள்ளது.

    ஜூலை 14 அன்று அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது. அடுத்த சில நாட்களில், சித்தலிங்கபுராவில் ஜூலை 18 அன்று சீட்பெல்ட் அணியாமல் சென்றது, மதநாயக்கனஹள்ளி மற்றும் கெஜ்ஜலகெரே கேஎம்எஃப் போன்ற பல்வேறு இடங்களில் அதிவேகமாக சென்றது உட்பட பல விதிமீறல்கள் ஏற்படுத்தி இருக்கிறது.

    இதே போன்று தொடர் விதிமீறல்கள், போக்குவரத்துச் சட்டங்களைக் கடைப்பிடிப்பதில் உள்ள குறைபாட்டை காட்டுகின்றன. மேலும் விதிமீறல்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்ற அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதிய பாலம் கட்டப்பட்டு போக்குவரத்து நடந்து வந்தது.
    • இரவு நேரத்தில் இந்த பாலம் இடிந்து விழுந்ததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் கார்வார் என்ற பகுதியில் ஆற்றின் குறுக்கே கடந்த 1983-ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் வழியாக கோவா செல்லும் வாகனங்கள் சென்று வந்தது. இந்த நிலையில் பாலம் பழமையானதால் கடந்த 2009-ம் ஆண்டு இந்த பாலத்தை சீரமைக்க முடிவு செய்தனர். ஆனால் அந்த பணி சாத்தியப்படவில்லை. இதனால் பாலத்தின் பாதி பகுதி மட்டும் சீரமைக்கப்பட்டது. இதற்கிடையே இந்த பாலத்திற்கு மாற்றாக அதே பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு புதிய பாலம் கட்டப்பட்டு போக்குவரத்து நடந்து வந்தது.

    இந்த நிலையில் நள்ளிரவு 1 மணியளவில் பழைய பாலம் வழியாக ஒரு லாரி ஆற்றை கடந்த போது திடீரென பாலம் இடிந்து ஆற்றில் விழுந்தது. இதில் லாரியும் ஆற்றில் கவிழ்ந்தது. இதுப்பற்றி தெரியவந்ததும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் லாரி டிரைவரை பத்திரமாக மீட்டனர்.


    இதையடுத்து அந்த பகுதியில் உள்ள புதிய பாலத்திலும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கார்வார்-கோவா இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆற்றில் இடிந்து விழுந்த பாலத்தை பார்க்க பொதுமக்கள் அதிகளவில் வந்து கொண்டு இருந்தனர்.

    இதனால் முன்எச்சரிக்கையாக ஆற்றுபகுதிக்கு பொதுமக்கள் வருவதை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இரவு நேரத்தில் இந்த பாலம் இடிந்து விழுந்ததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுப்பற்றி தெரியவந்ததும் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • முடா ஊழல் குற்றச்சாட்டில் சித்தராமையா பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்.
    • சித்தராமையாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே செயல்பட்டு வருகிறார்கள்- டிகே சிவக்குமார்

    கர்நாடாக மாநில முதல்வராக இருக்கும் சித்தராமையா முடா ஊழல் வழக்கில் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகியவை வலியுறுத்தி வருகின்றன. மேலும், மைசூரு நோக்கி நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கு பதிலடியாக காங்கிரஸ் கட்சி பொதுகூட்டங்களை நடத்தி வருகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளை விமர்சனம் செய்து வருகின்றனர்.

    அவ்வாறு நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் வீடியோவை வெளியிட்டு பாஜகவும், மதசார்பற்ற கட்சியும் ஒருவருக்கொருவர் பேசியதை சுட்டிக்காட்டி டிகே சிவக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

    இது தொடர்பாக டிகே சிவகுமார் கூறும்போது "காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் யுக்திகள் வேலை செய்யாது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சிதான் கர்நாடக மாநிலத்தில் ஆட்சி செய்யும்.

    கடந்த வருடம் மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகியவை தனித்தனியாக போட்டியிட்டன. மக்களவை தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் மதசார்பற்ற ஜனதா தளம் இணைந்தது.

    எதிர்க்கட்சிகள் சந்தர்ப்பவாதிகளின் கூட்டம். பழைய எதிரிகள் நண்பர்களாகிவிட்டார்கள். பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் விரும்பத்தக்க பதவியை வகிப்பதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாததால், சித்தராமையாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே செயல்பட்டு வருகிறார்கள். மக்கள் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.

    நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது காவிரி பிரச்சனை மற்றும் மேகதாது தொடர்பாக பேரணி நடத்தினோம். பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டோம். பாஜக தற்போது அதை காப்பி அடிக்கிறது. எதிர்க்கட்சிகளின் இந்த நடைபயணம், தங்கள் பாவங்களையும், பெரும் ஊழலையும் கழுவுவதற்கான ஒரு பிராயச்சித்தம் அணிவகுப்பு

    இவ்வாறு டிகே சிவக்குமார் தெரிவித்தார்.

    • சிறுவனின் கை கால்களை கட்டி 3 நாட்களாக அறையில் கட்டி வைத்து பெல்ட்டாலும் விறகுக் கட்டையால் தொடர்ந்து தாக்கியுள்ளனர்
    • யாக்திர் [Yagdir] பகுதியில் உள்ள ரெயில் நிலையதிற்கு அழைத்துச்சென்று அங்குப் பிச்சையெடுக்க வைத்தனர்.

    ராமகிருஷ்ண ஆசிரமப் பள்ளியில் தங்கி பயின்று வரும் 3 ஆம் வகுப்பு மாணவன் பேனா திருடியதாகக் கூறி ஆசிரியரால் அடித்துச் சித்திரவதை செய்யப்பட்டு ரெயில் நிலையத்தில் பிச்சையெடுக்க வைக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

    கர்நாடகா மாநிலம் ராய்ச்சூரில் இயங்கி வரும் ராமகிருஷ்ண ஆசிரமத்தில் குடும்ப வறுமை காரணமாக தங்கி படித்து வரும் 3 வகுப்பு வகுப்பு சிறுவன் தருண் குமார். இவனது அண்ணன் அருண் அங்கு 5 ஆம் வகுப்பு படித்து வருகிறான்.

    இந்நிலையில் தருண் பேனாவைத் திருடியதாக சக மாணவர்கள் குற்றம்சாட்டிய நிலையில், ஆசிரம பொறுப்பாளர் வேணுகோபால் மற்றும் அவரது சகாக்கள், சிறுவனின் கை கால்களை கட்டி 3 நாட்களாக அறையில் கட்டி வைத்து பெல்ட்டாலும் விறகுக் கட்டையால் தொடர்ந்து தாக்கியுள்ளனர். இதுகுறித்து சிறுவன் கூறுகையில், அவர்கள் தன்னை விறகுக் கட்டையால் அடித்தனர்.

    அது உடைந்ததும் கிரிக்கெட் பேட்டால் என்னை அடிக்கத்தொடங்கின்றனர். எனது உடலில் வெட்டுக் காயங்களை ஏற்படுத்தினர். என்னை யாக்திர் [Yagdir] பகுதியில் உள்ள ரெயில் நிலையதிற்கு அழைத்துச்சென்று அங்குப் பிச்சையெடுக்க வைத்தனர். ஆனால் காசு எதுவும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளான்.

    சிறுவனின் தாய் மகன்களை பார்க்க பள்ளிக்கு வந்த போது 5 ஆம் வகுப்பு படிக்கும் மூத்த மகன் அருண் மூலம் இந்த விஷயத்தை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். கண்கள் வீங்கிய நிலையில் தனது மகனைப் பார்த்து அவர் நிலைகுலைந்து போனார். குழந்தைகள் நல செயல்பாட்டாளர் மூலம் சிறுவன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  

    • நல்ல காலணிகளை மட்டுமே திருடிச் செல்வது வீடியோவில் பதிவாகியுள்ளது.
    • இந்த வீடியோ 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

    பெங்களூரு நகரில் திருடன் ஒருவர் அடுக்குமாடிக் குடியிருப்பில் புகுந்து காலணிகளை திருடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    அந்த வீடியோவில், முகமூடி அணிந்த திருடன் ஒவ்வொரு ஜோடி காலணிகளையும் சோதித்து நன்றாக உள்ளதா என்று பார்த்து நல்ல காலணிகளை மட்டுமே திருடிச் செல்வது பதிவாகியுள்ளது.

    இந்த சம்பவம் நடந்த இடம் மற்றும் நேரம் சரியாக தெரியவில்லை. ஒரு மாதத்திற்கு முன்பு இணையத்தில் வெளியான இந்த வீடியோ 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

    இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து பெங்களூரு நகரின் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்றும் காவல்துறை இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    • வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
    • காங்கிரஸ் சார்பில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று ராகுல்காந்தி தெரிவித்தார்.

    வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.

    இதையடுத்து இப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் சார்பில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று முன்னாள் வயநாடு எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்தார்.

    இந்நிலையில், வயநாடு நிலச்சரிவு பேரிடரில் பாதிக்கப்பட்டோரின் துயர் துடைக்கும் விதமாக, 100 வீடுகள் கர்நாடக அரசு சார்பில் கட்டித்தரப்படும் என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

    வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    • மூடா ஊழல் கர்நாடக அரசியலில் விசுவரூபம் எடுத்து உள்ளது.
    • வால்மீகி முறைகேடு தொடர்பாக அமைச்சராக இருந்த நாகேந்திர கவுடா பதவி விலகினார்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியில் வால்மீகி வளர்ச்சி வாரியம், மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) முறைகேடுகள் நடந்து உள்ளது. கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதி, மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) சார்பில் சட்டவிரோதமாக 14 வீட்டுமனைகளை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    வால்மீகி முறைகேடு தொடர்பாக அமைச்சராக இருந்த நாகேந்திர கவுடா பதவி விலகினார். மேலும் அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த நிலையில் மூடா ஊழல் கர்நாடக அரசியலில் விசுவரூபம் எடுத்து உள்ளது.

    இதுதொடர்பாக சமூக ஆர்வலர் ஆப்ரகாம் என்பவர் அளித்த புகாரின் பேரில், கவர்னர் தாவர்சந்த் கெலாட், இந்த முறைகேடு புகாரில் உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என கேள்வி எழுப்பி முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு கவர்னர் நோட்டீசு அனுப்பியதை கண்டித்தும், இந்த நோட்டீசை திரும்ப பெற வலியுறுத்தியும் மந்திரிசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் பற்றி கவர்னருக்கு அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது.


    இந்த விவகாரத்தில் கவர்னர் தாவர்சந்த் கெலாட், சித்தராமையாவுக்கு எதிராக விசாரணை நடத்த முடிவு எடுப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. அதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

    இதற்கிடையே மூடா ஊழல் தொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா பதவி விலக கோரி பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியான மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியினர் இன்று முதல் நடைபயணம் தொடங்கப்படும் என்று அறிவித்தனர். அதன்படி இன்று கெங்கேரியில் நடைபயணம் தொடங்கியது. இதில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஜக, மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியினர் ஊர்வலமாக சென்றனர். கெங்கேரியில் தொடங்கிய நடைபயணம் இன்று 16 கி.மீட்டர் தூரம் நடைபெறுகிறது. நாளை (4-ந் தேதி) பிடாதியில் உள்ள மஞ்சுநாதா கன்வென்ஷன் ஹாலில் தொடங்கி 22 கி.மீட்டர் வரை நடக்கிறது. தொடர்ந்து 5-ந் தேதி கெங்கல் கே.வி.கே. கன்வென்ஷன் ஹாலில் இருந்து 20 கி.மீட்டர் தூரமும், 6-ந் தேதி நிடகட்டா சுமித்ராதேவி மாநாட்டு அரங்கில் இருந்து 20 கி.மீட்டரும், 7-ந் தேதி மாண்டியாவில் உள்ள சஷிகிரண் கன்வென்ஷன் ஹாலில் இருந்து 16 கி.மீட்டரும், 8-ந் தேதி துபினகரே தொழிற்பேட்டை அருகே இருந்தும், ஆகஸ்டு 9-ந் தேதி ஸ்ரீரங்கத்தில் உள்ள மஞ்சுநாதா கல்யாண மண்டப வளாகத்தில் இருந்தும் நடைபயணம் தொடங்குகிறது. 10-ந் தேதி இந்த நடைபயணம் மைசூரு சென்றடைகிறது. சுமார் 140 கி.மீட்டர் தூரம் இந்த நடைபயணம் நடக்கிறது. பின்னர் மைசூருவில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளனர். எதிர் கட்சிகளின் இந்த போராட்டத்தால் கர்நாடக அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல 4-வது திட்டத்திற்காக இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
    • இதில் கிடைக்கும் அனுபவம், இந்தியாவின் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.

    பெங்களூரு:

    இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    மனித விண்வெளி விமான மையமும், அமெரிக்காவின் ஆக்சிம் விண்வெளி நிறுவனமும் விண்வெளி விமான ஒப்பந்தம் ஒன்றை போட்டுள்ளது. இந்தியா-அமெரிக்கா மிஷன் திட்டத்தன்படி, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல 4-வது திட்டத்திற்காக இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்திற்காக இந்தியாவின் தேசிய திட்ட நிர்ணய வாரியம், 2 விண்வெளி வீரர்களின் பெயர்களை பரிந்துரை செய்துள்ளது. அதாவது விண்வெளி வீரர்கள் குழு கேப்டன் சுபான்சு சுக்லா (முதன்மை) மற்றும் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளன. அவர்களுக்கான பயிற்சி இந்த வாரத்தில் தொடங்கும். இதில் கிடைக்கும் அனுபவம், இந்தியாவின் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    விண்வெளி வீரர்கள் சுபான்சு சுக்லா, பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் ஆகியோர் இந்தியாவின் ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்லும் வீரர்களாக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கவர்னர் நோட்டீஸை திரும்பப் பெற வேண்டும் என கேபினட் கூட்டத்தில் முடிவு.
    • கவர்னர் நடவடிக்கை சட்டவிரோதம், அரசியலமைப்பிற்கு எதிரானது.

    கர்நாடக மாநிலத்தில் முடா மோசடி வழக்கு விசுவரூபம் எடுத்துள்ளது. சித்தராமையா மனைவிக்கு மனை ஒதுக்கியதில் 4 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் ஊழல் நடைபெற்றிருப்பதாக பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் குற்றம்சாட்டி வருகின்றன.

    இது தொடர்பாக வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான டி.ஜே. ஆப்ரஹாம் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் அடிப்படையில் தங்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏன் அனுமதி வழங்கக் கூடாது? இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என கர்நாடக மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் நோட்டீஸ் அனுப்பினார்.

    இந்த நோட்டீஸ் தொடர்பாக கர்நாடக மாநில கேபினட் ஆலோசனை நடத்தியது. கவர்னர் நோட்டீஸை திரும்பப்பெற வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் மத்திய அரசு மற்றும் பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கைப்பாவை என கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா கடுமையாக விமர்சித்துள்ளார். கவர்னர் நோட்டீஸ் அனுப்பியது சட்டவிரோதம். அரசியலமைப்பிற்கு எதிரானது எனவும் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தாங்கள் அனைத்து நிலுவையையும் ஏற்கனவே செலுத்திவிட்டதாகவும், மேற்கூறிய பரிவர்த்தனைகள் ஜிஎஸ்டி வரம்புக்குள் வராது என்றும் தெரிவித்துள்ளது.
    • வரி செலுத்துவோரை ஏய்ப்பதற்கு ஜிஎஸ்டி அமைப்பு அவர்க்ளின் வியாபாரத்தில் தலையிட்டு கற்பனைக்கு எட்டாத விஷயங்களைச் செய்து வருகிறது'

    பெங்களூரில் இயங்கி வரும் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்திடம், ரூ.32,000 கோடி  ஜிஎஸ்டி வரி கேட்டு pre-show cause நோட்டீஸ் அனுப்பப்பட்ட சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

    கர்நாடகாவில் உள்ள Directorate General of GST Intelligence (DGGI) அனுப்பப்பட்ட இந்த நோடீசில், இன்போசிஸ் லிமிடட் நிறுவனத்தின் வெளிநாடு கிளைகளில் 2017 ஜூலை முதல் 2022 மார்ச் வரையிலான காலகட்டத்தில் நடந்த பரிமாற்றத்தில் ரூ.₹32,403 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளது என்றும் அந்த தொகையை தற்போது செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதற்குப் பதிலளித்துள்ள அந்நிறுவனம், தாங்கள் அனைத்து நிலுவையையும் ஏற்கனவே செலுத்திவிட்டதாகவும், மேற்கூறிய பரிவர்த்தனைகள் ஜிஎஸ்டி வரம்புக்குள் வராது என்றும் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து இன்போசிஸ் முன்னாள் போர்டு உறுப்பினரும் தலைமை நிதி அலுவலருமான மோகன்தாஸ் பாய் தனது எக்ஸ் பாகத்தில், 'இது இருப்பதிலேயே மோசமான வரி விதிப்பு பயங்கரவாதம் 'tax terrorism' என்று விமர்சித்துள்ளார். வரி செலுத்துவோரை ஏய்ப்பதற்கு ஜிஎஸ்டி அமைப்பு அவர்களின் வியாபாரத்தில் தலையிட்டு கற்பனைக்கு எட்டாத விஷயங்களைச் செய்து வருகிறது' என்று அவர் தெரிவித்துள்ளார்.

     

    எனவே இந்திய ஐடி தொழில்நுட்பத்துக் கூட்டமைப்பான Nasscom இதில் தலையிட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். மேலும் இதுபோன்ற அச்செயல்கள் இந்தியாவில் முதல்வீடு செய்வதற்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கண்டித்துள்ளார்,

    இந்த விவகாரத்துக்கு நாஸ்காம் அமைப்பும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் கர்நாடக ஜிஎஸ்டி அதிகாரிகள் சர்ச்சைக்குரிய அந்த pre-show cause நோட்டீஸை திரும்பப்பெற்றுள்ளனர். இது குறித்த மேலதிக விளக்கத்தை விரைவில் ஜிஎஸ்டி நிர்வாகம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • முடா முறைகேடு தொடர்பாக சித்தராமையா பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்.
    • விசாரணை நடத்த ஏன் உத்தரவிடக்கூடாது? பதில் அளிக்கும்படி கவர்னர் நோட்டீஸ்.

    மைசூரு நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் (MUDA) மனைகள் ஒதுக்கியது தொடர்பான மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என அம்மாநில பாஜக-வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இருந்த போதிலும் சித்தராமையா குற்றச்சாட்டை மறுத்து வருகிறார்.

    இதற்கிடையே முடா முறைகேடு தொடர்பாக உங்கள் மீது விசாரணை நடத்த ஏன் உத்தரவிடக் கூடாது?. இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி கர்நாடக மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    இந்த நோட்டீஸ் தொடர்பாக ஆலோசனை நடத்த மந்திரிசபை கூட்டம் (Cabinet meeting) இன்று கூடியது. ஆனால் இந்த கூட்டத்தில் கர்நாடக மாநில முதல் சித்தராமையா கலந்து கொள்ளவில்லை.

    துணை முதல்வரான டி.கே. சிவக்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    ஆளுநர் நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாக ஆலோசிக்க திட்டமிட்டது. மந்திரிகள் சித்தராமையா (முதல்வர்) இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தனர். இதனால் மந்திரிசபை கூட்டம் சித்தராமையா இல்லாமல் நடைபெற்றது என கர்நாடக மாநில மந்திரி பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.

    ஆளுநர் அனுப்பிய நோட்டீஸ் தொடர்பான ஆலோசனையில் முதலமைச்சர் இருக்கக் கூடாது என்பதால், கலந்து கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுகொண்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.

    ×